உங்கள் விளக்குகள்!

“எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது. கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசா. 60:1).

நீங்கள் இரட்சிக்கப்படும்போது, கர்த்தருடைய தீபம், உங்களுக்குள் ஏற்றி வைக்கப்படுகிறது. பரலோக வெளிச்சமும், பிரகாசமும் உங்களுக்குள் வருகிறது. நீங்கள் போகப் போக, மகிமையின்மேல் மகிமையடைந்து கொண்டேயிருக்க வேண்டும். உங்களுடைய விளக்கு, மகிமையோடு பிரகாசித்தால்தான், அந்தகாரத் திலுள்ள மக்கள், ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வருவார்கள். அணைந்துபோயிருக்கிற விளக்குகள், மற்ற விளக்குகளை பற்றவைக்க முடியாது. பிரகாசிக்கச் செய்ய முடி யாது. அநேகருடைய தீபங்கள் ஏன் அணைந்துபோகிறது?

“விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள். அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்” (மத். 5:15). உங்களுடைய விளக்கு, விளக்குத்தண்டின்மேல் இருக்கிறதா? அல்லது மரக்காலுக்குள் மூடி வைக்கப்பட்டிருக்கிறதா? மரக்காலுக்குள் பிராணவாயு இல்லை. ஆகவே எழுந்துப் பிரகாசிக்க வழியில்லை. அது அணைந்துபோகிறது. மரக்கால் என்பது, பழங்காலத்தில் வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தப்பட்ட ஒரு அளக்கும் கருவி. அது தொழிலிலே, பணம் சம்பாதிப்பதின் வழியைக் காண்பிக்கிறது. சிலர் வேலை என்றும், வியாபாரம், தொழில் என்றும் இரவு பகலாக ஓடி,கர்த்தருக்கு நேரம் கொடுக்காமல் தங்கள் தீபங்களை அணைத்து விடுகிறார்கள். இரட்சிப்பை நஷ்டப்படுத்தி விடுகிறார்கள்.

இன்னும் சிலர் விளக்கைக் கொளுத்தி, பாத்திரத்தினால் மூடி விடுகிறார்கள் (லூக். 8:16). பாத்திரம் என்பது, குடும்ப வேலைகளைக் குறிக்கிறது. சகோதரிமார், காலை முதல் இரவு வரையிலும், சமையல் பாத்திரமும், கையுமாக காணப்படுகிறார்கள். மாமியாருக்கு ஒரு சமையல், கணவனுக்கு ஒரு சமையல், பிள்ளைகளுக்கு ஒரு சமையல். பாவம், அவர்களுக்கு ஜெபிப்பதற்குத்தான் நேரமில்லை.

அன்றைக்கு மார்த்தாள், சமையல் வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தாள். மரியாளோ, கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, அவருடைய வார்த்தைகளை ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்தாள். கவலைப்பட்டு கலங்கின மரியாளைப் பார்த்து இயேசு, “மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே. மரியாள் தன்னைவிட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்றார்” (லூக். 10:41,42).

ஒரு நல்ல கிறிஸ்தவ லாரி டிரைவர், பணத்துக்காக ஞாயிற்றுக்கிழமையும் லாரி ஓட்டினார். ஒரு இரவு லாரி ஓட்டிக்கொண்டே, களைப்பின் மிகுதியால் தூங்கிவிட்டார். லாரி பாதையை விட்டு விலகி, மலைச்சரிவில் பாதாளத்தை நோக்கி இறங்கியது. பயந்து நடுங்கி, “இயேசுவே” என்று அலறினார். அப்பொழுது கர்த்தருடைய வெண்மையான கரம், அந்த லாரியை திருப்பி, மறுபடியும் ரோட்டின்மேல் கொண்டு வந்து நிறுத்தினது. பாதாளத்துக்குச் சென்ற அவர் ஆத்துமாவை கர்த்தர் காத்தார் என்று உணர்ந்த அவர் கர்த்தருக்கு நன்றிசெலுத்தி, இனி ஓய்வு நாளில் லாரி ஓட்டுவதில்லை, என்ற முடிவுக்கு வந்தார்.

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத். 6:33). உங்கள் ஜெப வாழ்க்கையை, வேத வாசிப்பை, ஊழியர்களோடு அன்பின் ஐக்கியம் கொள்வதை, உங்கள் மரக்கால்களோ, பாத்திரங்களோ, தொழிலோ மூடிவிடாமல், உங்கள் ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கை யாயிரு” (லூக். 11:35).