கொள்ளுகிறார்!

“கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார். அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது” (சங். 34:22).

நீங்கள், “விசுவாசிகள்” என்று அழைக்கப்படுகிறதிலிருந்து, ஒருபடி முன்னே வாருங்கள். கர்த்தருடைய ஊழியக்காரன் என்று அழைக்கப்பட ஒப்புக்கொடுங்கள். “கர்த்தர் எந்த ஊழியத்தைக் கொடுத்தாலும் சரி, அதை நான் செய்வேன். ஊழியக் காரரின் சுதந்தரமும், மகிமையும் எனக்கு வேண்டும்” என்று கேளுங்கள். நீங்கள் ஊழியக்காரராக வேண்டுமென்றால், நன்றாக பிரசங்கம் பண்ண வேண்டும் என்று, அதையே நினைக்காதிருங்கள். ஞாயிறு ஓய்வுநாள் பள்ளி சிறுவர்களுக்கு பாடம் எடுத்தாலும், கர்த்தருக்காக பாடுவதும், இசைக் கருவிகளை மீட்டுவதும், ஒரு ஊழியம்தான். ஆலயத்துக்கு சீக்கிரமாய் வந்து, நாற்காலிகளைப் போட்டு, ஒவ்வொரு நாற்காலிகளிலும் உட்காருகிறவர்களுக்காக, அவர்களுக்குள்ளே அபிஷேகம் இறங்கிவரும்படியாக ஜெபிப்பதும், ஒரு ஊழியம் தான். ஆனால் போகப் போக உங்களுடைய அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு கர்த்தர் வைத்திருக்கிற ஊழியம் என்ன? அது சுவிசேஷகனா? மேய்ப்பனா? அப்போஸ்தலனா? வேதத்தை கற்றுக்கொடுக்கிற போதகனா? என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இயேசு சொன்னார், “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால், என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ, அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்;

ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால், அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார்” (யோவா. 12:26). ஊழியக்காரனுடைய வேலை என்ன? அவன் கர்த்தரை நேசித்து, கர்த்தரை துதியினால் மகிமைப்படுத்த வேண்டும். பின்பு கர்த்தருடைய நாமத்தை மற்றவர்களுக்கு அறிவித்து, கர்த்தருடைய ராஜ்யத்தை விரிவாக்க வேண்டும். கர்த்தர் ஊழியக்காரரை நேசிக்கிறார். அவர்களை அக்கினி ஜுவாலையாக மாற்றுகிறார் (எபி. 1:7, சங். 104:4). கர்த்தர் தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிறார் (சங். 35:27). வேதத்தின் கடைசி பக்கத்தில் கூட கர்த்தருடைய ஊழியக்காரருக்கு, கர்த்தர் கொடுக்கிற கனத்தையும், மகிமையையும் குறித்து வாசிக் கிறோம். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள் (வெளி. 22:4).

“ஊழியக்காரர்களுடைய சுதந்தரம்” என்று கர்த்தர் சொல்லுகிறது என்ன தெரியுமா? “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும், நீ குற்றப்படுத்துவாய். இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று, கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா. 54:17). ஒரு ஊழியக்காரனை அறிவேன். இஸ்லாம் மார்க்கத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு மிகவும் வைராக்கியமாய் ஊழியம் செய்தார். ஆனால், அவருடைய வாழ்க்கையில், சோதனை மேல் சோதனை வந்தது. இதனால் அவர் பின்வாங்கிவிட்டார். சில வருடங்கள் பின்மாற்றத்திலே வாழ்ந்து காலத்தை செலவழித்தாலும், அவர் மரிக்கும்போது, கர்த்தர் அவருக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தார். மனைவி பிள்ளைகளிடம் ஒப்புரவானார். ஆதி அன்புக்குத் திரும்பி வந்தார். “கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்” என்று சொல்லுவது, எவ்வளவு உண்மையானது (சங். 34:22).

நினைவிற்கு:- “ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” (வெளி. 2:5).