ஆவியானவரோடு!

“நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்க ளுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவா. 14:16).

ஜெபிக்க விரும்புகிறவர்களுக்கென்று, கர்த்தர் தம்முடைய தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரைத் தந்திருக்கிறார். நீங்கள் ஜெபிப்பதற்கு அவர் தமது ஜெப ஆவியை, விண்ணப்பத்தின் ஆவியை, மன்றாட்டின் ஆவியை, கண்ணீரின் அபிஷே கத்தை தந்தருளுகிறார். பரிசுத்த ஆவியானவரோடு நீங்கள் இணைந்து ஜெபிக்கும் போது, அதிக நேரம் சோர்வடையாமல், ஊக்கத்தோடே ஜெபிக்க முடியும்.

ஆவியானவர் ஜெபிப்பதற்கு எப்படி உங்களுக்கு துணை நிற்கிறார்? நீங்கள் ஜெபிக்கும்போது வலது கையை நீட்டி, இயேசுவின் கைகளைப் பிடித்துகொள்கிறீர்கள். இடது கரத்தை நீட்டி, ஆவியானவருடைய கரத்தையும் பிடித்துக்கொள்ளுங்கள். ஆவியானவரின் கையை தொட்டு தடவிப் பார்த்தால், என்ன உணருவீர்கள்? அவருடைய கையிலேயிருக்கிற அபிஷேக எண்ணெயை உணருவீர்கள்.

“எண்ணெய்” என்பது, பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளம். ஆவியிலே நிரம்பி ஜெபிக்கிற ஜெபத்துக்கு அடையாளம். ஆவியானவரும் உங்களோடு இணைந்து, ஜெப நண்பராக ஜெபிக்க விரும்புகிறார். வேதம் சொல்லுகிறது, “அந்தப்படியே ஆவியானவரும், நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிற படியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26).

இங்கே கவனியுங்கள்! ஆவியானவர் வாக்குக்கொடுத்து, உங்களுடைய பெல வீனங்களிலே, நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று முன்வருகிறார். அவருடைய உதவியை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா? ஆகவே, ஆவியானவரோடு இணைந்து கரம்கோர்த்து உங்களுடைய தேவைகளை, மனம் விட்டு அவருக்கு சொல்லுங்கள்.

பல வேளைகளிலே ஆவியானவர், உங்களுக்குள்ளிருந்து தேம்புகிறதையும், கண்ணீர்விட்டு கதறுகிறதையும், பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறதையும் நீங்கள் உணர முடியும். அப். பவுல், ஜெப ஜீவியத்திலே சிறந்து விளங்க காரணம் என்ன? “நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன். கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன். நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடு வேன்” என்கிறார் (1 கொரி. 14:15).

தேவபிள்ளைகளே, ஜெபம்பண்ணும்போது ஒருநாளும் தனியாய் ஜெபம் பண்ணாதிருங்கள். உங்களோடு ஒன்றாயிருக்க ஆவியானவரும், கிறிஸ்துவும் முன்வந்திருக்கிறபடியால், அவரோடு இணைந்து, அவருடைய கரம்கோர்த்து ஜெபம்பண்ணுங்கள். அது மிக வல்லமையுள்ள ஜெபமாயிருக்கும்.

“நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணுங்கள்” (யூதா. 1:20). மட்டுமல்ல, பரலோக ஜெப பாஷையாகிய அந்நிய பாஷையையும் ஆவியானவர் உங்களுக்குள் கொண்டு வருகிறார். நீங்கள் மனதிலே நினைக்கிறதை யும்கூட, ஆவியானவர் அந்நிய பாஷையிலே பரலோகத்துக்கு தெரியப்படுத்துவார். நீங்கள் ஜெபிக்கும்போதே பரலோகம் அந்த ஜெபத்தைக் கேட்கும். தேவனாகிய கர்த்தர் “ஆம்” என்றும், “ஆமென்” என்றும் பதில் தருவார்.

நினைவிற்கு:- “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத் தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணுங்கள்” (எபேசி. 6:18).