ஆபிரகாமின் விசுவாசம்!

“விசுவாசத்தினாலே ஆபிரகாம், தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்” (எபி. 11:8).

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விசுவாசமுண்டு. அது மற்றவர்களுடைய விசுவாசத்தினின்று வேறுபட்டது. ஆபிரகாமின் விசுவாசம் என்ன? “கர்த்தர் என்னை நடத்துவார்,” என்கிற விசுவாசம். கர்த்தரை நூற்றுக்கு நூறு, சார்ந்துகொள்ளும் விசுவாசம். ஆகவே, அவர் தன் தேசத்தையும், தன் ஜனங்களையும், தன் தகப்பன் வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, கர்த்தர் காண்பிக்கிற தேசத்துக்குப் புறப்பட்டுப் போனார்.

1985-ம் வருடம், ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி, என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள். எங்களுக்கு திருமணமாகி, சரியாக பத்து வருடங்கள் நிறைவேறினது. அன்று, என்னுடைய நான்காவது மகன் பிறந்தான். அதே நாளில்தான், என்னுடைய வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு, நான் முழு நேரமாய் கர்த்தருடைய ஊழியத்திற்கு இறங்கி வந்தேன்.

எனக்கிருந்த விசுவாசமும், “கர்த்தர் நடத்துவார்” என்பதாகவேயிருந்தது. அண்ணன், அக்கா, உறவினர்கள், யாரையும் சார்ந்துகொள்ளாமல், கர்த்தரையே முழுவதுமாய் நம்பி, ஊழியத்திற்கு இறங்கி வந்தேன். அது சாதாரணமானது அல்ல. ஆனால் கர்த்தரோ அந்த தீர்மானத்தை கனப்படுத்தினார். என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவோ எதிர்ப்புகள், போராட்டங்கள், பிரச்சனைகள் வந்தாலும், ஆபிரகாமின் தேவன், என்னை கைவிடவில்லை. மிக மேன்மையாக நடத்தினார்.

ஆபிரகாமின் விசுவாசம், இன்னும் மேலானது. தான் போகும் இடம் இன்னது என்று அறியாமல் தன் ஆடு, மாடுகளோடு, மந்தைகளோடு, கூடாரத்தை பெயர்த்து போய்க்கொண்டேயிருப்பது எவ்வளவு கடினமானது! எத்தனையோ தேசங்களையும், ராஜாக்களையும் கடந்துச் செல்ல வேண்டும். சட்ட ஒழுங்குகள் ஒன்றுமில்லாத காலமாயிருந்தபடியால், ஆபிரகாமின் மனைவியை, தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளக்கூடிய காலம் அது.

ஆனால் ஆபிரகாமின் விசுவாசம், அவரை அழைத்தவர் உண்மையுள்ளவரென்று நம்பி, கர்த்தருடைய கரம்பிடித்து நடந்தார். இந்தத் தேவன், என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் என்னுடைய தேவன். மரண பரியந்தம் என்னை நடத்துவார். ஆபிரகாம், கர்த்தர்மேல் அவ்வளவு விசுவாசம் வைத்ததினால், “ஆபிரகாமின் தேவன்,” என்று தன்னை அழைத்துக்கொள்ள, அவர் வெட்கப்படவில்லை. ஆபிரகாம், விசுவாசிக்கிறவர்களுக்கு தகப்பனானார். ஆபிரகாம் தான் வாக்குத்தத்த மாய் பெறப்போகிற, கானானை, தூரத்தில் கண்டு நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளுமாய் எண்ணினார் (எபி. 11:13).

“தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப் போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான, பரமதேசத்தையே விரும்பினார்கள்” (எபி. 11:15,16).

தேவபிள்ளைகளே, நீங்கள் ஆபிரகாமின் சந்ததியிலும், விசுவாச பரம்பரையிலே நின்று கொண்டிருக்கிறீர்கள். ஆபிரகாமின் குமாரனும், ஆபிரகாமின் தேவனுமாய் இருக்கிற, கிறிஸ்துவை தொழுதுகொள்ளுகிறீர்கள். உங்களுக்குள்ளே ஆபிரகாமின் விசுவாசம் நிச்சயமாக தேவை.

நினைவிற்கு:- “விசுவாசத்தினாலே, அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும், யாக்கோபோடும், கூடாரங்களிலே குடியிருந்தான்” (எபி. 11:9).