இப்பொழுது அறிவாய்!

“நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்” (யோவா. 13:7).

இயேசு கிறிஸ்து ஒரு நாள், தன்னுடைய சீஷர்களின் கால்களைக் கழுவி சுத்தப் படுத்திக்கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும், பேதுரு பதறிப்போனார். “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா? அதற்கு இயேசு, “நான் செய்கிறது இன்னது என்று, இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்” என்றார். நம்முடைய வாழ்க்கையிலும்கூட, பல முறை, “ஏன் எனக்கு இப்படி நேரிடுகிறது? எனக்கு ஏன் இந்த கஷ்டம்? காரணமில்லாமல் நஷ்டமாகிவிட்டதே?” என்றெல்லாம் எண்ணி கலங்குகிறோம். லாசரு மிகவும் வியாதிப்பட்டவுடனே, அவனுடைய சகோதரிகள், இயேசுவிடத் திலே சொல்லியனுப்பினார்கள்.

“அவர் ஏன் உடனே வரவில்லை? ஏன் அவனை குணமாக்கவில்லை?” என்று அவனுடைய சகோதரிகள் மனவேதனைப்பட்டார்கள். இயேசு வந்தும்கூட அவர்களோடு சேர்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். ஆனால் நான்காம் நாளில் அவர் லாசருவை உயிரோடு எழுப்பினபோது, கர்த்தரு டைய நாமம் மகிமைப்பட்டது. யூதர்களின் நம்பிக்கை என்ன? “ஒருவன் மரித்தாலும் மூன்று நாள் வரை, அவனுடைய ஆவி பூமியிலே உலாவிக்கொண்டிருக்கும். நான்கு நாள் ஆகிவிட்டால், நிச்சயமாய் அவன் உயிரோடு எழும்ப முடியாது” என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். இயேசு, அதை மீறி நான்காம் நாள் அவனை உயிரோடு எழுப்பினதினாலே, அது பெரிய அற்புதமாக திகழ்ந்தது. அநேகர் கர்த்தர் மேல் விசுவாசம் வைத்தார்கள். ஒருமுறை, ஒரு தாயார், ஞாயிற்றுக்கிழமை காலையிலே எழுந்து மீன் குழம்பு வைத்துவிட்டு, ஆலய ஆராதனைக்கு சென்றார்கள். மத்தியானம் ஒரு மணிக்கு அவர்களும், பிள்ளைகளும் பசியோடு வீட்டுக்கு வந்தபோது, ஒரு பூனை மீன் சட்டியை தள்ளி கீழே விழுந்து உடைந்துவிட்டது.

மீன் குழம்பெல்லாம் கொட்டி வீணாகி விட்டது. அவர்கள் பதறினார்கள். “ஏன் ஆண்டவரே, உம்முடைய ஆலயத்துக்கு தானே போய்விட்டு வந்தோம்? ஏன் இப்படி நடந்தது? என்று கதறினார்கள். அரை மணி நேரம் கழித்து, உடைந்த சட்டியை வெளியே எடுத்து போடும்போது, உள்ளே ஒரு பெரிய பல்லி செத்துக் கிடந்ததைக் கண்டார்கள். அதோடு, மீன் குழம்பை சாப்பிட்டிருப்பார்களென்றால், வாந்தியும், பேதியும், மரணம்கூட நேர்ந்திருக்கும். பல நேரங்களில் காரணம் தெரியாமல் ஏன் இப்படி நேர்ந்தது என்று கர்த்தரை குறை சொல்லக்கூடும். ஆனால் கர்த்தரில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது. யோசேப்பு ஏறக்குறைய பதிமூன்று வருடங்கள் சிறைச்சாலையிலே இருந்தான், என்று வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். அவன் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. வெண்கல விலங்கிட்டு அவனை ஒடுக்கினார்கள், அவன் பிராணன் இரும்பிலே அடைபட்டது.

“பரிசுத்தத்துக்காக வைராக்கியமாய் நின்ற, எனக்கு ஏன் இந்த பாடுகள்?” என்று யோசேப்பு மனவேதனைப்பட்டிருக்கக்கூடும். ஆனால் கர்த்தரோ, அவனை உயர்த்தி எகிப்து தேசத்தில் இரண்டாம் நிலையில் அதிகாரியாக ஏற்படுத்துவதற்கு, அது காரணமாயிருந்தது. நம்முடைய உள்ளத்தில் பல கேள்விகள் எழும்பலாம். ஆனால் நித்தியத்திற்கு செல்லும்போது, கர்த்தர் எவ்வளவு ஞானமாக, முன்னதாகவே எல்லாவற்றையும் அறிந்து, நம்மை நடத்தியிருக்கிறார் என்று எண்ணி, அவரைத் துதிப்போம்.

நினைவிற்கு:- “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா. 55:8).