ஆவியின் வரமாகிய விசுவாசம்

“விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்” (2 கொரி. 4:13).

மேலேயுள்ள வசனம், ஒரு ஆச்சரியமான வசனம். முதலாவது, “விசுவாசித்தேன்” என்றும், இரண்டாவது, “விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருக்கிறோம்” என்றும், மூன்றாவது, விசுவாசிக்கிறபடியால், பேசுகிறோம் என்றும் அப். பவுல் கூறுகிறார். இந்த “விசுவாசத்தின் ஆவி, எப்பொழுது வருகிறது?” விசுவாசமாகிய, ஆவியின் வரத்தைப் பெறும்போது, நீங்கள் பெற்றுக்கொள்ளுவீர்கள்.

இதுவரை, பலவகையான விசுவாசங்களைக் குறித்து, நாம் தியானித்துக்கொண்டு வந்தோம். இயற்கையான விசுவாசமுண்டு. தேவன்பேரில் வைக்கிற அஸ்திபார மாகிய விசுவாசமுண்டு. கேடகமாகிய விசுவாசமுண்டு. ஆவியின் கனியாகிய விசுவாசமுண்டு. நங்கூரமாகிய விசுவாசமுண்டு.
இங்கே ஆவியின் வரமாகிய விசுவாசத்தைக்குறித்து, அப். பவுல் எழுதுகிறார்.

ஆவியின் வரமாகிய விசுவாசம், ஒருபோதும் சும்மாயிருக்காது. எப்போதும் கிரியை செய்துகொண்டேயிருக்கும். மற்ற வரங்களுக்கு முன்னோடியாக சென்று கொண்டேயிருக்கும். ஆவியின் கனியாகிய விசுவாசத்தைப்போல, அமைதியாக, மௌனமாக இருப்பதில்லை. இந்த விசுவாச வரம், செயலாற்றுகிற ஒரு வரம். உலகத்தார் காணும்படி கிரியைச் செய்கிற ஒரு வரம். “ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம், அவனை இரட்சிக்குமா?” (யாக். 2:14). ஆம், விசுவாசம் கிரியைலேயோ, செயலிலேயோ, வெளிப்பட வேண்டும்.

ஒரு பக்தன், தனக்கு மிகப் பெரிய விசுவாசமிருக்கிறது, என்று பெருமையாய் தம்பட்டம் அடித்துக்கொள்வார். அவர் ஒருமுறை மலையிலுள்ள கிராமங்களுக்குச் சென்று, விசுவாசத்தைக் குறித்துப் பிரசங்கித்துவிட்டு திரும்பும்போது, அவருடைய கால் சறுக்கி மலையிலிருந்து கீழேயுள்ள ஒரு மரத்தில் விழுந்தார். நல்ல வேளை அவருக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை. மரத்தின் கீழே, மகா ஆழமான பாதாளமிருந்தது. மரக்கிளையில் தொங்கிக்கொண்டே, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கதறினார்.

அப்பொழுது, கர்த்தருடைய மெல்லிய குரல் கேட்டது. “மகனே, என்னை விசுவாசித்து, உன் கையைவிடு! இவருக்கோ பயம். சந்தேகம். எப்படி ஆண்டவரே, கீழே விழுந்து நொறுங்கிவிடுவேனே. உமக்கு தெரியாதா? காப்பாற்றும்,” என்று மீண்டும், மீண்டும் ஜெபித்தார். கர்த்தரோ அமைதியாயிருந்தார். ஒரு பக்கம் கை வலி. மறுபக்கம், முடிவில் அவர் பிடித்திருந்த பிடி நழுவினது. கிளையும் முறிந்தது. “என் தேவனே, என் தேவனே” என்று கூக்குரலுடன் கீழே விழுந்தார்.

நல்ல வேளை, சில நாட்களுக்கு முன்பாக, சினிமாக்காரர்கள் படம் எடுக்க கட்டியிருந்த பெரிய வலையில் விழுந்து, எந்த சேதமுமில்லாமல் பாதுகாக்கப்பட்டார். ஐயோ, இது எனக்கு முன்னே தெரிந்திருந்தால், மரத்திலிருந்து கையை எடுத்திருந்திருப்பேனே” என்று அங்கலாய்த்தார். விசுவாசத்தை, முன்வைத்துதான் மற்ற வரங்களெல்லாம், செயல்படுகின்றன. “விசுவாசம்,” என்கிற வரம், உபயோகப் படாமலிருந்தால், மற்ற எட்டு வரங்களும் செயல்பட முடியாது. தேவபிள்ளைகளே, நீங்களும் அந்த விசுவாசத்தை ஜெபத்தோடு பெற்றுக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொரு வனுக்கு, அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும் அளிக்கப்படுகிறது” (1 கொரி. 12:9,10).