ஆவியின் கனியாகிய விசுவாசம்!

“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்” (கலா. 5:22).

விசுவாசத்தினாலே, நீங்கள் ஆவியின் கனியாகிய விசுவாசத்தை ஏராளமாக பெற்றுக்கொள்ளலாம். கர்த்தர் சொல்லுகிறார், ஒன்பது ஆவியின் வரங்களையும் கூடவே, ஒன்பது ஆவியின் கனிகளைக் குறித்தும் கலா. 5:22-ல் கூறுகிறார். இந்த விசுவாசம் என்ன செய்கிறது? உங்கள் கண்களை நம்பிக்கையோடு, கிறிஸ்துவினண்டை உயர்த்துகிறது. உலகப்பிரகாரமான காரியங்களை பெறாமல், கர்த்தரிடத்திலிருந்து வருகிற மகிமைக்கு நேராக என்றும் நடத்துகிறது. “எனக்கு நோயோ, பெலவீனமோ வராதபடி கர்த்தர் காத்துக்கொள்வார்,” என்ற நம்பிக்கையை உங்களுக்குள் கொண்டு வருகிறது.

சக்கரவர்த்தி நெப்போலியனுக்கு முன்பாக, வாலிபன் ஒருவன் நிறுத்தப் பட்டான். அவன் மேல் எழுந்த குற்றச்சாட்டு என்ன? “ஐயா, இந்த இராணுவ வீரன், எதற்கும் பயந்து சாகிறான். இவனை வைத்துக்கொண்டு எப்படி யுத்தம் செய்வது? இவன் மற்றவர்களையும் கோழையாக்கிவிடுவானே” என்று தளபதி குற்றஞ் சாட்டினார். நெப்போலியன், அவனை அன்போடு நோக்கிப் பார்த்து, “தம்பி, பயப் படாதே. நான் உனக்கு ஒரு தண்டனையும் கொடுக்கப்போவதில்லை. இறைவனுடைய சித்தமில்லாமல், உன் வாழ்க்கையில் ஒன்றும் நடப்பதில்லை. எவ்வளவோ பெரிய யுத்தம் நீ செய்தாலும், உன் உயிரை யாரும் பறிக்க முடியாது” என்றார்.

அதற்கு அவர் ஒரு உதாரணத்தை காண்பித்தார். நெப்போலியன் தன்னுடைய குதிரையின் மேல் ஏறி, வேகமாக ஓடும்போது, அந்த குதிரையின் கால், ஒரு வெடிகுண்டின்மேல் மோதும்படி செய்தார். வெடிகுண்டு மகா சத்தத்துடன் வெடித்து, குதிரை சுக்கு நூறாக கிழித்து எறியப்பட்டது. ஆனால் நெப்போலியனோ, அந்த வெடிகுண்டு வெடித்த இடத்திற்கு அருகே நின்றுகொண்டிருந்தார். சிலர் இதை “மனோ திடன்” என்பார்கள். நாமோ அதை, “விசுவாசம்” என்று அழைக் கிறோம். ஆவியின் வரங்களிலே ஒன்று விசுவாச வரமாகும். ஆனால் ஆவியின் கனிகளிலே, “விசுவாசம்” என்பது “தேவன்பேரில் வைக்கிற நம்பிக்கையாகும்.”

ஆவியின் கனியை, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் கொண்டு வருகிறார். உங்கள் உள்ளத்தில் மிகப்பெரிய தைரியமும், நம்பிக்கையும், ஏற்படச் செய்கிறார். அந்த விசுவாசத்தால் நீங்கள், சாதாரணமாய் உங்களால் செய்து முடிக்க முடியாத அரிய பெரிய காரியங்களை நீங்கள் செய்வீர்கள்.

போதகர் பால் யாங்கி சோ சொல்லுகிறார், “உலகத்தில் மிகப் பெரிய ஆலயத்தை, கர்த்தர் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் கொண்டு வந்தது மட்டுமல்ல, விசுவாசத்தையும் கர்த்தர் தந்தார். அந்த விசுவாசத்தோடு, கர்த்தரை சார்ந்து கொண் டேன். கர்த்தர் எனக்கு ஆலயத்தின் வரைபடத்தைக் கொடுத்தார். அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்கிற, திட்டத்தையும் கொடுத்தார். ஆவியானவர் தந்த கனியினால், அந்த விசுவாசத்தை சுதந்தரித்துக்கொண்டு, மிகப் பெரிய ஆலயத்தை கட்டி முடிக்கலானேன்.”

இயேசு கிறிஸ்து, பரலோகத்துக்குப் போவதற்கு முன்பாக, ஆவியின் கனியாகிய “விசுவாசத்தை,” தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்துச் சென்றார். “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (யோவா. 14:1,2). தேவபிள்ளைகளே, கர்த்தரில் சார்ந்திருக்கும்போது, இந்த விசுவாச கனியைப் பெற்றுக்கொள்வீர்கள்.

நினைவிற்கு:- “நீ மரணபரியந்தம் உண்மையாயிரு. அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” (வெளி. 2:10).