விசுவாசத்தினாலே, நோவா!

“விசுவாசத்தினாலே, நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்” (எபி. 11:7).

நோவாவுக்கு ஒரு விசேஷ விசுவாசமிருந்தது. அந்த விசுவாசத்தினாலே, அவர் தேவ எச்சரிப்பைப் பெற்றார். பயபக்தியுள்ளவரானார். அந்த விசுவாசத்தினாலே, குடும்பத்தை இரட்சிப்பதற்கு, பேழையை உண்டுபண்ணினார். விசுவாசத்தினால் உண்டாகும், நீதிக்கு சுதந்தரவாளியானார்.

உலகத்தில் பாவம் பெருகும்போது, ஜனங்கள் தேவ கோபாக்கினைக்குள் செல்லுகிறார்கள். அதற்கு தப்ப வேண்டுமென்றால், நீதிமானாய், உத்தமனாய் விளங்கவேண்டும். நோவா, தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே, நீதிமானும், உத்தமனுமாயிருந்தான். நோவா தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தான். பூமியானது தேவனுக்கு முன்பாக சீர் கெட்டதாயிருந்தது. பூமி கொடுமையால் நிறைந்திருந்தது. மாம்சமான யாவரும், பூமியின்மேல், தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

“கர்த்தர்: என் ஆவி, என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே. அவன் இருக்கப்போகிற நாட்கள், நூற்றிருபது வருஷம் என்றார். தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ் தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது” (ஆதி. 6:3,6).

வேதத்தில் மொத்தம், மூன்று பேழைகளைக் குறித்து, நாம் அறியலாம். முதல் பேழை, குழந்தையாயிருந்த மோசேக்காக, அவனை பாதுகாப்பதற்காக, பெற்றோர் நாணல் புற்களினால் செய்யப்பட்ட பேழை. அதிலே மோசே, ஒருவருக்குத்தான் இடமிருந்தது. இரண்டாவதாக, நோவா தன் குடும்பத்தைப் பாதுகாக்கவும், ஜீவ ராசிகள் ஒன்றும் அழியாதபடி நிலைநிறுத்தும்படியாகவும், செய்த பேழை. மனுஷரில் அவரோடுகூட, அவருடைய மனைவி, மூன்று பிள்ளைகள், மருமக்கள்மாராக மொத்தம், எட்டு பேருக்கு, அதில் இடம் கிடைத்தது.

இன்றைக்கும், ஒரு பேழை, நமக்காக திறக்கப்பட்டதாயிருக்கிறது. அது கிறிஸ்துவின் மாம்சத்தாலும், இரத்தத்தாலுமான பேழை. அவருடைய விலா குத்தி கிழிக்கப்பட்டபோது, புதிதும், ஜீவனுமான ஒரு வாசல், நமக்காகத் திறக்கப் பட்டது. இன்று, அதில் ஒருவருக்கு மட்டுமல்ல, எட்டு பேருக்கு மட்டுமல்ல, கிறிஸ்துவண்டை வரும், ஒவ்வொருவருக்கும் இடமுண்டு.

இன்றைக்கு, காலத்தின் முடிவிலே, அந்திக்கிறிஸ்துவினுடைய வருகையை உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற வேளையிலே, நாம் வந்திருக்கிறோம். மிக விரைவாக, கர்த்தருடைய ஏழு கோபாக்கினை கலசங்களும், பூமியின்மேல் ஊற்றப்படும். இந்த கிருபையின் நாட்களிலே, “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37) என்று, கர்த்தர் உங்களை அன்போடு அழைக்கிறார். ஜீவனுள்ள அந்த பேழையின் கதவு, இன்றைக்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. கர்த்தரோ, இரட்சிப்பின் வாசல்கள், கிருபையின் வாசல்களுக்குள்ளே வாருங்கள் என்று, மனுக்குலத்தை அழைத்த வண்ணமாயிருக்கிறார். விசுவாசத்தோடு, பேழைக்குள் காணப்படுவீர்களா?

நோவாவைப்போல, உங்கள் குடும்பத்தைப் பற்றி, உங்களுக்கு அக்கறையுண்டா? உங்கள் பிள்ளைகள், சகோதரர்கள் இரட்சிக்கப்பட்டு பேழைக்குள் இருக்கிறார்களா? கர்த்தருடைய வருகையிலே குடும்பமாக, காணப்படுவீர்களா?

நினைவிற்கு:- “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப். 16:31).