விசேஷ அறிவு!

“எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங். 90:12).

இது ஒரு சிறு ஜெபம்தான். அபூர்வமான ஜெபம். சிந்திக்க வைக்கும் வித்தியாச மான ஜெபம். “பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று ஆயக்காரன் ஜெபித்த ஜெபம், அவனையும் நீதிமானாக்கிற்று. என் எல்லைகளை விரிவாக்க வேண்டும் என்று யாபேஸ் செய்த சிறு ஜெபம், அவர் வேண்டிக்கொண்டதை கர்த்தரிடத்தில் பெற்றுத் தந்தது. வானத்திலிருந்து அக்கினி இறங்கும்படியாக எலியா ஜெபித்த சிறு ஜெபம், கர்மேல் பர்வதத்திலே மிகப் பெரிய எழுப்புதலை உண்டாக்கிற்று. கண்கள் பிடுங்கப்பட்ட நிலைமையிலே, சிம்சோன் ஜெபித்த ஜெபம், இழந்துபோன பெலனை திரும்பக் கொண்டு வந்தது. அதேநேரம், “எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தரு ளும்” என்று உள்ளமுருகி ஜெபித்தார் மோசே பக்தன். அவருடைய இந்த ஜெபம் 90-ம் சங்கீதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியானால், அந்த ஜெபம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்! அவர் ஒரு தேவ மனுஷன்.

வேதத்தில் ஏழுபேர் தேவனுடைய மனுஷர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 1. மோசே (உபா. 33:1). 2. சாமுவேல் (1 சாமு. 9:6-10). 3. தாவீது (நெகேமி. 12:24). 4. எலியா (1 இராஜா. 17:18). 5. எலிசா (2 இராஜா 4:7). 6. செமாயா (2 நாளா. 11:2). 7. ஆனான் (எரே. 35:4). இன்றைக்கு மனுஷனுக்கு, பல்வேறு விதமான அறிவுகள் இருக்கின்றன. விஞ்ஞான அறிவு, பூகோள அறிவு, வானமண்டலத்தைப் பற்றிய அறிவு, மருத்துவ அறிவு, கம்ப்யூட்டர் அறிவு என்று எத்தனையோ ஆயிரக்கணக்கான துறைகளிலே மனுஷன், முன்னேறிக்கொண்டு போகிறான். ஆனால், அவனுக்கு இல்லாத ஒரே அறிவு, “அவனுடைய நாட்களை எண்ணும் அறிவாகும்.” பூமியிலே அவன் எவ்வளவு காலங்கள் வாழ்ந்திருப்பான்? அது இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுது உலகம் முடிவடையும்? கிறிஸ்து எப் பொழுது மீண்டும் இந்த உலகத்துக்கு வருவார்? அந்த நாட்களை அறியும் அறிவு, ஒருவருக்குமில்லை.

ஒரு தூக்குக்கைதி சொன்னான், “வெளியிலுள்ளவர்களுக்கு, நாட்களை எண்ணும் அறிவு இல்லை. ஆனால் எனக்கோ, குறிப்பிட்ட தேதி, குறிப்பிட்ட மணிக்கு தூக்குத் தண்டனை என்று நிர்ணயித்துவிட்டபடியால், நாட்களை எண்ணும் அறிவு எனக்கு உண்டு. ஆனால் அந்த அறிவு, மரண பயத்தை எனக்குக் கொண்டு வந்து, இரவும், பகலும் என்னை வாட்டுகிறது என்றான் கண்ணீரோடு.” டாக்டர் ஜஸ்டின் பிரபாகரன், சகோதரன் சங்கர் போன்ற அநேக ஊழியக்காரர்கள் இளமையிலேயே மரித்துப்போனார்கள். நாட்களை எண்ணும் அறிவு அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தன. இரண்டு பேருக்கும் நீண்ட கால ஊழிய திட்டங்கள், எதிர் பார்ப்புகள் இருந்தன. நாட்களை எண்ணும் அறிவு உங்களுக்கு இருக்குமானால், ஒவ்வொரு வினாடி நேரத்தையும், நீங்கள் பயன்படுத்திக்கொள்வீர்கள். நித்தியத்திற் காக உங்களை ஆயத்தப்படுத்துவீர்கள். ஒரு கடை வியாபாரி, ஒரு வாசகத்தை, தன் கடையிலே எழுதி வைத்திருந்தார். “காலம் பொன் போன்றது.

பேரம் பேசி என் நேரத்தை வீணாக்கி விடாதிருங்கள்”. நமக்கு முன்பாக இந்திய தேசத்தில் 130 கோடி மக்கள் இரட்சிப்புக்காக காத்திருக் கிறார்கள். அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டாமா? அவர்களுக்காக நீ என்ன செய்தாய்?

நினைவிற்கு:- “ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்” (எபேசி. 5:17).