வேலையாட்களை அனுப்பும்!

“அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்” (மத். 9:37,38).

நாம் ஊழியக்காரர்களிடத்தில், ஜெப உதவிகளைக் கேட்கிறோம். “ஐயா, இந்த விண்ணப்பங்களுக்காக ஊக்கமாக ஜெபியுங்கள். நீதிமான்களுடைய ஜெபம், மிகவும் பிரயோஜனமாயிருக்கும்” என்கிறோம். ஆனால், இங்கே கர்த்தர் தாமே ஜெபக்குறிப்புகளை நம்மிடத்திலே கொடுத்து, “இதற்காக பிதாவினிடத்திலே வேண்டுதல் செய்யுங்கள்” என்று சொல்லுகிறார். அவர் தருகிற ஜெபக்குறிப்பு என்ன? முதலாவதாக, “தேச அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி, அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.”

இந்தியா தேசத்தில், இன்னும் அதிகமான ஊழியக்காரர்களை, மிஷனெரிகளை, போதகர்களை கர்த்தர் எழுப்பித் தரும்படி, ஊக்கமாக மன்றாடுங்கள். முழு இந்தியா வும் சந்திக்கப்படவும், கர்த்தருடைய மகிமையான வருகைக்கு ஆயத்தப்படுத்தவும், போதுமான ஊழியக்காரர்களில்லை. கிறிஸ்துவைப் பற்றி, இன்னமும் அறியாத இடங்களிலே கிறிஸ்துவை அறிவிக்க, ஊழியக்காரர், சுவிசேஷகர்கள் தேவை.

“தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான். அவன் பேர் யோவான்” (யோவா. 1:6). ஆம், தேவனால் அனுப்பப்படும் ஊழியக்காரர் நமக்கு கிடைக்க வேண்டும். தேவனுடைய சித்தத்தின்படியே ஊழியம் செய்கிற ஊழியக்காரர்களும் பரிசுத்தமாய் ஜீவித்து, கர்த்தருடைய பாதையிலே உத்தமமாய் நடக்க வேண்டும். இவர்கள் நமக்கு எவ்வளவு அவசியம்!

அப். பவுலும்கூட, ஒரு ஜெப விண்ணப்பத்தை உங்களுக்கு முன்பாக வைத்திருக் கிறார். ‘நான் தைரியமாய், என் வாயைத் திறந்து, சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு, வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்” (எபேசி. 6:20). நீங்கள் மற்றவர்களுக்காகவும், ஊழியக்காரர்களுக் காகவும் ஜெபிப்பதற்கு முன்பாக, இயேசு கிறிஸ்து உங்களுக்காகவே பாரத்தோடு ஜெபிக்கிறார். இயேசு ஒருநாள் பேதுருவைப் பார்த்து, “சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ, உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்” என்றார் (லூக். 22:31,32).

இயேசு, அக்கிரமக்காரரின் இரட்சிப்புக்காக ஊக்கமாய் ஜெபம் பண்ணினார். “அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம், அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன். பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்” (ஏசா. 53:12). இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றி, நீங்களும் அக்கிரமக்காரருக்காகவும், சத்துருக்களுக்காகவும் ஜெபியுங்கள். இயேசு கிறிஸ்து கேட்டார், “உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?” (மத். 5:46).

யோபு தனக்காக வேண்டுதல் செய்வதற்கு முன்பாக, தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்ததினால், கர்த்தர் யோபின் சிறையிருப்பை மாற்றினார் (யோபு 42:10). “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பது பழமொழி.

நினைவிற்கு:- தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்று முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபி. 7:25).