கட்டிலின் கீழே!

“ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்” (லூக். 8:16).

அழகாய் சுடர்விட்டு எரியும் விளக்கை, ஒருவனும் மரக்காலால் மூடமாட்டான், பாத்திரத்தின் கீழே வைக்கவுமாட்டான் என்பதை தியானித்தோம். இப்பொழுது மூன்றாவது இன்னொரு கட்டளையைக் குறித்து கூட, இயேசு சொல்லுகிறார், ஒருவன் விளக்கைக் கொளுத்தி கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான் என்கிறார். சிலர் கட்டிலின் கீழே விளக்கை வைத்துவிட்டு, மேலே ஜில்லென்று படுத்துத் தூங்குகிறார்கள். இங்கே மிகப் பெரிய ஆபத்து இருக்கிறது. தீயினால், கட்டிலோடு எரிந்துபோகும் ஆபத்து.

“கட்டில்” என்பது, கனநித்திரையின் ஆவியைக் குறிக்கிறது. சுகபோகமான வாழ்க்கையைக் குறிக்கிறது. அங்கே ஆத்துமபாரமில்லை. ஜெப ஆவியில்லை. நித்தியத்தைக் குறித்த அக்கறையில்லை. “சோம்பேறியே நீ எவ்வளவு நேரம் கைமுடக்கிக்கொண்டு படுத்திருப்பாய். எறும்பினிடத்தில்போ. அது உனக்கு புத்தி சொல்லித்தரும். சுறுசுறுப்பைப்பற்றி உனக்கு பிரசங்கம் செய்யும்” என்று ஞானி சொல்லுகிறார் (நீதி. 6:9,6).

காலை நேரத்தை, தூக்கத்திலே வீணாக்கிவிடாதிருங்கள். சோம்பேறித்தனத்தில் செலவிட்டுவிடாதிருங்கள். அதிகாலை நேரம், கர்த்தரோடு ஆழமான ஐக்கியங் கொள்ளும் இன்பமான ஜெபநேரம். கர்த்தரைத்துதித்து மகிழும்நேரம். “இயேசு அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஒரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்” (மாற். 1:35).

ஆம், அதிகாலையில்தான், இஸ்ரவேல் ஜனங்களுக்கு பனியோடுகூட மன்னாப் பொழிந்தது. இஸ்ரவேலர் காலையிலே எழும்பி, அன்றைக்கு தேவையான மன்னாவை சேகரித்துவிட வேண்டும். காலைதோறும் கர்த்தருடைய புதிய கிருபை களைப் பெறுவதற்கு, கர்த்தருடைய சமுகத்துக்குப் போய்விடுங்கள். அப்போது உங்கள் விளக்குகள், பிரகாசமாய் எரியும்.

ஆபிரகாம்லிங்கன் அமெரிக்கா ஜனாதிபதியாயிருந்தபோதிலும், அதிகாலை நான்கு மணிக்கெல்லாம், தேவ சமுகத்திலே நின்று, ஆலோசனை பெறுவாராம். அதன்பின்புதான் படைத் தளபதிகளிடமும், மற்றவர்களிடமும் சென்று தேசத்துக்கு செய்ய வேண்டிய நன்மைகளைக் குறித்து, ஆலோசனை செய்வாராம்.

தேவ பிள்ளைகளே, உங்களுடைய விளக்குகள் எரிகிறது மட்டுமல்ல, அது பிரகாசிக்க வேண்டும். உங்களுடைய நற்கிரியைகளினால், தேவனுடைய நாமம் மகிமைப்படவேண்டும். விளக்கு எரிவதற்கு, முதலாவது அதற்கு எண்ணெயாகிய பரிசுத்த ஆவியானவர் தேவை. உங்களுடைய உள்ளத்தின் ஆழமாகிய திரி, பரிசுத்த ஆவியானவராகிய எண்ணெய்க்குள் மூழ்கியிருந்தால் நீங்கள் பிரகாசிப்பீர்கள்.

நீரூற்றண்டையில் நாட்டப்பட்ட மரம், அருமையான கனிகளைக் கொடுக்கும். கன்மலையின்மேல் அஸ்திபாரமிடப்பட்ட வீடு, உறுதியாய் நிற்கும். அதுபோல ஆவியானவரோடு ஆழமான தொடர்பு கொண்ட ஜனங்கள், கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிப்பார்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்றால் மாத்திரம் போதாது. கர்த்தருக்காக எழும்பி ஊழியம் செய்ய வேண்டும். கர்த்தருடைய மகிமை உங்கள்மேல் உதித்திருக்கிறது. உங்கள் ஒளியினிடத்திற்கு, ராஜாக்களும், உங்கள் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும், ஓடி வருவார்கள்.

நினைவிற்கு:- “விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்” (யாத். 34 2).