வக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்!

“விசுவாசத்தினாலே, வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள். சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள். அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள்” (எபி. 11:33,34).

கர்த்தரிடமிருந்து வாக்குத்தத்தங்களைப் பெறுவதற்குகூட, உங்களுக்கு விசுவாசம் தேவை. வாக்குத்தத்தத்தை, நீங்கள் மனுஷரிடத்திலிருந்து அல்ல, தேவாதி தேவனிடத்திலிருந்து, வேதத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளுகிறீர்கள். அது வாக்கு மாறாத தேவனுடைய உறுதிமொழி.

“மோட்சப் பிரயாணம்,” என்ற பிரசித்திப் பெற்ற நூலை எழுதின, ஜாண் பனியன் என்ற பக்தன், வேதத்தில், முப்பதாயிரம் வாக்குத்தத்தங்களுக்கு மேலாக, இருப்பதைக் கண்டார். இத்தனை ஏராளம் வாக்குத்தத்தங்கள் இருப்பினும்கூட, கர்த்தர் இவை ஒவ்வொன்றையும், நிறைவேற்றித்தர உண்மையுள்ளவர் என்றார்.

தேவன் மனிதனுக்கு கொடுத்த, எல்லா வாக்குத்தத்தங்களும், தேவனாகவே வலிய முன்வந்து, தமது இரக்கத்தினாலும், கிருபையினாலும், கொடுத்ததாகும். வாக்குத்தத்தங்களைப் பெற, நம்முடைய பக்தியையோ, சன்மார்க்க நெறியையோ, கர்த்தர் எதிர்பார்த்து அல்ல, அவருடைய அளவற்ற கிருபையினால், இலவசமாக அந்த வாக்குத்தத்தங்களைத் தந்தருளுகிறார். “தேவனுடைய வாக்குத்தத்தங் களெல்லாம், இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே” (2 கொரி. 1:20).

அதே நேரத்தில், நாம் உபவாசித்து, ஜெபித்து மன்றாடி, யாக்கோபைப்போல விசுவாசத்தோடு பெற்றுக்கொள்ளுகிற, வாக்குத்தத்தங்களுமுண்டு. ஆகவே தான் அப். பவுல், “விசுவாசத்தினாலே வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்,” என்று எழுதுகிறார். ஆம், அதற்கு விசுவாசம் அவசியம். தன் அண்ணன் நானூறு பேரோடு, தனக்கு எதிர்கொண்டு வருகிறார், என்று யாக்கோபு அறிந்தபோது, பயந்தார். அண்ணனை எதிர்கொள்ள அவருக்குத் திராணியில்லை. முன்பு, தான் அண்ணனை ஏமாற்றினதினால், மனச்சாட்சியும் வாதித்துக் கொண்டிருந்தது.

ஆகவே, யாக்கோபு தன்னுடைய நான்கு மனைவிகளையும், பன்னிரண்டு பிள்ளைகளையும், ஒரு பக்கத்திலே வைத்துவிட்டு, யாப்போக்கு என்ற நதிக் கரையிலே தனியாய் ஜெபிக்க ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு புருஷன் யாக்கோபோடு பொழுது விடியுமட்டும், போராடினதைக் கண்டார்.

விசுவாசத்தினாலே, யாக்கோபு அவரை கர்த்தர் என்றும் கர்த்தர் தன்னை ஆசீர்வதிப்பார். தன் அண்ணன் கைக்கு விடுதலையாக்கி, தன்னைப் பாதுகாப்பார் என்றும் உணர்ந்தார். ஆகவே தான் யாக்கோபு, கர்த்தரை நோக்கி, “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று மன்றாடினார்.

அன்று இரவு, விசுவாசத்தினாலே யாக்கோபு, கர்த்தருடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொண்டார். “எத்தன்” என்று அழைக்கப்பட்ட அவர், அன்று முதல், “தேவ பிரபு,” என்று அழைக்கப்படும் இஸ்ரவேலாக மாற்றினார்.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வாக்குத்தத்தங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். வேதத்தில் கர்த்தர் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்களை, உறுதி யாகப் பற்றிக்கொள்ளுங்கள். புது வருட வாக்குத்தத்தங்களுமுண்டு. மாதந்தோறும் கர்த்தர் கொடுக்கிற புதிய மாதத்தின் வாக்குத்தத்தங்களுமுண்டு. அன்போடும், விசுவாசத்தோடும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? (எண். 23:19)