கேடகமாகிய விசுவாசம்

“எங்களுடைய போராயுதங்கள், மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (2 கொரி. 10:4).

விசுவாசத்தைக் குறித்து, நாம் தொடர்ந்து தியானித்துக் கொண்டிருக்கிறோம். இயற்கையான விசுவாசமுண்டு. கர்த்தர்பேரில் வைக்கிற விசுவாசமுண்டு. அதே நேரத்தில் கேடகமாகிய விசுவாசமுமுண்டு. எபேசி. 6-ம் அதிகாரத்தில் ஒவ்வொரு விசுவாசிக்கும் இருக்கவேண்டிய, சர்வாயுத வர்க்கங்களைக் குறித்து. அப். பவுல் எழுதும்போது, “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம், அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக, விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்” (எபேசி. 6:16) என்று குறிப்பிடுகிறார். ஆம், விசுவாசம் என்பது ஒரு கேடகம். அது சாத்தானுடைய அம்புகளை, அக்கினியாஸ்திரங்களை, முறித்துப்போடுகிறது.

ஒரு யுத்த வீரனுக்கு, ராஜா எப்படி ஆயுதங்களைக் கொடுத்து போருக்கு அனுப்பு வானோ, அதுபோல கர்த்தரை ஏற்றுக்கொண்டு, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும் போரிட நிற்கும்போது, கர்த்தர் உங்களுக்கு விசுவாசத்தைக் கொடுத்து அனுப்புகிறார். துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகாரலோகாதிபதி களோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளோடும் போராடும்போது, விசுவாசமாகிய கேடகம் உங்களைப் பாதுகாக்கிறது.

சாத்தானின் தீக்கணைகள், உங்களை அணுகாதபடி, இந்த கேடகம், உங்களைக் காக்கிறது. இந்த யுத்தம் ஒரு நாள் இரண்டுநாளல்ல, உங்களுடைய வாழ்நாளெல்லாம் தொடரும். அதைக் குறித்து, தன்னுடைய அனுபவத்தை அப். பவுல் எழுதும்போது, “நல்ல போராட்டத்தைப் போராடினேன்,” என்று குறிப்பிடுகிறார் (2 தீமோ. 4:7).

இந்த போராட்டத்திலே, நீங்கள் இரண்டு வகையான ஆயுதங்களை, உபயோகப் படுத்த வேண்டும். ஒன்று, ‘தாக்கும் ஆயுதங்கள்’ அடுத்தது, ‘காக்கும் ஆயுதங்கள்’ உதாரணமாக, வேத வசனமாகிய ஆவியின் பட்டயம். எதிரியை தாக்கி அழிக்கக் கூடியதாக இருக்கிறது. அதே நேரம், ‘ஆயத்தம்’ என்கிற பாதரட்சை, ‘விசுவாசம்’ என்னும் கேடகம், ‘நீதி’யென்னும் மார்க்கவசம், இவையெல்லாம் உங்களை எதிரியின் தாக்குதலினின்று பாதுகாக்கிறது.

விசுவாசத்தின், மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று, விசுவாசிகள் சாத்தானுடைய கைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். உலகம், மாம்சம், பிசாசிலிருந்து ஜெயம்பெற வேண்டும். கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமையை முறியடிக்க வேண்டும் என்பதேயாகும். இன்றைக்கு தீய மனுஷர்களும், தீமைகளை செய்ய தீவிரிக்கும் அக்கிரமக்காரரும், மந்திர வாதிகளும் பெருகிவிட்டார்கள். சாத்தானும் தனக்கு கொஞ்சகாலம் மாத்திரமே உண்டென்று அறிந்து, யாரை விழுங்கலாமோ, என்று வகை தேடிச் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறான். இந்த சூழ்நிலையில், விசுவாசம் ஒரு கேடகம் போல நின்று, உங்களைப் பாதுகாக்கிறது.

உங்களுக்கு சிறந்த பாதுகாப்பு வேண்டுமா? 91-ம் சங்கீதத்தில் கர்த்தர் கொடுத்திருக்கிற எல்லா வாக்குத்தத்தங்களையும், உறுதியாய்ப் பிடித்துக் கொண்டு விசுவாசித்து, கர்த்தரை ஸ்தோத்திரம்பண்ணுங்கள். அப்பொழுது உங்களுக்கு வருகிற எல்லா சோதனையிலிருந்தும், நீங்கள் ஜெயம்பெறுவீர்கள். சோதனைக்குட் படுத்துகிற, எல்லா தீமையினின்று கர்த்தர் உங்களை இரட்சித்துக் கொள்ளுவார்.

நினைவிற்கு:- “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது, நான் உன்னோடு இருப்பேன். நீ ஆறுகளைக் கடக்கும்போது, அவைகள் உன்மேல் புரளுவதில்லை. நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்” (ஏசா. 43:2).