வாய்களை அடைத்தார்கள்

“விசுவாசத்தினாலே, வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள். சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள். அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள்” (எபி. 11:33,34).

ஒரு சகோதரன் எழுதினார், “ஐயா, என் சகோதரர்கள் மத்தியிலே, கர்த்தர் என்னை மட்டுமே இரட்சித்திருக்கிறார். நான் கிறிஸ்தவனாகிவிட்டேன் என்று அறிந்து, அவர்கள் என்மேல் மூர்க்க வெறிகொண்டிருக்கிறார்கள். சிங்கங்களின் மத்தியிலிருப்பதைப்போல உணருகிறேன்” என்றார்.

திருமணமாகி, கணவன் வீட்டுக்குச் சென்ற ஒரு இளம் பெண், “ஐயா, என் பெற்றோரை விட்டுவிட்டு, என் கணவனின் வீட்டில் குடிபுகுந்தேன். ஆனால் என் கணவனோடு பிறந்த சகோதரிகள் ஏழு பேரும், என் மாமியாரும், என்னால் தாங்கிக்கொள்ளக்கூடாத அளவுக்கு, கொடுமைப்படுத்துகிறார்கள். என் கணவனோடு பேசவும், அவர்கள் அனுமதிப்பதில்லை. சிங்கங்களின் நடுவில், எத்தனை காலம், வாழுவேனோ?” என்று கண்ணீரோடு எழுதினார்.

வேதம் சொல்லுகிறது, விசுவாசத்தினாலே, தேவ ஜனங்கள் சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள். தாவீதின் ஆட்டுக்குட்டிக்கு, விரோதமாய் வந்த சிங்கத்தை, தனது கோலினாலும், தடியினாலும், விசுவாசத்தினாலும் அடித்தே கொன்றார். சிம்சோனுக்கு விரோதமாக ஒரு பாலசிங்கம் வந்தபோது, விசுவாசத் தினால் அவர் அதன் வாயை கிழித்தே கொன்றார். கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? “சிங்கத்தின்மேலும், விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய்” (சங். 91:13).

தேவபிள்ளைகளே, தானியேலின் புத்தகத்தை, கருத்தோடு வாசித்துப்பாருங்கள். அவர் இஸ்ரவேல் தேசத்திலுள்ள, எருசலேமைச் சேர்ந்தவர். பாபிலோன், அவருக்கு விரோதமாயிருந்த ஒரு தேசம். தானியேலுக்கு உன்னத பதவி கிடைத்தபோது, அங்குள்ள எல்லா பிரதானிகளும், ஜோசியர்களும், மந்திரவாதிகளும், தானியேலை பகைத்தார்கள். எப்படியாவது கீழே தள்ளிவிட வேண்டுமென்று சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் குள்ள நரியைப் பார்க்கிலும் தந்திரமானவர்கள். சிங்கத்தைப் போல பலவான்கள். தானியேலை சிங்கக்கெபியிலே தள்ளுவதற்கு, அவர்கள் ஒன்றுகூடி, ஆலோசனை செய்தார்கள். ஆனாலும் தானியேலுக்குள் விசேஷித்த விசுவாசமிருந்தது.

இந்த சிங்கங்கள், “ஒருபோதும் எனக்கு தீங்கு செய்யவே செய்யாது. என்னை சிங்கங்களின் வாய்களுக்கு கர்த்தர் ஒப்புக்கொடுக்க மாட்டார். சிங்கங்களின் வாய்களைக் கட்டுகிறேன். யூதாவின் ராஜ சிங்கம் என்னோடிருக்கிறபடியால், இந்த உலக சிங்கங்கள் என்னை சேதப்படுத்த முடியாது,” என்று விசுவாச அறிக்கை செய்திருக்கக்கூடும். சிங்கக்கெபியில், தானியேலை சுற்றி நின்ற சிங்கங்கள், பசியோடிருந்த சிங்கங்கள். உணவு கிடைக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருந்த சிங்கங்கள். தாவீதைப்போல சிங்கத்தை அடித்து, அவர் கொல்லவில்லை. சிம்சோனைப் போல வாயை கிழித்து மேற்கொள்ளவில்லை. ஆனால் அத்தனை சிங்கங்களின் எல்லா வாய்களையும், ஒரே நேரத்தில் அவர் அடைத்துப் போட்டார்.

தேவபிள்ளைகளே, உங்களை சூழ, இனத்தவர்களாகிய சிங்கங்களிருக்கலாம். விரோதிகளான சிங்கங்களிருக்கலாம். நல்லவர்கள்போல நடித்து பின்னால் குழி வெட்டுகிற சிங்கங்களிருக்கலாம். கர்த்தர்மேல் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். சிங்கங்கள் உங்களை சேதப்படுத்தமாட்டாது.

நினைவிற்கு:- “தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா?” (தானி. 6:20).