வெளியரங்கமான பலன்!

“நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு” (மத். 6:6).

சில ஜெபங்கள் பொதுவான ஜெபங்கள். ஆனால் சில ஜெபங்களோ, அந்தரங்க ஜெபங்கள். அந்த ஜெபத்திற்கு எந்த இடையூறுகளும் ஏற்படக்கூடாது. ஆகவே கதவைப் பூட்டிக்கொள்ளுங்கள். எந்த சத்தமும் உங்களுடைய காதுகளிலே கேட்காதபடி, நூற்றுக்கு நூறு உங்கள் கவனத்தை கர்த்தர் பக்கமாய் செலுத்த வேண்டும். சிலர் காலையில் எழும்புவார்கள். ஜெபிக்க வேண்டுமென்ற நேரத்தில் தான், டெலிபோன் அலறும். வேறு சிலர் இன்றைக்கு யார் யார் எனக்கு Whats App-ல் செய்தி அனுப்பியிருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு ஜெபம்பண்ணலாம் என்று நினைப்பார்கள். உங்கள் இருதயக் கதவைப் பூட்டிவிடுங்கள்.

ஜான் வெஸ்லியின் தாயாருக்கு ஆயிரம் கடமைகள் இருந்தன. பதினெட்டு பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டின பின்பு, மதியம் இரண்டு மணிக்கு முழங்கால் படியிடுவார்கள். உள்ளே தாழிட்டார்களென்றால், ஒரு மணி நேரம் ஜெபித்த பிறகுதான் வெளியே வருவார்கள். எந்த பிள்ளையும், எந்த காரியமானாலும் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்பது திட்டமும், தெளிவுமான கட்டளை யாயிருந்தது. இதனாலே எல்லா பிள்ளைகளும், கர்த்தரோடு தனித்து ஜெபிக்க கற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய பிள்ளைகளில் அநேகர், வல்லமையான ஊழியக்காரர்களாய் எழும்பினார்கள்.

வேதத்திலே யாபேசைக் குறித்து வாசிக்கும் முன்னால், மிகப் பெரிய வம்ச வரலாறு பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. யாபேசுக்குப் பிறகும், அந்த வம்ச வரலாறு தொடர்கிறது. அவர்களும் யாபேசைப் போல, பூமியிலே பிறந்து வளர்ந்த வர்கள்தான். அவர்கள் ஜெபிக்காததினால், அவர்களுடைய பெயர் பட்டியலிலே அவர்களை குறித்து எந்த விசேஷத்தையும் காணோம். ஏதோ பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், மரித்தார்கள்.

ஆனால் யாபேஸ் ஜெபிக்கிறவனாயிருந்தபடியால், “தன் சகோதரரைப் பார்க் கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி, அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்” (1 நாளா. 4:9).

ஆனால் அவனுடைய துக்கத்தை சந்தோஷமாய் மாற்றும் வழி ஜெபம் மாத்திரமே என்பதை அவன் கண்டுபிடித்தான். அவன் அந்தரங்கத்தில், இருதயத்தை கிழித்து, தேவனோடு போராடி ஜெபித்திருக்க வேண்டும். “யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான். அவன் வேண்டிக் கொண்டதைத் தேவன் அருளினார் (1 நாளா. 4:10).

ஆம், அவன் கர்த்தரை நோக்கி ஜெபித்த ஜெபத்தினால், துக்கம் சந்தோஷமாய் மாறினது. அவன் எல்லைகள் பெரிதானது. கர்த்தருடைய கரம் அவனோடிருந்தது. அவன் ஆசீர்வதிக்கப்பட்டான். தேவபிள்ளைகளே, அந்தரங்கத்தில் முழங்கால் போட்டு ஜெபித்துப் பாருங்கள். கர்த்தர் ஒருநாளும் உங்களை மறைந்திருக்கவே விடமாட்டார். உங்களை உயர்த்தி, உயர்த்தி, மேன்மைப்படுத்துவார்.

நினைவிற்கு:- “நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப் படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு” (மத். 6:17).