திட்டவட்டமான ஜெபம்!

“ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்” (லூக். 18:41,42).

கர்த்தரிடத்தில் நீங்கள் ஜெபிக்கும்போது, உங்களுடைய ஜெப விண்ணப்பங்கள் திட்டமும், தெளிவுமாயிருக்கட்டும். பாருங்கள்! எரிகோ வீதியிலிருந்த பர்திமேயு என்ற குருடன், நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அறிந்து, “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்” என்று கூப்பிட்டான். அவனுடைய வேண்டுதல் தெளிவில்லாமலிருந்தது. ஆகவே இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன், “ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும்” என்று சொன்னான். அப்படியே கர்த்தர், அவன் குருட்டு கண்களைத் திறக்கும்படிச் செய்தார் (மாற்கு 10:46-52).

எங்களுடைய ஆலயத்தில் பல வருடங்களாக இரண்டுவிதமான அற்புதங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன. முதலாவது, ஆஸ்துமா வியாதியோடு வருகிறவர் கள் சுகமடைந்து செல்லுவார்கள். இரண்டாவது, குழந்தையில்லாமல் தவிக்கிறவர் கள் குழந்தை பாக்கியத்தைப் பெற்றுக்கொள்வார்கள். அப்படி குழந்தை வேண்டு மென்று எதிர்பார்த்து வருகிறவர்களிடம், நான் சில கேள்விகளைக் கேட்பதுண்டு. “நீங்கள் கர்த்தரிடம் எந்த குழந்தையை எதிர்பார்க்கிறீர்கள்? குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்? என்று கேட்பேன். சிலர், “கர்த்தர் என்ன குழந்தையைக் கொடுத்தாலும் சரி தான்” என்பார்கள். வேறு சிலர், “நான் என் கணவனை அல்லது மனைவியைக் கேட்டு சொல்லுகிறேன்” என்பார்கள். சரி சிந்தித்து ஒரு முடிவு எடுத்த பின்பு வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுவேன். அவர்களுக்கு, உடனே குழந்தைச் செல்வம் கிடைப்பதில்லை.

ஒரு தம்பதியருக்கு, பத்து வருடங்களாக குழந்தைகளில்லை. நான் வழக்கம்போல அவர்களிடம் உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டேன். உடனே அந்த சகோதரி கணீரென்று, “எங்களுக்கு பெண் குழந்தை வேண்டும். அந்த குழந்தைக்கு தெபொராள் என்று பெயர் வைப்போம்,” என்று திட்டமும், தெளிவுமாக சொன்னார்கள்.

அவர்களுக்காக பாரத்தோடு ஜெபித்தபோது, அடுத்த ஆண்டு அவர்களுக்கு அதுபோல பெண் குழந்தைப் பிறந்தது. அந்த குழந்தைக்கு, “தெபொராள்” என்ற பெயரைச் சூட்டினார்கள்.
சாலொமோனிடம் கர்த்தர் தரிசனத்திலே தோன்றி, “உனக்கு என்ன வேண்டும்? என்னிடம் கேள்” என்று சொன்னபோது, சாலொமோன், “எதைக்கொடுத்தாலும் பரவாயில்லை. நீர் விரும்பினதை கொடும்” என்று சொல்லவில்லை. உம்முடைய ஜனத்தை நான் நியாயம் விசாரிக்கும்படி, எனக்கு ஞானமுள்ள இருதயம் வேண்டும் என்று தெளிவாக சொன்னார். அப்படியே பெற்றுக்கொண்டார்.
அன்னாள் ஜெபிக்கும்போதுகூட, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால் (1 சாமு. 1:11) என்று திட்டமும், தெளிவுமாக ஜெபித்தாள். எதற்காக? பெனின்னாளின் வாயை அடைப்பதற்காக மட்டுமல்ல, தனக்காக வைத்துகொண்டு அழகு பார்த்து சந்தோஷப்படுவதற்காக அல்ல, கர்த்தருடைய ஊழியத்திற்குக் கொடுப்பதற்காக, ஆண் பிள்ளை வேண்டும் என்றாள்.

கர்த்தருக்கும் ஒரு ஊழியக் காரனாகிய தீர்க்கதரிசி தேவையாயிருந்தது. அவளுக்கும் குழந்தை தேவையாயிருந்தது. இரண்டு தேவைகளும், அவளுடைய குமாரனாகிய சாமுவேல் மூலமாக, சந்திக்கப் பட்டன.

நினைவிற்கு:- “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு. அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங். 37:4).