கெத்செமனே!

“நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும், நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி, பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டு போய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்” (மத். 26:36,37).

கெத்செமனே தோட்டத்துக்கு, உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். எருசலேமுக்கு கிழக்கே கீதரோன் என்ற ஒரு நதியின் பள்ளத்தாக்கு உண்டு. அடுத்த பக்கம், ஒலிவமலை எருசலேமுக்கு எதிராக இருக்கிறது. இயேசு ஒலிவமலை யிலுள்ள கெத்செமனே தோட்டத்தை, தன்னுடைய ஜெப இடமாக தெரிந்து கொண்டார்.

அநேக இந்துக்கள் வீட்டிலே பூஜை அறை என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதுபோல இஸ்லாமியர் வீடுகளை கட்டும்போது, நமாஸ் படிக்கும் இடத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவ வீடுகளிலே, ஜெபிக்கிற அறையோ, இடமோ இருப்பதில்லை. நரிகளுக்குக் குழிகளிருந்தாலும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளிருந்தாலும் இயேசுகிறிஸ்துவுக்கோ சொந்த வீடு இருந்த தில்லை. தலை சாய்க்க அவருக்கு இடமில்லாதிருந்தபடியால், அவர் அடிக்கடி ஒலிவ மலையில் ஏறி, அங்கே ஜெபித்து இராத்தங்கி வந்தார்.

அவர் தமது வழக்கத்தின்படியே, ஒலிவமலைக்குப் போனார் (லூக். 22:39). அவர் வழக்கத்தின்படியே, ஓய்வுநாளில் ஜெப ஆலயத்தில் பிரசங்கித்தார் (லூக். 4:16). வழக்கத்தின்படியே ஜனங்களுக்கு போதகம்பண்ணினார் (மாற். 10:1). அப்படியே அவர் ஜெப நேரத்தையும் வழக்கப்படுத்திக்கொண்டார். தேவபிள்ளைகளே, அதிகாலை ஜெபிப்பது, வேதம் வாசிப்பது, ஆலயத்துக்கு செல்வது, கர்த்தருக்கு ஊழியம் செய்வது போன்றவற்றை, வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

“யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்” (நியாயா. 11:11) அது அவருக்கு ஜெப இடம். அன்னாள் மலடியா யிருந்தபோது, தேவாலயத்துக்குச் சென்று தன் இருதயத்தை ஊற்றிவிட்டாள். அது அவளுடைய ஜெப இடம் (1 சாமு. 1:15). எசேக்கியா ராஜா, சுவர்ப் பக்கமாய்த் திரும்பி, கர்த்தரை நோக்கி கண்ணீரோடு ஜெபித்தார். அது அவருக்கு ஜெப இடம் (ஏசா. 38:2). தானியேல் தன் வீட்டு மாடிக்குமேல் ஏறி, அங்கே பலகணிகளை எருசலேமுக்கு நேராய் திரும்பி, தன் வழக்கத்தின்படியே ஜெபித்தார். அது அவருக்கு ஜெப இடம் (தானி. 6:10).

அநேகர் தங்களுடைய வீட்டுக்கு, “கெத்செமனே” என்ற பெயரை வைத்திருக் கிறார்கள். சிலர் தங்களுடைய வீட்டை ஜெப வீடாக ஒப்புக்கொடுத்து, வாரத்திற்கு ஒருமுறை அந்த வீட்டிலே ஜெப கூட்டங்கள் நடத்துகிறார்கள். அதுபோல கெத்செமனே என்று சொன்னால், கர்த்தர் தெரிந்துகொண்ட ஜெபஸ்தலம். இருதயத்தை ஊற்றி ஜெபிக்கிற இடம் என்பது, அதனுடைய அர்த்தம். இயேசு கிறிஸ்து கெத்செமனேக்கு போனபோது, அவர் மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வியர்வை இரத்தத்தின் பெருந் துளிகளாய் தரையிலே விழுந்தது (லூக். 22:44). தேவதூதன் இறங்கி வந்து அவரைத் திடப்படுத்தினான். நம் இயேசு சீஷர்களால் தனித்து விடப்பட்டவராக, எல்லா அந்தகார சக்திகளோடும் எதிர்த்து நின்று மகா ஊக்கமாய் ஜெபித்தார். போராடினார். துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், போராடி ஜெயம் பெற்றார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் ஜெபிக்கும்போது, உங்களுடைய ஜெப இடம் கெத்செமனேயாய் மாறுவதாக. ஊக்கமாய் ஜெபித்து சோதனைகளில் ஜெயம் பெறுங்கள். ஜெபிக்கிறவர்கள்தான், வெற்றிவீரனாக விளங்குவார்கள்.

நினைவிற்கு:- “அவர் (இயேசு) மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல் செய்தார்” ( எபி. 5:7).