ஆசாவின் ஜெபம்!

“கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் , உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம்” (2 நாளா. 14:11).

ஆசா என்கிற ராஜா, யூதாவிலே ஆறாவது ராஜாவாக அரசாண்டார். இவர் ராஜ்யபாரத்தை ஆரம்பித்ததும், கர்த்தரை முன் வைத்து, அவரில் அன்பு செலுத்தி, கர்த்தரை முழு இருதயத்தோடு தேடினார். இதனால் பத்து வருடங்கள், அந்த தேசம் சமாதானமாக இருந்தது. எதிரிகளில்லாமல் இளைப்பாறியது.

ஆனால் அதற்கு பின்பு எத்தியோப்பியர்களோடு, பல ஜாதியினரும் ஒரு காரணமுமில்லாமல், ஆசாவுக்கு விரோதமாய் படையெடுத்து வந்தார்கள். அந்த எதிரிகளின் படையிலே, பத்து லட்சம் பேர் இருந்தார்கள். அவர்களிடம் முந்நூறு இருப்பு இரதங்கள் இருந்தன. இஸ்ரவேலரிடம் அத்தனை இருப்பு இரதங்களிருந்ததில்லை. இதனால் ஆசாவுக்குள்ளே ஒரு தோல்வியின் எண்ணம், பயம் வந்தது. நான் பலவீனன் என்ற சிந்தனை வந்துவிட்டது. ஆகவே அவர் நேராக, ஆண்டவருடைய சமுகத்துக்குப் போய் ஊக்கமாய் ஜெபித்தார். “கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம்” என்று சொல்லி ஜெபித்தார்.
பாருங்கள்! நியாயாதிபதிகளின் காலத்திலே, கிதியோன் படையிலே, வெறும் முந்நூறு பேர் மட்டுமே இருந்தார்கள். எதிரியாய் வந்த மீதியானியர்களோ, கடற்கரை மணலத்தனையானவர்கள். இந்நிலையில் இஸ்ரவேலரை வெற்றிபெற செய்வது, கர்த்தருக்கு லேசான காரியம். ஒரு பெரிய கோலியாத்தை வீழ்த்த, சின்ன தாவீதுக்கு உதவி செய்தது, ஆண்டவருக்கு லேசான காரியம். கர்த்தர் உங்களுக்கு துணை நிற்பாரானால், இன்றைக்கு இருக்கிற உங்கள் எல்லா பிரச்சனைகளையும், போராட்டங்களையும், நீங்கள் எளிதாய் மேற்கொள்வீர்கள்.

அப்படித்தான் ஆசா ஆண்டவரை நோக்கி, “பத்து லட்சம்பேர் என்னை எதிர்த்து வருகிறார்கள். ஆனால் உம்முடைய சேனையில் கோடி கோடிக்கணக்கான தேவதூதர்களிருக்கிறார்கள். நட்சத்திரங்களிருக்கின்றன. கேருபீன்கள், சேராபீன் களிருக்கிறார்கள். இந்த எத்தியோப்பியரை சங்கரிப்பது உமக்கு லேசான காரியம். கர்த்தர் என் பட்சத்திலிருந்தால், என்னை எதிர்த்து நிற்பவன் யார்?”

கர்த்தர் யோசுவாவோடு உடன்படிக்கை செய்து, “நீ உயிரோடிருக்கும் நாளெல் லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்” என்று வாக்களித்தார் (யோசுவா 1:5). ஆகவே தேவபிள்ளைகளே, எந்த பிரச்சனை மலைபோல் உங்களுக்கு விரோத மாய் நின்றாலும், சோர்ந்துபோக வேண்டாம். அவைகளை தீர்த்து வைப்பது, ஆண்டவருக்கு லேசான காரியம்.

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அவர்களுடைய பெருமை வாய்ந்த ஐரோப்பிய வர்த்தக மையம் எதிரிகளின் சதியால் நொறுங்கினது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பை நகரம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. புகழ்வாய்ந்த தாஜ் ஹோட்டல் எரிக்கப்பட்டது. தேவபிள்ளைகளுக்கு ஒரே அடைக் கலம் கர்த்தரே. அவர் எப்பொழுதும் உங்களுக்கு சகாயம் செய்ய ஆவலுள்ள வராயிருக்கிறார். அவர் உங்களுக்காக வழக்காடுகிறவர். யுத்தம் செய்கிறவர்.

ஆகவே பிரச்சனைகளை ஒருநாளும் பார்க்காதிருங்கள். உங்களை உள்ளன் போடு நேசிக்கிற, உங்களோடு உடன்படிக்கை செய்திருக்கிற கர்த்தரையே நோக்கிப் பாருங்கள். அவர் உங்களுக்காக யாவற்றையும் செய்து முடிப்பார்.

நினைவிற்கு:- “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய்” (சங். 50:15).