சேஷ்ட புத்திரபாகம்!

“அவன் (ஏசா) யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான். அப்பொழுது யாக்கோபு,

ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங் கூழையும் கொடுத்தான்” (ஆதி. 25:33,34). இஸ்ரவேல் தேசத்திலே, ஒரு குடும்பத்தின் மூத்த பிள்ளையை “சேஷ்ட புத்திரன்” என்று அழைப்பார்கள். அவன் இரட்டிப்பான சுதந்தரத்தைப் பெறுவான். ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளென்றால், சொத்தை ஆறு பாகமாக போட்டு முதல் இரண்டு பாகத்தை மூத்த குமாரனுக்குக் கொடுப்பார்கள். தகப்பனுக்குப் பிறகு, குடும்பத்தை நடத்த வேண்டிய பொறுப்பு அவனுக்கு உண்டு. குடும்ப பலிபீடத்துக்கு, அவன் ஒரு ஆசாரியனைப்போல இருப்பான். அப்படியே, மிருக ஜீவன்களில், முதலாவது பிறக்கிறதை “முதலீற்று” என்று சொல்லுவார்கள். கர்த்தர்தான் கர்ப்பத்தை ஆசீர்வதித்து, பிள்ளைகளைத் தருகிற வர். ஆகவே, அவர் கட்டளை கொடுத்து, “இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும், மிருக ஜீவன்களிலும், கர்ப்பந்திறந்து பிறக்கிற, முதற்பேறனைத்தையும், எனக்குப் பரிசுத்தப்படுத்து. அது என்னுடையது என்றார்” (யாத். 13:2). அப்படி பார்க்கும் போது, ஏசா முதற்பேறானவன். அவன் பரிசுத்தமாயிருக்க வேண்டும். தேவனோடு ஐக்கியமாயிருக்க வேண்டும். “பரிசுத்தம்,” என்ற வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமுண்டு. மற்றவர்களை விட்டு வேறுபிரிந்து வாழ்வது. உங்களுடைய அலுவலகத்தில் பத்துபேர் இருக் கிறார்கள். லஞ்சம் வாங்குகிறார்கள், பாவ வழிகளிலே நடக்கிறார்கள். நீங்களோ, “நான் கர்த்தருக்கு பரிசுத்தமுள்ளவன், நான் தூய்மையான வாழ்க்கை வாழ வேண்டும்” என்று மற்ற ஜனங்களிலிருந்து பிரிந்து வாழ்வதுதான் பரிசுத்தம்.

ஏசாவின் தகப்பனாகிய ஈசாக்கைப் பாருங்கள்! மாலை நேரத்தில், ஜனங் களை விட்டுப் பிரிந்து வயல்வெளிகளுக்குப் போய், பரிசுத்தமுள்ள தேவனாகிய ஆண்டவரை தியானம் செய்தார். “ஏசா, என்னுடையவன்” என்று கர்த்தர் உரிமை பாராட்டும்படி, அவன் பரிசுத்தமாய் வாழவில்லை. அவனை “வேசிக் கள்ளன்” என்று வேதம் சொல்லுகிறது (எபி. 12:16). புறஜாதியாரினின்று பிரிந்து, பரிசுத்தத்தைப் பாதுகாக்காமல், ஏத்தியரின் குமாரத்திகளை ஒவ்வொன்றாய் திருமணம் செய்தான். அவர்கள் ஈசாக்குக்கும், ரெபெக்காளுக்கும் மனநோவா யிருந்தார்கள் (ஆதி. 26:34,35). பரிசுத்தக் குறைச்சலாவதையும், பரிசுத்த வித்து அந்நியரோடு கலப்பதையும், கர்த்தர் விரும்பவில்லை. “அந்நிய நுகத்திலே, அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படா திருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே, விசுவாசிக்குப் பங்கேது?” (2 கொரி. 6:14,15). யார் பரிசுத்தத்தைப் பாதுகாக்காமல், துணிந்து அசுத்தத்துக்குள்ளும், சாக்கடைக் குள்ளும் வாழ்கிற, பன்றி போன்ற வாழ்க்கையை தெரிந்தெடுக்கிறார்களோ, கர்த்தர் அவர்களை வெறுக்கிறார். ஆகவேதான், அவர் ஏசாவை வெறுத்தார். தேவபிள்ளைகளே, சரீரத்தை சுத்தப்படுத்துவதைப் பார்க்கிலும், உங்களுடைய ஆத்துமாவை ஆயிரமாயிரம் மடங்கு சுத்திகரியுங்கள். இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, உங்களை சுத்திகரிக்கும். இயேசுவின் இரத்தத்தால் கழுவப் பட்ட நீங்கள், பரிசுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

நினைவிற்கு:- “நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர். நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர் களாக” (லேவி. 11:45).