அக்கினியை அவித்தார்கள்

“அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள். பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள். பலவீனத்தில் பலன்கொண்டார்கள்” (எபி. 11:34).

அக்கினியின் உக்கிரத்தை, விசுவாசத்தினால் அவித்துப்போடுகிற வல்லமை, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவுக்கு இருந்தது. அந்த தெய்வீக விசுவாசத்தின் மேல் அவர்கள் சார்ந்துகொண்டு, ராஜாவின் கட்டளையை மீறினார்கள். ராஜா நிறுத்தின, பொற்சிலையை வணங்க மறுத்தார்கள்.

அவர்களுக்குள், பெரிய விசுவாசமிருந்தபடியால், ராஜாவுக்கு முன்பாக தைரியமாக, தங்கள் தேவனைக் குறித்து விசுவாச அறிக்கை செய்தார்கள். “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன், எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்” என்று முழங்கினார்கள் (தானி. 3:17). சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, மழுப்பி, பூசி மெழுகிக் கொண்டிருக்கவில்லை. தங்களை விடுவித்துக்கொள்ள, எந்த நய வசனிப்பும் பேசவில்லை. அக்கினிச் சூளையைக் குறித்துக் கொஞ்சமும் அவர்கள் பயப்படவுமில்லை. தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்காக வைராக்கியமாக நின்றால், அவரும் உங்களுக்காக வைராக்கியமாய் நிற்பார்.

இந்த எபிரெய வாலிபரின் வார்த்தைகள், ராஜாவுக்கு கடுங்கோபத்தை வருவித்தது. அக்கினிச் சூளை ஏழு மடங்கு சூடாக்கப்பட்டது. ராணுவத்தின் பலசாலியான புருஷர்கள், இந்த வாலிபர்களை இறுக கட்டி, அக்கினிச் சூளையிலே போட்டார்கள். என்ன நடந்தது? இந்த எபிரெய வாலிபர்களுக்குள்ளே, விசுவாசம் வல்லமையாய் செயல்பட்டதால், அவர்கள் அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள். தேவகுமாரன் நான்காவது ஆளாக, அவர்களோடு இணைந்து உலாவினார். அவர் விசுவாசத்தை கனப்படுத்துகிறவர். விசுவாசத்தினால் உலகங்களை உருவாக்கினவர் (எபி. 11:3). அவருடைய பிள்ளைகளின் விசுவாசத்தை, ஆரம்பித்து வைக்கிறவர். மட்டுமல்ல, வெற்றியோடு, முடிய உதவிச் செய்கிறவர் (எபி. 12:1).

“அக்கினிச் சூளை” என்பது, தாங்க முடியாத பாடுகளுக்கும், வேதனைகளுக்கும் அடையாளமாகும். ஆனால் விசுவாசம் உங்களுக்கிருந்தால், அது உங்களை சேதப்படுத்த முடியாது. கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது, நான் உன்னோடு இருப்பேன். நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை. நீ அக்கினியில் நடக்கும்போது, வேகாதிருப்பாய். அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது” (ஏசா. 43:2).

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்திருந்தால், அதை உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். வானமும், பூமியும் ஒழிந்து போனாலும், கர்த்தருடைய வாக்குத்தத்தம், ஒழிந்து போவதில்லை. அது நிச்சயமாகவே நிறைவேறும். “வாக்குத்தத்தம்பண்ணினவர், உண்மையுள்ளவராயிருக்கிறாரே” (எபி. 10:23). கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள், உங்களுக்கு விசுவாசத்தைக் கொண்டு வரும்.

அப். பவுல், தன்னுடைய ஆவிக்குரிய குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு, திட்டமாய் எழுதினார். “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை, அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று, நிச்சயித்துமிருக்கிறேன்” (2 தீமோத். 1:12). தேவபிள்ளைகளே, அக்கினிபோன்ற சோதனைகளை மேற்கொள்ள, கர்த்தர் உங்களுக்கு விசுவாசத்தினால் உதவிச் செய்வார்.

நினைவிற்கு:- “பொய் சொல்ல தேவன்,ஒரு மனிதன் அல்ல. மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல. அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா?” (எண். 23:19).