பலவீனத்தில் பலன்

“பலவீனத்தில் பலன்கொண்டார்கள். யுத்தத்தில் வல்லவர்களானார்கள். அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்” (எபி. 11:34).

ஒரு பேச்சுப் போட்டியில், ஒரு பெண் சாமர்த்தியமாக சொன்னாள். “ஆண்கள் பெரிய பலவான்களாய் மீசையோடும், உயரமாகவும், குண்டாகவும் இருந்தாலும், பெண்களாகிய நாங்களோ, அவர்களை விட பலவான்கள். ஏன் தெரியுமா? ஆதாமை கடவுள் களிமண்ணிலிருந்து உண்டாக்கினார். பானை உடைந்துபோவதைப்போல, உடைந்து போவார்கள். ஆனால் பெண்களாகிய எங்களை, எலும்பிலிருந்து உண்டாக்கினார். மண்ணை விட, எலும்புதான் உறுதியானது?” என்றாள்.

பல வேளைகளில், பெண்கள் மிகுந்த மனோபலம் மிகுந்தவர்களாயிருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் பிரச்சனை, போராட்டங்கள், கஷ்டங்கள் வரும்போது, மனமுடைந்து, தைரியத்தை இழந்துவிடுவார்கள். ஆனால் பெண்களோ, ஆத்துமாவில் பெலன்கொண்டு, வெற்றிச் சிறப்பார்கள்.

விசுவாசம் என்பது என்ன? தேவனுடைய பெலத்தை, தங்கள்மேல் இறக்கக்கூடிய தெய்வீக வல்லமையாயிருக்கிறது. விசுவாச வீரர்கள் தங்களுடைய பெலவீனத்தை நினைக்காமல், தேவ பெலத்தில் சார்ந்துகொண்டு, ஜெயங்கொண்டவர்களாய் ஜீவித்தார்கள். எங்களுக்குள் கிறிஸ்து வாழ்கிறார். எங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். ஆகவே, நாங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டியதில்லை என்று முழங்கிச் சொன்னார்கள். கர்த்தர் யாரை தெரிந்துகொள்ளுகிறார்? 1 கொரி. 1:27-ஐ வாசித்துப் பாருங்கள், பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி, தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

உங்களுக்கு ஒரு பெலவீனம் இருக்குமானால், அதை எண்ணி விசுவாசத்தில் மேன்மைப் பாராட்டுவீர்களாக. அப். பவுல், தன்னுடைய அனுபவத்தை எழுதுகிறார், “கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன். அந்தபடி நான் பலவீனமாய் இருக்கும்போதே, பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2 கொரி. 12:9,10). அவர் தைரியம் கொண்டு சொன்னார்,”என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13).

கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களை செய்து, தன்னுடைய ராஜ்யத்தைப் விரிவுப்படுத்தின தாவீது, கர்த்தருடைய பெலனை, தன்னுடைய பெலனாகக் கொண்டார். “என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும், என்னை விடுவித்தார்” (சங். 18:1,17).

தேவபிள்ளைகளே, இது, நீங்கள் விசுவாசத்தினாலே, கர்த்தருக்குள் பெலப் பட வேண்டிய நேரம். உங்கள் பெலனை, அற்பமாய் எண்ணிவிடாமல், கர்த்தருக் குள் ஸ்திரப்படுத்துங்கள். விசுவாசத்தினாலே, நீங்கள் மலைகளைப் பெயர்த்து, சமுத்திரத்தில் தள்ள வேண்டும். விசுவாசத்தினாலே, காட்டத்தி மரத்தை வேரோடு பிடுங்கி, சமுத்திரத்தில் நடவேண்டும். ஆகவே, தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிற விசுவாசத்தை தட்டியெழுப்பி, அனல்மூட்டி எழுப்பி விடுங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு, கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கிறீர்களோ, அவ்வளவுக் கவ்வளவு உங்கள் விசுவாசம் பலப்படும். விசுவாசிகளின் ஐக்கியத்தில், உங்கள் விசுவாசம் பலப்படட்டும். வேதத்தை வாசித்து, உரிமை பாராட்டும்போது, உங்கள் விசுவாசம் பெலன்கொள்ளும்.

நினைவிற்கு:- “பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட,தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம்,குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்” (சங். 8:2).