ஆவியின் கனியாகிய விசுவாசம்

“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம், இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான, பிரமாணம் ஒன்றுமில்லை” (கலா. 5:22,23).

முதலாவதாக, கர்த்தர்பேரில் வைக்கும் விசுவாசம். இது அஸ்திபார உபதேசங்களில் ஒன்றாகும். இரண்டாவதாக, கேடகமான விசுவாசம். மூன்றாவதாக, ஆவியின் கனியாகிய விசுவாசத்தைக் குறித்து மேலேயுள்ள பட்டியலிலே வருகிறதைக் காணலாம். இந்த விசுவாசம், நீங்கள் அடைய வேண்டிய, தெய்வீக சுபாவத்தைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் குணாதிசயத்தைக் குறிக்கிறது. கர்த்தருக்கென்று கனியுள்ள வாழ்க்கை வாழும்படி, உங்களுக்கு மிகவும் உதவியாயிருக்கிறது.

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையிலே, ஆவியின் வரங்களும் தேவை. ஆவியின் கனிகளும் தேவை. சிலர் வரங்களுக்காக, நீண்ட நாட்கள் உபவாசமிருப்பார்கள். ஆனால் ஆவியின் கனியையோ, விட்டுவிடுவார்கள். ஒரு பிரதான ஆசாரியனுடைய உடையிலே, பொன்னால் செய்யப்பட்ட மணியும் காணப்பட வேண்டும். பொன்னால் செய்யப்பட்ட மாதளம்பழங்களும், காணப்பட வேண்டும். மணி என்பது, ஆவிக்குரிய வரங்களைக் குறிக்கிறது. மாதளம்பழம் என்பது, ஆவிக்குரிய கனிகளைக் குறிக்கிறது. தேவபிள்ளைகளே, வரங்களும், கனிகளும், சரி சமானமாய் உங்களில் காணப்படட்டும். ஆவியின் வரங்கள் மூலமாக புறஜாதியாரை கர்த்தரண்டை வழிநடத்த முடியும். ஆவியின் கனிகள் மூலமாக, தெய்வீக சுபாவங்களும், குணாதிசயங்களும் உங்களில் காணப்படும். உங்களை காண்கிறவர்கள் உங்களிலே, தெய்வீக சுபாவத்தைக் காணட்டும்.

ஆவியின் கனியாகிய விசுவாசம் என்பதற்கு, இன்னொரு அர்த்தம், “உண்மை யுள்ளவர்களாயிருத்தல்” (Faithful) என்பது, பொருளாகும். ஒரு வேலைக்காரனுக்கு எஜமான்மேலுள்ள விசுவாசத்தை அது குறிக்கிறது. எஜமான்மேல் விசுவாசமுள்ள வேலைக்காரன், ஒருநாளும் எஜமானுக்கு தீங்கு நினைக்கமாட்டான். எஜமான் என்ன சொன்னாலும், அதை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிவான். எல்லாவற்றையும் எஜமானின் நன்மைக்காகவே செய்வான்.

அதுபோல, கணவனுக்கும், மனைவிக்குமிடையேயுள்ள உறவிலே, ஒருவருக் கொருவர் நம்பிக்கைக்குப் பாத்திரமான, விசுவாசமுள்ளவர்களாயிருக்க வேண்டும். கணவன்மேல் விசுவாசமுள்ள மனைவி, தன் கற்பைப் பாதுகாத்துக்கொள்ளுகிறாள். அப்படியே கணவனும், மற்ற பெண்களிமேல் நாட்டம்கொள்ளாமல், மனைவி நம்பும்படி, தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுகிறான். இந்த விசுவாசத்திற்கு நம்பிக்கை, நாணயம், உத்தமம், உண்மை, உறுதி, என்பவைகளெல்லாம் அர்த்தமாகும்.

நான் சென்னையில் ஒரு வீட்டில் கொஞ்சகாலம் வாடகைக்கு இருந்தேன். அந்த வீட்டு சொந்தக்காரர் ஒரு நாய் வளர்த்தார். அந்த நாய்க்கு என்னவோ, அவர்மேல் அதிக விசுவாசம். இவ்வளவுக்கும் அவர் குடிகாரர்தான். ஆனால் அவருக்கு நேராக யாராவது கை நீட்டிப் பேசினால், அந்த நாய் தாங்கிக்கொள்ளாது. உடனே அப்படிப் பேசுகிறவர்கள்மேல், பாய்ந்து விடும். எஜமான் மேலுள்ள விசுவாசம்.

மத்தேயு 25-ம் அதிகாரம் 21-ம் வசனத்திலே, “உண்மையும், உத்தமமுமான ஊழியக்காரனே” என்று கர்த்தர் தட்டிக்கொடுத்து, உற்சாகப்படுத்துகிறதைக் காணலாம். நீங்களும் உங்கள் எஜமானாகிய கர்த்தருக்கு, விசுவாசமுள்ள ஊழியராக இருப்பீர்களா?

நினைவிற்கு:- “எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்” (கொலோ. 1:7).