கூருகிறவர்களுக்கு!

“தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1 கொரி. 2:9).

சிலவற்றை, நம்முடைய கண்களினால் காண்கிறோம். சிலவற்றை, காதுகளினால் கேட்கிறோம். சில, நம்முடைய இருதயத்தில் தோன்றுகின்றன. ஆனால், இவை களைத் தாண்டி விசுவாசத்தின் மூலமாக, கர்த்தருடைய வழிகளை நாம் அறிந்து கொள்ளுகிறோம். அது ஆச்சரியமானது.

இயேசு, ஏன் சீஷர்களின் கால்களைப் பிடித்து, தண்ணீரால் கழுவிக் கொண்டிருக் கிறார்? என்பது சீஷர்களுக்கு புரியவில்லை. தண்ணீரால், தங்களுடைய கால்களை கழுவினவரே, ஒரு நாள் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தால், தங்களுடைய இருதயத்தை கழுவி, பாவங்களற சுத்திகரித்து, அவருடைய பிள்ளைகளாகும்படி, பக்குவப்படுத்துகிறாரென்பது புரியவில்லை. கர்த்தரின் வழிகள் ஆச்சரியமானவை.

இன்னும் சிலர், “ஏன் பிதாவானவர் சிலுவை மரணத்தை தடுத்து நிறுத்தவில்லை? என்று கேள்வி கேட்கிறார்கள். கிறிஸ்து உயிர்த்தெழுந்த வல்லமையோடு நம்மிடம் வாசம்பண்ண, தம்முடைய ஜீவனையே சிலுவையிலே ஊற்றிக் கொடுத்தார் என்பதை, பிறகு தான் சீஷர்கள் அறிந்துகொண்டார்கள்.

பல வேளைகளில் நாமும்கூட, ஏன் ஏன் என்று பல கேள்விகளை எழுப்பலாம். சில இரகசியங்களை விசுவாசத்தினாலேயும், பரிசுத்த ஆவியினாலேயும் நாம் அறிந்து கொள்ளலாம். அப். பவுல் எழுதுகிறார், “நமக்கோ, தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி, மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்” (1 கொரி. 2:10,11). தேவபிள்ளைகளே, பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதும், ஆவியால் நடத்தப் படுவதும், எத்தனை பாக்கியமான அனுபவங்கள்! அவர்களுக்கென்று, கர்த்தர் வெளிப்பாட்டு வரங்களை வைத்திருக்கிறார். அறிவை உணர்த்துகிற வசனம், ஞானத்தை போதிக்கிற வரம், என்ற இரண்டு வரங்களும், ஆன்மீக கண்களைப் போல விளங்குகின்றன. ஒருவேளை வரங்களைப் பெறாமல், நீங்கள் இருந்தாலும்கூட, கர்த்தரில் விசுவாசத்தோடு சார்ந்துகொள்ளுங்கள். “கர்த்தாவே, நீர் என் தகப்பனாயிருக்கிறீர், “அப்பா, பிதாவே” என்று அழைக்கக்கூடிய புத்திர சுவிகார ஆவியை எனக்குக் கொடுத்திருக்கிறீர். தற்போது என்ன செய்கிறீர் என்று எனக்கு புரியாமலிருந்தாலும், நான் உம்முடைய பிள்ளையாயிருக்கிறபடியால், எனக்கு நன்மையானவைகளையே செய்வீர். ஒவ்வொன்றையும், அதினதின் காலத்திலே நேர்த்தியாய் செய்து முடிப்பீர்” என்று சொல்லி, விசுவாசத்தோடு அவரில் சார்ந்து கொள்ளுங்கள்.

கர்த்தர் ஒவ்வொன்றையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய் செய்கிறவர். ஒருநாளும் முந்தவுமாட்டார், பிந்தவுமாட்டார். கானாவூர் கலியாணத்திலே திராட்ச ரசம் குறைவுபட்டபோது, சற்றே அவர் தன் வேளைக்காக காத்திருந்தார். அந்த வேளை வந்தபோது, தண்ணீரை திராட்சரசமாக்கினார். நிச்சயமாகவே உங்களுக்கும் ஒரு அற்புதம் செய்வார்.

நினைவிற்கு:- “நாங்களோ, உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்” (1 கொரி. 2:12).