கர்த்தர்பேரில் வைக்கும் விசுவாசம்

“தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக” (எபி. 6:1,2).

அஸ்திபார உபதேசங்களிலே ஒன்று, “தேவன்பேரில் வைக்கிற விசுவாசமாகும்.” எப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறீர் களோ, அப்பொழுது பரலோகத்திலே, ஒரு அன்பின் பிதா உங்களுக்கு உண்டு என்று அறிகிறீர்கள். அவரே, உங்களுக்காக, சகலவற்றையும் சிருஷ்டித்த, சிருஷ்டி கர்த்தர் என்பதையும் அறிகிறீர்கள். அவரே உங்களுக்காக, பூமியிலே இறங்கி வந்து, இரத்தம் சிந்தி, பாவ மன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும் உண்டாக்கியிருக்கிறார், என்பதை அறிந்துகொள்கிறீர்கள்.

இந்த விசுவாசத்தினால், நீங்கள் தேவனை முற்றிலும் சார்ந்திருக்கிறீர்கள். உங்களுடைய பாரங்களை அவர்மேல் வைத்துவிட்டு, அவருடைய மார்பிலே சார்ந்து இளைப்பாறுகிறீர்கள். அதே நேரம், சாத்தான் உங்கள் ஐம்புலன்களிலே, பலவிதமான மாம்சீக சிந்தைகளையும், அவிசுவாசங்களையும், கொண்டு வருகிறான்.

ஆனால் தேவபிள்ளைகளும், பரிசுத்தவான்களும், கர்த்தரை முற்றிலும் சார்ந்திருந்தபடியால், “அவர்கள் தங்கள் பலவீனத்தில் பலன் கொண்டார்கள். யுத்தத்தில் வல்லவர்களானார்கள். அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். ஸ்திரீகள் சாகக்கொடுத்த, தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்” (எபி. 11:34,35). நீங்கள் கிறிஸ்துவின் பேரில் மட்டும் விசுவாசம் வைக்காமல், தேவன் எழுதிக்கொடுத்த, வேத வசனங்களிலும், விசுவாசம் வைக்க வேண்டும். ஐம்புலன் சொல்லுவதற்கு, வேதம் ஒருவேளை முரண்படாயிருந்தாலும், வேதம் சொல்லுவதையே, நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, எங்கள் கிராமத்திலே கிழக்கிலே சூரியன் உதிப்பதை ஒவ்வொரு நாளும் பார்த்திருக்கிறேன். ஆனால் மும்பை பட்டணம் வந்தபோது, திசையெல்லாம் மாறி குழம்பிவிட்டது மேற்கிலிருந்து, சூரியன் உதிப்பதுபோல எனக்குத் தோன்றிற்று. என் ஐம்புலன்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தாலும், சூரியன் உதிக்கிற திசைதான், “கிழக்கு” என்று நம்பியே ஆக வேண்டும்.

அதுபோல, உங்கள் ஐம்புலன்கள், பல வேளைகளில் உங்களை ஏமாற்றினாலும், வேத வசனமோ உண்மையானது, சத்தியமானது, என்றென்றைக்கும் நிலைத்திருக் கிறது. தேவனையும், அவர் எழுதிக்கொடுத்த வார்த்தைகளையும், நீங்கள் விசுவாசியுங்கள். சிலர் தங்களுடைய விசுவாசத்தை தேவன்பேரில் வைக்காமல், கண் காண்பவைகளின்மேல் வைக்கிறபடியால், பிசாசானவன் இந்த ஐம்புலன்களுக்குள் நுழைந்து, அவர்களை ஏமாற்றி விடுகிறான்.

பிசாசினால் விசுவாசமாகிய ஆறாம்புலனை, தொடவே முடியாது. ஆபிரகாமுக்கு வயது ஏறிக்கொண்டு போனபோதிலும், கர்த்தர் குழந்தையைத் தருவார் என்ற அசைக்க முடியாத விசுவாசமாயிருந்தார். ஆகவே கர்த்தர் கொடுத்த வாக்கின்படி, புன்னகை மைந்தனாகிய ஈசாக்கைப் பெற்றுக்கொண்டார்.

நீங்கள், கர்த்தரிலே சார்ந்துகொள்ளுங்கள். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். விசுவாசமே, உலகத்தை ஜெயிக்கும் ஜெயம். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்று வேதம் திட்டமும் தெளிவுமாய் நமக்குப் போதிக்கிறது.

நினைவிற்கு:- “விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே” (ரோமர் 14:23).