நீதியின் விதைகள்!

“நீங்கள் நீதிக்கென்று விதை விதையுங்கள், தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்” (ஓசி. 10:12).

நீங்கள் விதைக்கிறபடிதான் அறுப்பும் இருக்கும். நீங்கள் ஒரு விதையை விதைத் தால், பழத்தை அறுப்பீர்கள். ஒரு சிந்தனையை விதைத்தால், குணாதிசயத்தை அறுப்பீர்கள். நீங்கள் விதைக்கும் சுபாவம், குணாதிசயங்களைப்போலவே, உங்கள் நித்தியம் அமைந்திருக்கும்.

மலைப் பிரசங்கத்தின் பெரும்பகுதி விதைத்தலைப் பற்றியதாகும். நீங்கள் சாந்தகுணத்தை விதைத்தால், பூமியை சுதந்தரித்துக்கொள்வீர்கள். மிகச் சிறந்த அறுப்பைப் பார்ப்பீர்கள். இருதயத்தில் சுத்தமுள்ள விதைகளை விதைத்தால், தேவ புத்திரர் என்று அழைக்கப்படும் பேர் பெறுவீர்கள். இரக்கத்தை விதைத்தால், மற்றவர்களிடமும், கர்த்தரிடமுமிருந்து இரக்கத்தைப் பெறுவீர்கள்.

சிந்தனை விதைகளுமுண்டு. பேச்சு விதைகளுமுண்டு. செயலின் விதைகளு முண்டு. அதே நேரத்தில், காலையிலிருந்து இரவு படுக்கும் வரையிலும் நீங்கள் உங்களுக்குள்ளே விதைக்கக்கூடிய விசுவாச விதைகளுமுண்டு. வாக்குத்தத்த விதைகளுமுண்டு. உங்களுடைய வாழ்க்கையிலே மற்றவர்களை ஊன்ற கட்டக்கூடிய உற்சாக வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். சோர்வு நேரத்திலே தாங்கக்கூடிய ஆறுதலின் வார்த்தைகளைப் பேசுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கென்று விதைக்கப்பட வேண்டிய நல்ல செயல்களுமுண்டு. கர்த்தருக்கென்று ஊழியத்தில் விதைக்கப்பட வேண்டிய வசன விதைகளுமுண்டு.

ஆகவே, எப்பொழுதும் அன்பின் விதைகளை, விசுவாச விதைகளை, நீதியின் விதைகளை, செயலின் விதைகளை சோர்ந்துபோகாமல் விதையுங்கள். நித்தியத்திலே அதன் பலனைக் கண்டு நீங்கள் பூரித்துப்போவீர்கள். இயேசுகிறிஸ்து விதைத்த விதைகளைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி எழுதுகிறார். “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார். என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்” (ஏசா. 53:11).

ஜப்பானில் ஒரு விவசாயி, நீங்கள் நூற்றுக்கு நூறு பலன் பெறும்படி எப்படி விதைக்க வேண்டுமென்று விளக்கி சொல்லுகிறார். ஒரு பக்கத்தில் நல்ல விதை களை எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு நல்ல அருமையான செம்மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னொரு பக்கத்தில் நல்ல உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நடுவிலே அந்த விதையை வைத்து மண்ணையும், உரத்தையும் கலந்து, கைபிடி மண்ணாக, உருண்டையாக பிடியுங்கள். செல்லுகிற இடங்களிலெல்லாம் விதைத்துக் கொண்டே போங்கள்.

மழை பெய்யும்போது, நீங்கள் விதைக்கிற விதை அழகாக கீழே விழுந்து முளைத்தெழும்பி பலனைத் தரும். அந்த விதையை சுற்றி மண்ணும், உரமும் இருப்பதால் ஆகாயத்துப் பறவைகள் அதை தூக்கிச் செல்ல முடியாது. பூச்சிகளோ, மற்ற கிருமிகளோ அதை அழிக்கவே முடியாது. இப்படி அவருடைய குடும்பத்தினர் உருண்டையாக விதைகளை விதைத்ததினிமித்தம் ஜப்பானில் ஏறக்குறைய ஐம்ப தாயிரம் மரங்கள் வளர்ந்திருக்கின்றன என்று மகிழ்ச்சியோடே கூறுகிறார்.
இயேசு கிறிஸ்துவை, “விதைக்கிறவன்” என்று வேதம் சொல்லுகிறது. அவரோடு கூட வசன விதைகளை விதைக்கிற ஊழியத்திலே நில்லுங்கள். சமயம் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் சுவிசேஷத்தை ஜனங்களுக்கு ஜாக்கிரதையாய்ப் பிரசங்கம் பண்ணுங்கள். பரலோகத்தில் உங்களுடைய பலன் மிகுதியாயிருக்கும்.

நினைவிற்கு:- “தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்” (கலா. 6:8).