ராஜ்யத்தை ஜெயித்தார்கள்

“விசுவாசத்தினாலே, அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள். நீதியை நடப்பித்தார்கள். வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்” (எபி. 11:33).

விசுவாசம் ஒரு தெய்வீக சக்தி. மாபெரும் வல்லமை. அது உள்ளான மனுஷனை பெலப்படுத்தி, கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களை செய்ய ஏவி எழுப்புகிறது. இந்த விசுவாசத்தினால்தான், வேதத்திலுள்ள நம் முன்னோர்கள், நற்சாட்சியைப் பெற்றார்கள். எழும்பிப் பிரகாசித்திருக்கிறார்கள்.

நம்முடைய விசுவாசமே, உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் (1 யோவா. 5:4) என்ற வேதவாக்கின்படியே, பரிசுத்தவான்கள் விசுவாசத்தினாலே, ராஜ்யங்களை ஜெயித்தார்கள் (எபி. 11:33). இன்று நாமோ, உலகம், மாம்சம், பிசாசை ஜெயித்து, பரமகானானை சுதந்தரிக்கும்படி, அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இஸ்ரவேலர் எகிப்தைவிட்டு வெளியே வந்தபோது, கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தமாக, கானானை சுதந்தரமாய் கொடுப்பதை, விசுவாசித்தார்கள். “நீ கட்டாத வீடுகளையும், நடாத திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும் சுதந்தரித்துக்கொள்வாய்,” என்று சொன்னார். ஆனால் அதற்கு அவர்கள் அங்கிருந்த ஏழு ஜாதிகளையும், முப்பத்தொரு ராஜாக்களையும் ஜெயங்கொள்ள வேண்டும். எப்படி அவர்களை துரத்தி, யுத்தத்திலே ஜெயங்கொண்டு சுதந்தரிக்க முடியும்?

இஸ்ரவேலர் யுத்த பயிற்சியுடையவர்களல்ல. அவர்கள் எகிப்திலே அடிமை களாய் ஒடுங்கிப்போய், கிடந்தவர்கள். அவர்களிடம் ஆயுதம் இல்லை. எந்த படையுமில்லை. அவர்களுக்கு இருந்ததெல்லாம், விசுவாசம் ஒன்றுதான். ஆம், இந்த கானானை, கர்த்தர் எங்களுக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். முற்பிதாவாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு, “கால்மிதிக்கும் இடத்தையெல்லாம், தருவேன்,” என்று சொல்லியிருக்கிறார். அவர் நிச்சயமாய் வாக்கை நிறைவேற்றுவார். அவர் வாக்களித்தவர் வாக்கு மாறமாட்டார்,” என்று விசுவாசித்தார்கள்.

ஆகவே, அவர்கள் தைரியமாய் முன்னேறிச் சென்றார்கள். கர்த்தர் அந்த விசுவாசத்தைக் கண்டார். அவர்களுக்கு முன்பாக செங்கடல் பிரிந்தது. யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. எருசலேமின் பெரிய மதில்கள், நொறுங்கி விழுந்தது. எருசலேமை அப்பொழுது ஆண்டு வந்த அதோனிசேதேக் படுதோல்வியடைந்தான். யர்மூத்தின் ராஜாவாகிய பீராம், முறியடிக்கப்பட்டான். லாகீசின் ராஜாவாகிய யப்பியாவும், எக்லோனின் ராஜாவாகிய தெபீரும், யுத்தத்தில் தோற்றுப்போனார்கள்.

இஸ்ரவேலரோ, விசுவாசத்தினால் ராஜ்யங்களை ஜெயித்தார்கள். “கர்த்தர் எங்கள் ஜெய கெம்பீரமானவர். அவர் எங்கள் சூழ்நிலைகளுக்கு முன்பாக நடக்கிறவர். எங்கள் கர்த்தரை, எதிர்த்து நிற்க, யாராலும் முடியாது. நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தினாலே வருகிறோம்” என்று சொல்லிக்கொண்டே, விசுவாசத்தில் வல்லவர் களாய், பெலன்கொண்டு ஜெயம் பெற்றார்கள்.

“ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ” என்கிற பதம், மீண்டும் மீண்டுமாக, வெளிப் படுத்தின விசேஷத்தில் வந்துகொண்டேயிருக்கிறது. ஆம், ஜெயக்கிறிஸ்துவால் நீங்களும், நானும் ஜெயங்கொள்ளுவோம். புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய யுத்தம், முற்றிலும் வித்தியாசமானது. நமது யுத்தம் மாம்சத்தோடும், இரத்தத் தோடுமல்ல. நமது யுத்தம் ஆவிக்குரியது. வானமண்டலங்களிலுள்ள, பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு இருக்கிறது. உலகம், மாம்சம், பிசாசை, ஜெயித்து, பரம கானானை சுதந்தரித்துக்கொள்வோமாக.

நினைவிற்கு:- “தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய். காணாதிருந்தும்,விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்” (யோவா. 20:29).