வேண்டாம்!

“நாங்கள் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை, கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (2 கொரி. 4:8,9).

கிறிஸ்தவ மார்க்கத்திலே, உங்களை உற்சாகப்படுத்த, தேவதூதர்கள் இருக்கிறார் கள். தேவ பிரசன்னம் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். ஆகவே, சோர்ந்து போய், ஓட்டத்தை இடையிலே விட்டு விடாதிருங்கள். ஆஸ்திரேலியாவில், கங்காரு என்ற ஒரு மிருகம் உண்டு. அது மிகுந்த பெலனுள்ளது. வேகமாய் ஓடக்கூடியதாயிருந்தாலும், சீக்கிரத்தில் சோர்ந்துபோய் விடும். அதை துரத்திக்கொண்டு வருகிற “டிங்கோ” என்று சொல்லப்படுகிற காட்டு நாய், கங்காருபோல ஓட முடியாவிட்டாலும், விடா முயற்சியோடு தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும்.

கங்காருவை துரத்திக்கொண்டேயிருக்கும். சற்றுதூரம் ஓடி விட்டு, கங்காரு ஓட முடியாமல் நின்றுவிடும். காட்டு நாயை எதிர்த்து சண்டை யிடாமல், பின்வாங்கிவிடுவதால், காட்டு நாய் அதை உணவாக்கிக் கொள்ளும். கிறிஸ்தவ வாழ்க்கையிலே, உங்களை பிசாசு தொடர்ந்து துரத்திக்கொண்டு வரலாம்.

பாவங்களும், பாரங்களும், இனி இந்த கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியாது என்று சொல்லுகிற நிலைமைக்குக் கொண்டு வரலாம். ஆனாலும் உங்கள் முயற்சியை விட்டுவிடாதிருங்கள். கர்த்தருடைய ஆவியானவரில் சார்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய சரீரமாகிய மண்பாண்டங்களிலே, தேவனுடைய மகத்துவமான வல்லமையைப் பெற்றிருக்கிறீர்கள். அபிஷேக பொக்கிஷம் உங்களுக்குள்ளிருக்கிறது. நீங்கள் அதைப் பாதுகாத்து, கர்த்தருடைய கரத்திலே ஒப்புவிக்க வேண்டும். பல வேளைகளிலே, குற்ற மனச்சாட்சி உங்களை வாதிக்கலாம். “ஐயோ, பட்ட காலே படுகிறது, கெட்ட குடியே கெடுகிறது.” ஏன் திரும்பத் திரும்ப, எனக்கு இப்படி சோதனை? ஏன் எனக்கு பிரச்சனைகள்? என்று கலங்கலாம். நீங்கள் விழுந்த இடத்திலேயே, விழுந்து கிடக்கக்கூடாது. எழுந்து புதுபெலனடைந்து, தொடர்ந்து ஓட கற்றுக்கொள்ள வேண்டும். மரம்தான், விழுந்த இடத்திலேயே விழுந்து கிடக்கும். நீங்கள் மரமல்ல, நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். கர்த்தருடைய இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள். கர்த்தருடைய கிருபையிலே சார்ந்துகொண்டு, முடிவுபரியந்தம் நீங்கள் ஓட வேண்டும். மீகா தீர்க்கதரிசி, சாத்தானை சவால் விட்டு சொல்லுகிறார், “என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்” (மீகா. 7:8). எவ்வளவுதான் சோர்புகள் உங்களை மோதினாலும், தேவ பெலத்தோடும், புதிய தீர்மானத்தோடும் எழுந்திருங்கள். “எழும்பு, எழும்பு சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்” (ஏசா. 52:1).

“எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும். ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்” (ஏசா. 60:1,2). உலகத்தார், உங்களை புறக்கணித்திருக்கலாம். வேண்டாம் என்று தள்ளியிருந் திருக்கலாம். உங்களுடைய விழுகையைப் பற்றி சந்தோஷப்படலாம். ஆனால் கர்த்தர் உங்களை தூக்கிவிட விரும்புகிறார். அவர் மாறாதவர். அவர் உங்களுக்காகவே மரித்து, எழுந்துமிருக்கிறவர். உங்களை தமது உயிர்த்தெழுந்த வல்லமையினால் எழுப்பி, காலூன்றி நிற்கச் செய்வார்.

நினைவிற்கு:- “எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன். அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்” (எசேக். 37:10).