எழும்பு, நாகமானே!

“என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால், நலமா யிருக்கும். அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்” (2 இரா. 5:3).

சீரியா தேசத்துப் படைத்தலைவனாயிருந்த நாகமானுக்கு, இஸ்ரவேல் தேசத்து அடிமைப் பெண் கூறிய ஆலோசனையின்படி அவன் எழும்பி, இஸ்ரவேல் தேசத்திலுள்ள சமாரியாவுக்குப் போய், அங்கேயுள்ள தீர்க்கதரிசியாகிய எலிசாவை சந்திக்க வேண்டும். குஷ்டரோகம் நீங்கி, புதிய ஆரோக்கியத்தோடு திரும்பி வர வேண்டும் என்று தீர்மானித்தார்.

நாகமான் பராக்கிரமசாலியாயிருந்தபோதிலும், அவனுடைய சரீரத்திலே, குஷ்ட ரோகம் இருந் தது. குஷ்டம் என்பது பாவத்துக்கும், சாபத்துக்கும் அடையாளம். அது தலைமுறை தலைமுறையாய் வரக்கூடியது. அதை குணமாக்கக்கூடியவர், இஸ்ரவேலின் தேவ னாகிய கர்த்தர். அவருடைய ஊழியக்காரன் தான் எலிசா.
தான் சுகமாகும்போது, எலிசா தீர்க்கதரிசிக்கு வெகுமதி கொடுக்க வேண்டும் என்பதற்காக பத்தாயிரம் சேக்கல் வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் பொன்னையும் கூடவே எடுத்துவந்தான்.

ஆனால் எலிசாவோ, நாகமானை பெரிதாய்க் கண்டுகொள்ளவில்லை. நேரில் வந்து வரவேற்கவுமில்லை. அவனிடத்தில் வேலைக்காரனை அனுப்பி, “நீ போய் யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணு. அப்பொழுது உன் மாமிசம் மாறி நீ சுத்தமாவாய் என்று சொல்லச் சொன்னான். நாகமான் அதை எதிர்பார்க்கவில்லை. “எலிசா வெளியே வந்து, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கைகளால் அந்த இடத்தை தடவி, இவ்விதமாய் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான்” என்று நினைத்துக்கொண்டிருந்தான்.

அற்புதத்தைப் பெறுவதற்கு, எழுந்து வந்தால் மட்டும் போதாது. விசுவாசித்தால் மட்டும் போதாது. கர்த்தருடைய வழிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்த வேண்டும். “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும், என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும், என் நினைவுகளும் உயர்ந் திருக்கிறது” (ஏசா. 55:8,9).

சோர்ந்துபோன நாகமானை, அவனுடைய ஊழியக்காரர் வந்து எழுப்பி, “தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்கு சொல்லியிருந்தால், அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம்பண்ணும். அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்ய வேண்டியது, எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்” (2 இரா. 5:13).

அப்பொழுது நாகமான் இறங்கி, தேவனுடைய மனுஷனின் வார்த்தையின்படியே, யோர்தானில் ஏழுதரம் மூழ்கினபோது, அவன் மாம்சம் ஒரு சிறு பிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.

தேவபிள்ளைகளே, நீங்கள் உங்களை தாழ்த்தினால், கர்த்தருடைய வார்த்தைக் கும், ஊழியக்காரர்களின் வார்த்தைக்கும் கீழ்ப்படிவீர்கள். தாழ்த்தாமல், என் ஊரி லுள்ள நதிகள் எவ்வளவு சிறப்பானவைகள் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அற்புதத்தைப் பெற முடியாது. ஆகவே உங்களுடைய விசுவாசத்தோடு, தாழ்மையை கூட்டிக்கொள்ளுங்கள். தாழ்மையுள்ளவர்களுக்கு கர்த்தர் கிருபையளிக்கிறார்.

நினைவிற்கு:- “உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தன. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து ஞானஸ்நானம் பெற்றான்” (அப். 9:18).