உயர்ந்தவை!

“பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும், என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும்,

என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசா. 55:9). பல வேளைகளில், கர்த்தருடைய வழிகளை அறிந்துகொள்ள முடிவதில்லை. நாம் எப்போதுமே சமவெளியை விரும்புவோம். மேடு பள்ளங்களையோ, ஏற்றத் தாழ்வுகளையோ விரும்புவதில்லை. “எல்லாம் நன்மைக்கேதுவாக, உடனே நடந்து விட வேண்டும், நாம் விரும்புகிறதை சாதித்து விட வேண்டும்,” என்று அவசரப் படுவோம். ஆனால் கர்த்தருடைய வழிகள் ஆச்சரியமானவை. “கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும், பெருங்காற்றிலும் இருக்கிறது” என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம் (நாகூம் 1:3). ஆம், உண்மையாகவே கர்த்தருடைய வழிகள் ஆச்சரியமானவை.

எனக்கு வாலிப வயதிலே, திருமணத்திற்காக ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். என் பெற்றோருக்கு மிகவும் பிடித்திருந்தது. பெண்ணுக்கும், அவளுடைய வீட்டா ருக்கும் சம்மதமாயிருந்தது. ஆனால், திருமணம் நடந்தேறுகிற நேரம் வந்தபோது, பெண்ணின் தகப்பனார், “நான் கெட்ட சொப்பனம் கண்டேன்” என்று சொல்லி, திருமணத்தை நிறுத்திவிட்டார். என் பெற்றோருக்கு பெரிய ஏமாற்றமாயிருந்தது. “ஏன் இப்படி நின்று போனது? என்ன கெட்ட சொப்பனம் கண்டார்?” என்று தெரியாமல் குழம்பி போனோம். முப்பது வருடங்கள் கடந்து போயின. முப்பது வருடங்களுக்குப் பிறகு, ஒருநாள் அந்த சகோதரி, என்னுடைய அலுவல கத்திற்கு தற்செயலாய் வந்திருந்தாள். மறந்துபோய் தன்னுடைய டைரியை அலுவல கத்திலே விட்டுவிட்டு போய்விட்டாள். திறந்து பார்த்தபோது, அவளுடைய வாழ்க்கை எவ்வளவு தவறானது என்றும், சினிமா பைத்தியமாய், அநேக வாலிபர் களோடு சுற்றியதையும், அவள் எழுதியிருந்தாள். அப்பொழுதுதான், ஆண்டவர் என்னை அந்த திருமணத்திலிருந்து காப்பாற்றி னார் என்பதை அறிந்து கொண்டேன். அவளை திருமணம் செய்திருந்தால், என்னுடைய வாழ்க்கையும், ஊழியமும், ஒன்றுமில்லாமல் போயிருந்திருக்கும். ஆண்டவருக்கு ஆயிரம் கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தேன். வேதம் சொல்லு கிறது, “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ, மரண வழிகள்” ( நீதி. 14:12, 16:25). நம்முடைய அறிவு குறைவுள்ளது.

நம் தெரிந்துகொள்ளுதலும் குறைவுள்ளது. ஆனால் கர்த்தருடைய அறிவு அளவிடப்பட முடியாதது. அவர் தமது அனந்த ஞானத்திலிருந்து, ஆச்சரியமான காரியங்களைச் செய்கிறார். நமக்கு நிகழ்காலம்தான் தெரியும். ஆனால் கர்த்தரோ, வருங்காலத்தை அறிந்திருக்கிறவர். மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ, இருதயத்தைப் பார்க்கிறவர். சில பெண்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும். கலியாணமாகப்போகிற நேரத்தில், மாப்பிள்ளை வீட்டார் ஏதோ, ஒரு காரணத்தினால் கலியாணத்தை நிறுத்தும்போது, பெண் வீட்டார் துடித்துப்போவார்கள். “ஐயோ, எங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம், தலை குனிவு. ஏன் இப்படி நேர்ந்தது?” என்று அங்கலாய்த்துப் போவார்கள்.

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரை நேசிப்பீர்களென்றால், அவரில் அன்பு கூருகிறவர்களுக்கு அவர் சகலத்தையும் நன்மைக்கேதுவாகவே செய்கிறவர். ஆகவே பதறாதிருங்கள். கர்த்தர் அந்த திருமணத்தை நிறுத்தியதற்கான காரணத்தை நிச்சய மாகவே உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

நினைவிற்கு:- “உலகத்தோற்றத்திற்குமுன்னே, தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்” (1 கொரி. 2:7).