ஜெபத்தின் மூலம் சமாதானம்!

“அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களை யும், உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி. 4:6,7).

“ஜெப ஜீவியம்” என்பது, சமாதான பிரபுவோடு நெருங்கி கிட்டிச் சேர்வதாகும். கிறிஸ்துவினிடத்தில் ஜெபித்து, மற்றவர்களோடு சமாதானமாகும் வழியையும் அறிந்துகொள்ளுங்கள். ஜெபிக்கிற சிலாக்கியத்தையும், ஜெப ஆவியையும் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறபடியால், நீங்கள் எல்லா பிரச்சனைகளையும், கவலை களையும், கர்த்தரிடத்திலே சொல்லுங்கள்.

அன்னாளுக்கு பிள்ளையில்லாதபடியினால், குடும்பத்திலே சமாதானத்தை இழந் தாள். சந்தோஷத்தை இழந்தாள். ஒரு நாள் அவள் ஜெபத்திலே தன் இருதயத்தை தேவசமுகத்தில் ஊற்றிவிடும்படித் தீர்மானித்தாள் (1 சாமு. 1:13). அப்படி அவள் இருதயத்தை ஊற்றிவிட்டப் பிறகு, மீண்டும் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.

“நீர் அவரோடே பழகிச் சமாதானமாயிரும்” (யோபு 22:21). ஆம், நண்பர்கள் ஒருவரோடொருவர் மனம் விட்டு பேசும்போது, அங்கே சமாதானம் ஏற்படுகிறது. அப்படியானால், தேவ குமாரனிடம், ஜெபத்திலே பேசி உறவாடும்போது, எத்தனை அதிகமான சமாதானம் உங்கள் உள்ளத்தை நிரப்பும்! ஜெபிக்கிற மனுஷன் பூரண சமாதானத்துடன் விளங்குவான். விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும், தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். ஒரு நாளும் கர்த்தர் உங்களுடைய கண்ணீரின் ஜெபத்தை புறக்கணிக்கவே மாட்டார். மனதுருகி, அருகில் வந்து தாய்த் தேற்றுவது போல தேற்றி, உங்களுக்கு சமாதானத்தைத் தந்தருளுவார்.
உலகத்திலுள்ள அத்தனைபேரும், தங்களுக்கு சமாதானம் தேவை என்று விரும் பினாலும்கூட, கர்த்தருடைய பாதத்திலே தங்களுடைய பாரங்களை இறக்கி வைக்காததினால் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். இயேசு கிறிஸ்து ஒருவரே, உலகத்துக்கு சமாதானத்தைக் கொண்டு வருகிறவர். அவருடைய இனிய பிரசன்னத்தில் சமாதானமுண்டு. அது, ஆவி, ஆத்துமா, சரீரத்தை நிரப்புகிறது.

இயேசு கிறிஸ்துவினுடைய சிலுவைப்பாடு, மரணத்துக்குப் பிறகு, சீஷர்கள் தங்களை அநாதைகள்போல உணர்ந்தார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்ற யூதர்கள், அவருடைய சீஷர்களாகிய தங்களை என்ன செய்வார்களோ, “பச்ச மரத்துக்கே அந்தப் பாடுகள் என்றால், பட்ட மரத்துக்கு எத்தனை அதிகமான பாடுகளோ?” என்று நடுங்கினார்கள்.

இயேசு கிறிஸ்து அவர்களுடைய பயத்தைப் போக்கி, சமாதானத்தைக் கொண்டு வரும்படி, உயிர்த்தெழுந்தவுடனே அவர்கள் மத்தியிலே எழுந்தருளினார். கிறிஸ்து வின் இனிமையான சமுகமும், பிரசன்னமும் அவர்களை மகிழ்வித்தது. சமாதானத்தைக் கொண்டு வந்தது. தேவபிள்ளைகளே, உங்கள் உள்ளத்தை தேவ சமாதானம் நிரப்பும் வரையிலும் விடாமல், ஜெபித்துக்கொண்டும், துதித்துக் கொண்டும் கர்த்தரை மகிமைப்படுத்திக்கொண்டும் இருங்கள்.

தேவபிரசன்னத்தை உணரும் போதெல்லாம், ஒரு பெரிய நதிபோல தெய்வீக சமாதானம் இறங்கி வந்து, உங்கள் உள்ளத்தையெல்லாம் நிரப்பிவிடும். உங்களை மகிழ்ச்சியாக்கி விடும்.

நினைவிற்கு:- “பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும் படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத் தினாலும், சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக” (ரோம. 15:13).