பட்டயக்கருக்கு

“பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள். பலவீனத்தில் பலன்கொண்டார்கள். யுத்தத்தில் வல்லவர்களானார்கள்” (எபி. 11:34).

“வாயுள்ள பிள்ளை பிழைக்கும்” என்பது பழமொழி. “விசுவாசமுள்ள பிள்ளை, கர்த்தரால் தப்புவிக்கப்படும்” என்பது புதுமொழி. அந்நியருடைய பட்டயமானாலும் சரி, அல்லது நியாயத்தீர்ப்பின் பட்டயமானாலும்சரி, யுத்தத்தில் எதிரிகளின் பட்டயமானாலும் சரி, ஆவியின் பட்டயம், உங்களை தப்புவிக்கும்.

ஒரு முறை இஸ்ரவேலருக்கு விரோதமாக, பெலிஸ்தியர் படையெடுத்து வந்தார்கள். அவர்கள் பெரிய பட்டயத்தோடும், சர்வாயுதவர்க்கங்களோடும் இருந்த, யுத்த வீரனான கோலியாத் என்ற பெலிஸ்தியனை முன் நிறுத்தினார்கள். அவன் ராட்ஷச பிறவியைச் சேர்ந்தவன். அவன் ஒன்பது அடி உயரமுள்ளவன் (ஆறு முழ உயரம்). அவன் இஸ்ரவேல் படையைப் பார்த்து, ஏளனமும், கிண்டலும் செய்து, உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள். அவன் நேருக்கு நேர் என்னோடுகூட யுத்தம் செய்யட்டும் என்று அழைத்தான்.

கர்த்தர்மேல் வைத்த விசுவாசத்தினால், தாவீது, “கர்த்தர் என்னை விடுவிப்பார்” என்று முழங்கிச் சொன்னது மட்டுமல்ல, கல்லோடும், கவணோடும் கோலியாத்தின் பட்டயத்திற்கு, எதிர்கொண்டுப் போனார். கூழாங்கல் கோலியாத்தின் நெற்றியைத் தாக்கி விழச் செய்தபோது, தாவீது போய், கோலியாத்தின் பட்டயத்தினாலே, அவனுடைய தலையை வெட்டி வீழ்த்தினார். ஜெயித்தார்.

அந்த யுத்தத்திற்குப் பிறகு, இன்னொரு முறை தாவீதினிடத்தில் பட்டயம் ஒன்றும் இல்லாதிருந்தபோது, அகிமெலேக்கு என்ற ஆசாரியன், தாவீதைப் பார்த்து, நீர் ஏலா பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தியனாகிய கோலியாத்தின் பட்டயம் இங்கு இருக்கிறது. எடுத்துக்கொண்டுபோம்; அப்பொழுது தாவீது, அதற்கு நிகரில்லை. அதை எனக்குத் தாரும் என்றான் (1 சாமு. 21:9).

இன்றைக்கு, நிகரில்லாத பட்டயத்தை கர்த்தர், உங்களுடைய கையிலே கொடுத்திருக்கிறார். அந்தப் பட்டயம் இருபுறமும் கருக்குள்ள, வேதப் புத்தகமே. “தேவனுடைய வார்த்தையானது, ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இரு புறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபி. 4:12). கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற அந்த வார்த்தைகளையும், வாக்குத்தத் தங்களையும் பட்டயமாய் எடுத்துக்கொள்ளுங்கள். அதுதான் வனாந்தரத்திலே சாத்தானை ஜெயிக்க, இயேசுகிறிஸ்து பயன்படுத்தின “வேத வசனம்” என்கிற பட்டயமாகும். அந்தப் பட்டயத்துக்கு முன்பாக, எந்த எதிரிகளாலும் உங்களுக்கு எதிர்த்து நிற்க முடியாது.

பலரும் உங்களுக்கு எதிராக எழுந்து வரலாம். பட்டயத்தைப்போல வெட்டித் தள்ளுகிற, நாவையுடையவர்களாயிருக்கலாம். உங்களை மனம் நொந்துபோகும்படி வார்த்தைகளினால் புண்படுத்தலாம். பயப்படாதிருங்கள். கோலியாத்தின் பட்டயக் கருக்குக்கு தப்புவித்த ஆண்டவர், நிச்சயமாகவே உங்களை தப்புவிப்பார். எதிரிகளின் பட்டயம் எவ்வளவு பெரியதாயிருந்தாலும், கருக்குள்ளதாயிருந்தாலும் விசுவாசம் என்னும் கேடகத்தை ஊடுருவிச் செல்லவே முடியாது. நீங்கள் ஜெயங்கொள்வீர்கள் (எபேசி. 6:16).

நினைவிற்கு:- “அவர் (இயேசு கிறிஸ்து) வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது. அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது” (வெளி. 1:16).