விசுவாசமும், ஞானஸ்நானமும் !

“விசுவாசமுள்ளவனாகி, ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசி யாதவனோ, ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்” (மாற். 16:16).

ஞானஸ்நானம் பெறுவதற்குகூட, விசுவாசம் மிகவும் அவசியம். விசுவாசமில்லாத காலத்தில், அதாவது குழந்தை பருவத்தில் எடுத்த ஞானஸ்நானத்தை, வேதம் அங்கீகரிப்பதில்லை. இயேசு எனக்காக மரித்தார், எனக்காக அடக்கம்பண்ணப் பட்டார், எனக்காக உயிர்த்தெழுந்தார் என்று முழு இருதயத்தோடு விசுவாசிக் கிறவனே ஞானஸ்நானம் பெறுவதற்குத் தகுதியுள்ளவனாகிறான்.

யோவான்ஸ்நானனை, ஞானஸ்நானம் கொடுப்பதற்காகவே, ஆண்டவர் எழுப்பினார். அவர் மனந்திரும்புதலுக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தார். பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தார். பழைய பாவ வாழ்க்கைக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, இனி பரிசுத்தமாய் வாழ விரும்புகிறேன் என்று தீர்மானித்தவர்களுக்கு, ஞானஸ்நானம் கொடுத்தார்.

இயேசு கிறிஸ்துவும்கூட, அவரிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு, யோர்தானுக்கு கடந்து வந்தார். ஞானஸ்நானம் வெறும் மனந்திரும்புதலுக்கு மாத்திர மல்ல, தேவனுடைய நீதியை நிறைவேற்றுவதற்கும், தேவையாயிருக்கிறது என்று இயேசு சுட்டிக்காண்பித்தார் (மத். 3:15). “நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார்” (1 பேதுரு 2:21).

ஞானஸ்நானத்தினால் ஒருபக்கம் பாவம் உங்களை விட்டு விலகுகிறது. உங்களுடைய சுய நீதியாகிய கந்தலான வஸ்திரங்களை களைந்து போடுகிறீர்கள். மறுபக்கம், தேவனுடைய நீதியை நிறைவேற்றுகிறீர்கள். “உங்களில் கிறிஸ்துவுக் குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே” (கலா. 3:27).

குஷ்டரோகியாயிருந்த நாகமான், எலிசா சொன்ன வார்த்தைகளை விசுவாசித்து, யோர்தான் நதியிலே, ஏழு தரம் மூழ்கி எழும்பினார். அப்பொழுது குஷ்டரோகத்தால், அழுகிய புண்கள் சுகமானது. இரண்டாவது, குழந்தைகளுக்கு ஒப்பான புது சரீரத்தை அவர் பெற்றுக்கொண்டார். விசுவாசித்து, நீங்கள் ஞானஸ்நானம் பெறும்போது, பாவ குஷ்டம், உங்களை விட்டு நீங்குகிறது. கிறிஸ்துவின், மென்மையான சரீரம் உங்களோடு இணைக்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவினுடைய, பாடு மரணம், உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, ஞானஸ்நானம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாய் விளங்கியது. ஞானஸ்நானம் பெற விரும்புகிறவர்கள். தங்களை கிறிஸ்துவின் சிலுவை மரணத்தோடும், அடக்கம் பண்ணுதலோடும், உயிர்த்தெழுதலோடும் இணைத்துக்கொள்ள வேண்டும். “இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” என்ற அனுபவத்துக்குள் வர வேண்டும் (கலா. 2:20).

“பிதாவின் மகிமையினாலே, கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட, அடக்கம் பண்ணப்பட்டோம். ஆதலால், அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப் பட்டிருப்போம்” (ரோம. 6:4,5).

நினைவிற்கு:- “ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (யோவா. 3:5).