ஐத்திகுவே எழும்பு!

“ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன், நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்” (அப். 20:9).

வருஷத்துக்கு ஒருமுறை புரட்டாசி மாதம் வரும்போது, அநேக வீடுகளில் கொலு பொம்மை அடுக்கி வைத்திருப்பார்கள். நானும், சில மாணவர்களும் கல்லூரிப் படிக்கிற நாட்களில், பிராமண தெருக்களுக்குப் போய், கொலு வைத்திருக்கிற பொம்மைகளை வேடிக்கைப் பார்ப்பதுண்டு. எங்களுக்கு அது பொழுது போக்காக மட்டுமல்ல, அவர்கள் தருகிற சுண்டல், வடைகளை சாப்பிடுவதும் ஒரு வேடிக்கை யாக இருக்கும். பெரிதும், சிறியதுமான இந்த பொம்மைகள் இருக்கிற இடத்திலே யிருந்துகொண்டிருக்கும். எழுந்தோ, நடந்தோ போவதில்லை.

இதுபோல அநேக கிறிஸ்தவர்களும்கூட, கர்த்தருக்காக எழுந்து ஊழியம் செய்யாமல், கொலு பொம்மைகளைப் போல, உட்கார்ந்திருக்கிற இடத்தில் உட்கார்ந்திருப்பார்கள். சிலர் சப்பாணியாயிருப்பார்கள். சிலர் ஊனமுற்றிருப்பார்கள். மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டு ஆவிக்குரிய ஜீவியத்தில் எந்த முன்னேற்ற முமில்லாமல், இருந்த இடத்திலேயே இருப்பார்கள்.

வேதத்தில் ஒரே ஒரு முறை மட்டும் தன் தலையை காட்டி, மற்ற எங்கும் காண முடியாத ஒரு வாலிபன்தான் ஐத்திகு. அப். பவுல் துரோவா பட்டணத்தில், ஒரு வீட்டின் மூன்றாவது மாடியிலே பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தார். நல்ல பேச்சாளர். கிடைப்பதற்கு அரிதான பேச்சாளர். வேதத்தின் ஆழ மான சத்தியங்களை போதிக்கிறவர். ஆனால் ஐத்திகு என்ற வாலிபனின் செவிகளில் ஒன்றும் ஏறவில்லை. அவருடைய உள்ளம் கர்த்தருடைய வார்த்தைக்காக எதிர்பார்த்து ஆவலோடு ஏங்கிக் கொண்டிருக்கவில்லை. நித்திரை மயக்கமடைந்தார்.

அந்த நாள் வாரத்தின் முதல் நாள் என்றும், அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடி வந்த நாள் என்றும் அப். 20:7-ல் வாசிக்கிறோம். பிரசங்க நேரத்தில் தூங்குகிறவர்களுமுண்டு. வேதம் வாசிக்கிற நேரத்தில் தூங்குகிறவர்களுமுண்டு. ஆராதனையில் தூங்குகிறவர் களுமுண்டு. ஆனால் இந்த ஐத்திகு, திருவிருந்து நேரத்திலேயே தூங்கிவிட்டார். ஜீவ அப்பமாகிய கிறிஸ்துவால் அவருக்குள் பிரவேசிக்க முடியவில்லை. கல்வாரி பாடு மரணங்கள் மூலமாக, தன் சரீரத்தைப் பிட்டுக் கொடுத்த, அவருடைய ஆசீர்வாதங்கள் அவருக்குள் போகவில்லை. எத்தனை பரிதாபம்!
மேல் வீட்டறையிலே விளக்குகள் எரிந்துகொண்டிருந்தது. அந்த வெளிச்சம், ஐத்திகு வாழ்க்கையிலே, அவரை பிரகாசிக்கச் செய்யவில்லை. ஐத்திகு, தேவ பிள்ளைகளோடுகூடதான் இருந்தார். விசுவாசி என்று அழைக்கப்பட்டார். ஆனால் தூக்கத்தினிமித்தம், அந்தகாரமாயிருந்தார்.

தூக்கத்தில் பல தூக்கங்களிருந்தாலும், சில தூக்கம் மயக்கமாகி, மரணத்துக்கு நடத்திச் செல்லுகிறது. சரீர மரணத்தைப் பார்க்கிலும், ஆன்மீக மரணம் கொடுமை யானது. சரீர மரணத்தை ஆண்டவர் நித்திரை என்று அழைத்தார். ஆனால் ஆன்மீக மரணமடைகிறவர்கள், அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலில் தள்ளப்படுவார்கள். நல்ல வேளை அப். பவுல் அங்கே இருந்ததினால், மரித்த ஐத்திகுவை உயிரோடு எழுப்பி, கர்த்தருக்காக எழும்பி பிரகாசிக்க, இன்னொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தார். தேவ பிள்ளைகளே, நீங்கள் கொலு பொம்மையாக இல்லாமல், கர்த்தருக்காக ஓடியாடி உழைக்கிறவர்களாக இருங்கள்.

நினைவிற்கு:- “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவா யிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து” (வெளி. 3:1,2).