பலவந்த ஜெபம்!

‘பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது. பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்” (மத். 11:12).

“பலவந்தம்” என்றால், “கட்டாயப்படுத்துதல்” என்பது அர்த்தம். ஜெபத்தில் பலவந்தப்படுத்துதல் என்பது, போராடி கர்த்தரிடத்தில் கேட்பதாகும். ஜெபத்தில் யாக்கோபு, தேவனை பலவந்தம்பண்ணினார். என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை விடவே மாட்டேன் என்று சொன்னார். அந்த ஜெபத்தைக் கேட்ட கர்த்தர், மனதுருகி யாக்கோபை ஆசீர்வதித்தார். யாக்கோபுக்கு, “தேவ பிரபு” என்று அர்த்தங் கொள்ளும் “இஸ்ரவேலன்” என்ற பெயரைச் சூட்டினார்.

பரலோகராஜ்யத்தை பலவந்தம் பண்ணுகிறதற்கு, ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுதான் ஊக்கமான ஜெபம். கருத்தான ஜெபம். பதில் கிடைக்கும்வரை போராடி ஜெபிக்கும் ஜெபம். லூக்கா, இதே வார்த்தையை எழுதும்போது, “அது முதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார் (லூக். 16:16).
எதிராளியாயிருக்கிற சாத்தான், பரலோகராஜ்யத்தில் நீங்கள் பிரவேசித்து விடாத படிக்கு, என்னென்ன தடைகளைக் கொண்டு வரமுடியுமோ அத்தனையும் கொண்டு வருகிறான். பயங்கரமான சோதனைகளைக் கொண்டு வந்து, மனம் சோர்ந்து போகும்படி செய்கிறான். வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள் நமக்கு விரோதமாய் போராடுகின்றன. பலவானைக் கட்டி, அவனை மேற்கொள்ள, ஊக்கமான ஜெபம் மிகவும் அவசியம்.

மோசே, இஸ்ரவேல் ஜனங்களை வேத பிரமாணத்துக்குட்படுத்தும்படி, சரீர களைப்பைப் பொருட்படுத்தாமல், சீனாய் மலையிலே ஏறினார். இரண்டு முறை நாற்பது நாட்கள் வீதம், ஒன்றும் புசியாமலும், குடியாமலும் கர்த்தருடைய சமுகத்தில் விழுந்து மன்றாடினார் (உபா. 9:9, 18,25). இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு விரோத மாய் பாவம் செய்து, கர்த்தருடைய கோபாக்கினைக்கு ஆளானபோது, மோசே தன் உயிரையும் பொருட்படுத்தாமல், இஸ்ரவேலருக்காக தேவசமுகத்தில் போராடி ஜெபித்தார்.

அவருடைய ஜெபம் பலவந்தம்பண்ணுகிறதாயிருந்தது. “கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக. உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டது முதல், இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்” (எண். 14:17-20).

இந்த ஜெபத்துக்கு, கர்த்தரால் பதில் தராமலிருக்கவே முடியாது. இதன்படி இஸ்ரவேலரின் பாவங்களை மன்னித்தார். மோசேயினுடைய ஜெபத்தால், கர்த்தருடைய உக்கிரமான கோபம் தணிந்தது. தேவபிள்ளைகளே, சாதாரணமான காரியங்களுக்கு நீங்கள் சாதாரணமாய் ஜெபிக்கலாம். ஆனால் போராட வேண்டிய காரியங்களுக்காக, போராடி பலவந்தம்பண்ணி ஜெபிக்க வேண்டும். ஜெபிக்க எனக்கு கடினமாயிருக்கும்போது, நான் கடினமாக, ஊக்கமாக ஜெபிப்பேன் என்றார் ஒரு ஊழியர். நீங்களும் அப்படி ஜெபிப்பீர்களா?

நினைவிற்கு:- “கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கை யாயிருக்கலாகாது. அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சி யாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்” (ஏசா. 62:6,7).