பண்படுத்துங்கள்!

“உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள். கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது” (ஓசி. 10:12).

இது கர்த்தரைத் தேட வேண்டிய காலம். ஆத்தும அறுவடை செய்ய வேண்டிய காலம். கர்த்தருடைய வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்துகிறது மட்டுமல்ல, முழு தேசத்தையும், அதன் ஜனங்களையும் ஆயத்தப்படுத்த வேண்டிய காலம். முழு இருதயத்தோடும், முழு பெலத்தோடும் ஜெபித்து, கர்த்தரிடத்திலிருந்து பின்மாரி மழையை பெற்றுக்கொள்ள வேண்டிய காலம்.

ஒரு பக்கம், இது அறுவடையின் காலமாயிருந்தாலும், மறுபக்கமோ, வேகம் வேகமாய் விதைக்க வேண்டிய காலமாயிருக்கிறது. சீனா தேசத்தில் ஒருவனுடைய உள்ளத்தில் இரட்சிப்பின் விதையை ஊன்றும்போது, அவன் இரட்சிக்கப்பட்டு இயேசுவை விசுவாசிக்கிறான். மறு நாளிலே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுகிறான். அதற்கு அடுத்த நாளிலே ஊழியம் செய்யப் புறப்பட்டு விடுகிறான். பின்பு இரத்த சாட்சியாய் மரிக்கவோ, அல்லது கர்த்தருடைய வருகைக்கு திரள் கூட்டத்தை ஆதாயம் செய்வேன் என்றோ, சொல்லி துரிதமாய் உழைக்கிறான்.

தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள் என்று ஓசியா தீர்க்கதரிசி உரத்த குரலிலே சொல்லுகிறார். பண்படுத்தாமலிருக்கும் நிலம்தான் தரிசு நிலம். முட்கள், செடிகள், புற்கள், புதர்கள் நிறைந்ததுதான் தரிசு பூமி. இன்றைக்கும் இந்தியாவின் நிலைமை அதுதான். ஜனங்கள் இயேசுவை இன்னமும் அறியவில்லை. வலது கைக்கும், இடது கைக்கும் வித்தியாசமில்லாத கோடிக்கணக்கான மக்களுள்ள நம்முடைய தேசம் எழுப்புதலில்லாமல் வறண்டு கிடக்கிறது. ஜெப ஆவியில்லாமல், குடும்பங்கள் தரிசு நிலமாய் காணப்படுகின்றன. அங்கே செடியும் இல்லை. கொடியும் இல்லை, மரங்களுமில்லை, கோதுமை மணியுமில்லை. வழியோரமுள்ள நிலம்போலவும், கற்பாறையுள்ள நிலம் போலவும், முட்கள் நிறைந்த இடம்போலவும் இருக்கின்றன (மத். 13:7).

அதே நேரத்தில், நிலத்தைப் பண்படுத்தவோ, விதை விதைக்கவோ, உழுது நிலத்தை ஆயத்தப்படுத்தவோ போதுமான ஊழியர்களில்லை. போதுமான மிஷனெரிகளில்லை. தேவபிள்ளைகளே, நீங்கள் எழுப்புதலை வாஞ்சிப்பீர்களென் றால், ஒரு பக்கம் விதைக்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். மறுபக்கம், உண்மையும், உத்தமமுமான ஊழியர்கள் எழும்ப ஜெபியுங்கள். மறுபக்கம், அறுவடைக்காக வேலையாட்களை எழுப்பும்படி தேவனிடத்தில் மன்றாடுங்கள்.

1903-ம் ஆண்டு, வேல்ஸ் தேச மக்கள்மேல் பாரங்கொண்டு, ஈவான் ராபர்ட்ஸ் என்ற வாலிபன் ஊக்கமாய் ஜெபித்தார். நேரங்களை கர்த்தருக்கென்று கொடுத்து, உபவாசமிருந்து அழுது அழுது மன்றாடினார். அன்றைக்கு அந்தப் பட்டணத் திலிருந்தவர்களெல்லாம், சுரங்கத் தொழிலாளர்கள். நாளெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு, மாலை நேரத்தை சூதாட்டத்திலும், நாடகத்திலும், சிற்றின்பத் திலும் செலவழித்தார்கள். முழுக்க முழுக்க தரிசு நிலமான, அந்தப் பட்டணத்தை ஈவான் ராபர்ட்ஸ் என்ற வாலிபன், விளை நிலமாக மாற்றினார். ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குள், கர்த்தர் பெரிய எழுப்புதலை ஏற்படுத்தும்படி முந்நூறு ஜெபக்குழுக்களை ஏற்படுத்தி, இடைவிடாமல் ஜெபித்தார்.

திடீரென்று ஒரு நாள் அக்கினி விழுந்தது. தேவாலயத்தை மகிமை நிரப்பினது. லட்சத்துக்கும் அதிகமானபேர் மனந்திரும்பி, இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். ஆம், தேவபிள்ளைகளே, கர்த்தர் பட்சபாதமுள்ள தேவனல்ல. உங்களையும் பயன்படுத்துவார். ஆகவே, தரிசு நிலங்களை பண்படுத்துங்கள்.

நினைவிற்கு:- “ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன், ஆசீர்வாதமான மழை பெய்யும்” (எசேக். 34:26).