இரத்தம் ஜெபிக்கட்டும்!

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை, இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக். 22:44).

இயேசு முதலில் இரத்தம் சிந்தின இடம், கெத்செமனே தோட்டமாகும். ஏன் அவர் கல்வாரியில் இரத்தம் சிந்துவதற்கு முன்பு, ஜெபிக்கும் இடமான கெத்செமனேயிலே இரத்தம் சிந்தினார்? ஆம், மனுஷ இரத்தத்தில் ஒரு பெரிய தேவ இரகசியமுண்டு. மாம்சத்தின் உயிர் அதின் இரத்தத்திலிருக்கிறது. மட்டுமல்ல, மனுஷனுடைய இரத்தத்துக்கு ஒரு சத்தமுண்டு. குரலுண்டு, மொழியுண்டு. இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து, பரலோகம் வரைக்கும் எட்டக்கூடியது.
எந்த டாக்டருக்கும், எந்த விஞ்ஞானிக்கும், எந்த அரசியல்வாதிகளுக்கும் தெரியாத, மாபெரும் இரகசியம் ஒன்று உண்டானால், மனிதனுடைய ஒவ்வொரு துளி இரத்தமும் தன்னை உண்டாக்கின இறைவனை நோக்கிக் கூப்பிடுவதுதான். சில இரத்தங்கள் பழிவாங்கச் சொல்லி, தேவனை நோக்கிக் கூப்பிடுகிறது. முதன் முதலில் இந்த உலகத்தில் இரத்தஞ்சிந்தின மனிதன் ஆபேல். அவனுடைய இரத்தத்தை மூடிவிடலாம் என்று, காயீன் நினைத்தான்.

ஆனால் அவனுடைய இரத்தத்தின் சத்தத்தைக் கேட்டு, கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்தார். “உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம், பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது என்றார்” (ஆதி. 4:10). ஆபேலின் இரத்தம் என்ன சொல்லி கூப்பிட்டிருக்கும். பழைய ஏற்பாட்டின் பிரமாணம் “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், ஜீவனுக்கு ஜீவன், இரத்தத்துக்கு இரத்தம்” என்பதாகயிருந்தது. அங்கே மன்னிப்புக்கு இடமேயில்லை. ஆபேலின் இரத்தம், தன் சகோதரனை பழிவாங்க சொல்லி கூப்பிட்டிருந்திருக்கும்.

அப். பவுல், “ஆபேலின் இரத்தம் பேசினதைப் பார்க்கிலும், இயேசுவின் இரத்தம் நன்மையானவைகளைப் பேசினது” என்று எழுதினார் (எபி. 12:24). சிலுவையிலே இயேசு கிறிஸ்து இரத்தஞ்சிந்தினபோது, பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று பரிந்து பேசினார்.

கிறிஸ்துவின் ஒவ்வொரு இருதயத்துடிப்பும், ஜனங்களுக்கு பாவ மன்னிப்பு அருள வேண்டும் என்பதாகவேயிருந்தது. கெத்செமனே தோட்டத்திலே, அவர் இரத்தம் சிந்தினபோது ஜெபித்துக் கொண்டிருந்தபடியால், அவருடைய இரத்தம் பிதாவை நோக்கி: பிதாவே, என் பிள்ளைகளை ஜெப வீரர்களாய் மாற்றும். விண்ணப்பத்தின் ஆவியை அவர்கள்மேல் ஊற்றியருளும் என்றே கதறியிருந்திருக்கும்.

இரத்தம் சிந்திக்கொண்டும், ஜெபித்துக்கொண்டும் பிதாவுடைய சித்தத்துக்கு, ஒப்புக்கொடுத்துக் கொண்டும் இருந்த இயேசு கிறிஸ்து, ஒரு வினாடி தன் கண்களைத் திறந்து நித்திரை மயக்கத்தோடிருந்த சீஷர்களைப் பார்த்து, “ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?” என்று கேட்டார் (மத். 26:40).

தனியாய் ஜெபித்தால், சோர்ந்துபோவீர்கள். எண்ணங்கள் சிதறிப் போகும். “ஆவி உற்சாகமுள்ளதுதான். மாம்சமோ பலவீனமுள்ளது” (மத். 26:41). ஆகவே தேவ பிள்ளைகளே, நீங்கள் ஜெபிக்கும்போது, கெத்செமனே சிந்தையோடு, இயேசுவின் கரம்கோர்த்து இணைந்து ஜெபியுங்கள். ஜெபத்தைக் கேட்கிறவர் உங்களுக்கு முன் பாக நிற்கிறார் என்கிற எண்ணத்தோடு, உற்சாகமாக சோர்வடையாமல் ஜெபியுங்கள். நீங்கள் சிறந்த ஜெப வீரராய் திகழ வேண்டும் என்பதே, பிதாவின் விருப்பமாகும்.

நினைவிற்கு:- “நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்” (சகரி. 12:10).