மௌனம்!

“அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை” (லூக். 23:9).

ஒரு தேவனுடைய மனிதன், முடி வெட்டிக்கொள்வதற்காக ஒரு சலூனுக்குப் போயிருந்தார். முடி திருத்துகிறவன், இன்னொருவனுக்கு முடிவெட்டிக் கொண்டி ருக்கும் போது, வளவளவென்று பேசிக்கொண்டே, ஊர்க் கதைகளையும், வெட்டிக் கதைகளையும், அரசியல் சம்பவங்களையும் சொல்லிக்கொண்டிருந்தான். அவனு டைய எச்சில், பல திசைகளிலும் மழைபோல பொழிந்துகொண்டிருந்தது.

அடுத்தது, அவருடைய நேரம் வந்தது. அந்த தொழிலாளி இவரைப் பார்த்து, “உங்களுக்கு எப்படி முடியை வெட்ட வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு இவர் எப்படி வெட்டினாலும் பரவாயில்லை. ஆனால், “அமைதியாய் வெட்ட வேண்டும்” என்று சொன்னார். அமைதிக்கு எதிரான சத்தத்தினால், பல வேளைகளில் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் சத்தங்கள், தேவையில்லாதபடி வானொலி, தொலைக்காட்சி, விமானம், ஆட்டோ ரிக்ஷா போன்றவைகள் சத்தத்தை எழுப்பிக் கொண்டேயிருக்கின்றன. ஒரு சில சத்தங்கள், மகிழ்ச்சி தரக்கூடியவைகள். அவை இனிய இசையாக இருந்தபோதிலும், மற்றவை கூச்சல், கும்மாளம் என்று காதை, பஞ்சராக்கி விடுகின்றன.

கிறிஸ்துவினிமித்தம் தனிமைச் சிறையில், அமைதியான சூழ்நிலையில், தேவனோடு உறவாடிக்கொண்டிந்த ஒரு பக்தன், பல ஆண்டுகள் கழித்து விடுதலை யாக்கப்பட்டபோது, மனிதருடைய வீணான வார்த்தைகள், அவரை மிகவும் பாதித்தன. மீண்டும் அமைதியைத் தேடி, சிறைச்சாலைக்கே ஓடிவிடலாமா என்று அவருக்குத் தோன்றினது. நீங்கள் தேவனைத் தேட விரும்பினால், அமைதியை நாடுங்கள். நீங்கள் உபவாசிக்கும்போது, அல்லது ஜெபிக்கும்போது, உங்கள் அறை கதவுக்குள் பிரவேசித்து, உங்கள் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உங்கள் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணுங்கள்; என்று சொன்னார் (மத். 6:6). இங்கேயும் கூட, நீங்கள் வீண் வார்த்தைகளை அலப்பிக்கொண்டிருக்கக்கூடாது. “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்;

ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்” (சங். 46:10). பிரசங்கியின் ஆலோசனை என்ன? “தேவ சமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்;

நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால், உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக” (பிர. 5:2). இயேசு ஜெபிக்க விரும்பின போது, அமைதியான, மனித சஞ்சாரமற்ற வனாந்தரத்துக்குப் போய்விட்டார். இரவு நேரங்களிலே மலையின்மேல் ஏறி, தேவனோடே தனித்திருந்தார். நீங்கள் தேவனோடு தனித் திருக்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் மெல்லிய குரலை கேட்பீர்கள். அவர் உங்களுக்கு ஆலோசனை சொல்லும்படி காத்திருப்பார். அவருடைய சத்தத்தைப் போல, இனிமையான சத்தம் வேறு ஒன்றுமில்லை.

நீங்கள் ஜெபிக்கும்நேரம், தேவனோடு இன்பமாய் உறவாடிக் கொண்டிருக்கிற நேரம். அந்த நேரத்தில் உங்களுடைய மொபைல் அலறாமலிருக்கும்படி, பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஜெபிக்கப் போகிறீர்கள் என்பது உங்களுடைய வீட்டாருக்குத் தெரிந்திருக்கட்டும். எந்த இடையூறும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். ராஜாதி ராஜாவோடு உறவாடுகிற இன்பமான ஜெப வேளையை எந்த சத்தங்களும் வீணாக்கிவிடக் கூடாது.

நினைவிற்கு:- “கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார். பூமியெல் லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது” (ஆபகூக். 2:20).