ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை!

“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்” (யோசு. 1:5).

உங்களை எப்போதும் எதிர்த்து நிற்கிற, ஒரு தீய சக்தியாக, சாத்தான் செயல் படுகிறான். “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன்,கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8). ஆகவே பிசாசானவனையும், அவன் தந்திரங்களையும், முறியடிக்கும்படி ஜெபம் என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். சாத்தானால் தாக்குபிடிக்க முடியாது.

மோசே இஸ்ரவேலரோடு எகிப்தை விட்டு வெளியேறி, சிவந்த சமுத்திரத்தைக் கடந்த பின்பு, அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணினார்கள் (யாத். 17:7,8). “அமலேக்கு” என்றால், அது இச்சைகளைக் குறிக் கிறது. அவை தேவபிள்ளைகளின் ஆவிக்குரிய ஜீவியத்தோடு, போர் செய்கின்றன. விசுவாசத்தை மனமடிவாக்கி, மனச்சாட்சியை வாதிக்கச் செய்து, ஜனத்தை தோல்வி யுற்றவர்களாக தடுமாறச் செய்வதே, இந்த அமலேக்கியரின் நோக்கம்.
மோசே பக்தன் இஸ்ரவேலரைப் பார்த்து,”பயப்படாதிருங்கள், நான் தேவனுடைய கோலை கையிலே பிடித்துக்கொண்டு உங்களுக்காக மலையுச்சியிலே நிற்பேன் என்றார். அந்த கோல்தான், யெகோவா நிசி. கர்த்தர் என் ஜெயக்கொடியானவர்,” அந்த கொடி உயர்த்தப்பட்டிருக்கும்போது, ஒருவனும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது.

“மோசேயின் கைகள் அசந்துபோயிற்று. அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டு வந்து, அவன் கீழே வைத்தார்கள். அதின்மேல் உட்கார்ந்தான். ஆரோனும், ஊரும், ஒருவன் ஒரு பக்கத்திலும், ஒருவன் மறுபக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள். இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும் வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது. யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களை யும் பட்டயக் கருக்கினாலே முறிய அடித்தான்” (யாத். 17:12,13).

தேவபிள்ளைகளே, அமலேக்கியர் உங்களை எதிர்த்து நிற்காதபடி, நீங்கள் ஊக்கமாய் ஜெபிக்க வேண்டும். எந்த மனுஷனுக்காக உண்மையாய் பாரமெடுத்து ஜெபிக்கக்கூடிய ஊழியர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் பாக்கியவான்கள். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, ஒருவருக்கொருவர் செய்கிற விண்ணப்பம், மகா பெலனும் வல்லமையுமுள்ளதாயிருக்கிறது. உபவாசமும், ஜெபமும், கர்த்தர் கொடுக்கிற வெற்றியின் ஆயுதங்களாகும்.

யாக்கோபு பக்தன், இஸ்ரவேலராய் மாறி, வாழ்நாள் முழுவதும் வெற்றியுள்ள வராய் திகழ்ந்ததின் இரகசியம் என்ன? அது கண்ணீரின் ஜெபமேயாகும். “தன் பெலத்தினால் தேவனோடே போராடினார். அவர் தூதனானவரோடே போராடி மேற்கொண்டார். அழுது அவரை நோக்கி கெஞ்சினார்” (ஓசியா 12:3,4).

இயேசு கிறிஸ்துவைப் பாருங்கள்! அவர் எவ்வளவு கண்ணீர் சிந்தி ஜெபித்தார். லாசருவின் கல்லறையருகே (யோவா. 11:35), எருசலேமைப் பார்த்து (லூக். 19:41), கெத்செமனே தோட்டத்திலே (எபி. 5:7, லூக். 22:44), கண்ணீர் சிந்தி ஜெபித்தார். தேவபிள்ளைகளே, நீங்கள் கண்ணீரோடு ஜெபிக்க கற்றிருப்பீர்களானால், நீங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம், ஒருவனும் உங்களை எதிர்த்து நிற்பதில்லை.

நினைவிற்கு:- “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான். ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்” (சங். 126:5,6).