நங்கூரமான விசுவாசம்

“அந்த நம்பிக்கை (விசுவாசம்) நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான, ஆத்தும நங்கூரமாயிருக்கிறது” (எபி. 6:19).

வேதத்திலே அடுத்த விசுவாசம், “நங்கூரமான விசுவாசம்” அது. கிறிஸ்துவிலே உங்களுடைய இருதயத்தை இணைத்துவிடுகிறது. அப்பொழுது எவ்வளவு புயலடித்தாலும், வாழ்க்கை கொந்தளித்தாலும், நீங்கள் அசைக்கப்படுவதில்லை. பதறுவதில்லை, கலங்குவதில்லை. “விசுவாசிக்கிறவன் பதறான்” (ஏசா. 28:16).

உலகம் என்னும் கடலில், வாழ்க்கை என்கிற படகில், இருள் சூழ, துன்பம் துயரம் என்கிற அலைகள் மோத, எப்பொழுது விடிவுகாலம் வருமோ என்று ஏங்குகிறவர்கள் ஏராளம் பேர். ஆனால் நான்கு நங்கூரங்களைப் போட்டு, வாழ்க்கையில் வீசும் புயல்களிலிருந்தும், கொந்தளிப்புகளிலிருந்தும், தப்பும் வழியை அறியாதிருக்கிறார்கள்.
அப். பவுலுடன் 276 பேர், கப்பல் பயணத்தை மேற்கொண்டார்கள். அந்த கப்பல் இஸ்ரவேல் தேசத்திலிருந்து ரோமாபுரியை நோக்கிப் போய்கொண்டிருந்தது. அந்த கப்பலிலே மாலுமிகளிருந்தார்கள். நூற்றுக்கு அதிபதிகளிருந்தார்கள். ரோம சக்கரவர்த்திக்கு முன்பாக நிற்கவேண்டிய, அப். பவுலும் இருந்தார். அப்பொழுது திடீரென்று “யூரோக்கிலிதோன்,” என்ற கடுங்காற்று கப்பலின்மேல் மோதியது. அடைமழை பெய்தது. புயல் வீசினது. கடல் கொந்தளித்தது. பதினான்கு நாட்களாக புயல் ஓயாமல் வீசிக்கொண்டிருந்தது.

அப்போது மாலுமி, கப்பலின் பின்னணியத்திலிருந்து, நான்கு நங்கூரங்களைப் போட்டு, பொழுது எப்போது விடியுமோ? என்று காத்துக்கொண்டிருந்தார் (அப். 27:29). இயேசுவைத் தவிர, வேறு யார்மேலும் நீங்கள், நம்பிக்கையான நங்கூரத்தைப் போடவே முடியாது. அவர்தான் வீசுகிற புயலையும், கொந்தளிக்கிற கடலையும், அதட்டி அமரப்பண்ணுகிறவர். “அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும்” (சங். 33:9).

உங்களுடைய முழு நம்பிக்கையும், கிறிஸ்துவின்மேல் வைத்திருப்பீர்களானால், நீங்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. புயல் வீசும்போது, ஜெபம்பண்ணி மன்றாட்டின் ஆழத்துக்குள் சென்று, விசுவாச அறிக்கை செய்து, கர்த்தரை உறுதியாக பிடித்துக்கொள்ளுங்கள். வேதம் சொல்லுகிறது, “உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன், உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3).

தமிழ் நாட்டிலே, மூன்று வகையான பிடிகளைக் குறித்து சொல்லுவார்கள். 1) பூனை பிடி, 2) குரங்குபிடி, 3) உடும்பு பிடி. பூனை பிடி என்பது, தாய் பூனை தன் குட்டியை வாயிலே கவ்விப்பிடிப்பதாகும். அடுத்தது, குரங்கு பிடி. இதிலே தாய் குட்டியைப் பிடிக்காது. குட்டி தான், தாயை உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக் கொள்ளும். மூன்றாவதாக, உடும்பு பிடி. இதன் பிடி மிகவும் உறுதியாயிருக்கும். எத்தனைபேர் கட்டியிழுத்தாலும், அது பிடியை விடவே விடாது.

ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கு, நான்காவது இன்னொரு பிடி உண்டு. அது விசுவாசத்தினாலே, வருகிற நங்கூர பிடி. அது பாறையான கிறிஸ்துவிலே கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுவதாகும். தாவீது எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டார். இப்பொழுதும் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை என்று சொன்னார் (சங். 39:7). அப்படியே, நீங்களும் கர்த்தரை உறுதியாய்ப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்” (1 தீமோத். 1:19).