இயேசுவும், நேரங்களும்!

இயேசுவும் நேரங்களும்!

“பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்ய வேண்டும். ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது”(யோவா.9:4).

இயேசுவின் இளமைக் காலத்தைக் குறித்து, ஏதோ ஒன்றிரண்டு குறிப்புகளை மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். பெரும்பாலானவை மறைக்கப்பட்ட வருடங்கள். ஆனாலும் முப்பதாவது வயதிலிருந்து கடைசி வரை அவர் தன்னுடைய நேரங்களை எவ்விதமாய்ச் செலவழித்தார் என்பதை, நான்கு சுவிசேஷங்களிலிருந்தும் தெளிவாய் அறியலாம். “காலம் பொன் போன்றது, கடமையோ கண்போன்றது.” “நேரத்தின் துளிகளோ மிக மிக விலையேறப்பெற்றது” என்பதை, அவருடைய வாழ்க்கையிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

“அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது”. வீணாக செலவழிக்கப்பட்ட நேரங்களும், காலங்களும் திரும்பவும் மனிதனுக்குக் கிடைக்கப்பெறாது. நீங்கள் இந்த உலகத்தின் வழியாக, ஒரே ஒரு முறை மட்டுமே கடந்து செல்லுகிறீர்கள். காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.

இரவும், பகலும் மாறி மாறி வருகிறது. இயேசு, காலை வேளையிலே, பிதாவோடு நேரம் செலவழிக்க, வனாந்தரத்தை நோக்கிச் சென்றார் (மாற்.1:35). அதன்பின் அவருடைய பாதங்கள் கிராமங்களையும், பட்டணங்களையும் நோக்கி, மேய்ப்பனில்லாத ஆடுகளைக் கிட்டிச் சேர்ந்தன. அவருடைய உள்ளம் அவர்களுக்காக மனதுருகி பரிதபித்தது. நோயாளிகளைக் குணமாக்கினார். குஷ்டரோகிகளை சொஸ்தமாக்கினார். மரித்தோரை உயிரோடு எழுப்பினார்.

அதன்பின்பு, சீஷர்களைப் பயிற்றுவிப்பதற்காக, அவர்களோடு நேரம் செலவழித்தார். ராஜ்யத்தின் இரகசியங்களை அவர்களுக்கு உபதேசித்தார். எப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தார்.

இரவு நேரத்தில் அவருடைய உள்ளம் பிதாவோடு உறவாடுவதற்காக ஏங்கினது. அவர் ஒலிவமலையிலுள்ள, கெத்செமனே தோட்டத்தை நோக்கி, பாரத்தோடு ஏறினார். சிலவேளைகளிலே முழு இரவும், பிதாவோடே உறவாடி ஜெபித்துக்கொண்டிருந்தார். அவருடைய ஜெபத்தைக் கண்ட சீஷர்கள், மிகவும் கவரப்பட்டார்கள். அவர் கருத்தாய் ஜெபித்தார். பல வேளைகளில் ஜெபித்தபோது, முகங்குப்புற விழுந்து ஜெபித்தார். தேவதூதன் இறங்கினார் (லூக்.22:43).

காலத்தை அவர் பகற்காலம், இராக்காலம் என்று பிரித்தார். பகற்காலம் என்பது, கிருபையின் காலங்கள். கர்த்தருக்காக உழைக்கிற காலங்கள். ஒருவனும் கிரியை இராக்காலம் என்று இயேசு சொல்வது, அந்திக்கிறிஸ்துவின் காலங்கள். உலகம் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிற காலங்கள். அந்தக் காலங்களில் ஜனங்கள் இரட்சிக்கப்படுவதோ, அபிஷேகம் பெறுவதோ, முடியாது.

ஆகவே, பகற்காலங்களிலே கர்த்தருக்கென்று உழைக்க வேண்டும். கிருபையின் தருணங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். Dictionary எழுதின ஜான்சனுடைய கடிகாரத்தில், “இராக்காலம் வருகிறது” என்ற வசனங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஆகவே பகற்காலத்தில் கர்த்தருக்காக உழைக்கும்படி தீவிரப்பட்டிருந்தார். பண்டிதர் ஜவஹர்லால் நேருவுக்கும், இந்த வசனம் ஊக்கம் தருவதாக இருந்தது. ‘Miles to go before I sleep’ என்ற வாசகத்தை மேஜையின் மேல் எழுதி வைத்திருந்தார். “துயில் கொள்ளும் முன் முடித்துவிட வேண்டும்.” தேவபிள்ளைகளே, காலத்தின் அருமையை உணர்ந்து செயல்படுவீர்களா?

நினைவிற்கு :- “சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்” (நீதி. 6:6).