அறுப்புக்கு தயார்!

“இதோ, வயல்நிலங்கள், இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று , உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்” (யோவா. 4:35).

ஒரு சிறிய செருப்புக் கடை. அங்கே துண்டு தோல்களும், கிழிந்த செருப்புகளும், பழைய சப்பாத்துக்களும், நூல்களும், ஊசிகளும் சிதறிக்கிடக்கிறது. ஆனால், சுவரில் ஒரு பெரிய இந்திய தேச வரைபடம் தொங்கிக்கொண்டிருக்கிறது. அதிலே ஆங்காங்கே வேத வசனம் பேனாவினால் எழுதப்பட்டிருக்கிறது. சில இடங்கள், சிகப்பு நிற பேனாவினால் குறிக்கப்பட்டிருக்கிறது.

அங்கே ஒரு ஏழ்மையான வாலிபன், ஒரு கையினால் செருப்பை தைத்துக் கொண்டு, இந்திய தேச படத்தை ஏக்கத்தோடு பார்ப்பதும், கண்ணீர்விட்டு அழுவதும், உதடுகளை அசைத்து ஜெபிப்பதும், பின்பு குனிந்து செருப்பை தைக்கிறதுமாயிருக்கிறார். அவருடைய முகத்தில் ஏக்கமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. உள்ளம் பொங்கிக் கொண்டிருக்கிறது. கண்கள் தேம்பி தேம்பி அழ, “எப்பொழுது இந்தியாவை சந்திப்பீர் ஆண்டவரே?” என்று கேட்டுக்கொண்டே யிருக்கிறது. ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல, பல மாதங்கள் இந்தியா தேச படத்தை நினைத்து அவர் கண்ணீர் விட்டார்.

ஒருநாள் அந்த வாலிபன், தன் கடையை இழுத்து மூடினார். இங்கிலாந்து தேசத் திலிருந்து மனைவி, பிள்ளைகளோடு மிஷனெரியாக, இந்தியா வந்து சேர்ந்தார். அவர்தான் வில்லியம் கேரி. “மிஷனெரிகளின் தந்தை.” என்று அழைக்கப்படுகிறார். அவர் பல இந்திய மொழிகளிலே, வேதாகமத்தை மொழிபெயர்த்தார்.

தற்போது இந்தியாவில் 135 கோடி மக்கள் உண்டு. 1652 விதமான மொழிகளுண்டு. ஏறக்குறைய மூவாயிரம் வித ஜாதி மக்கள், மலைதேச மக்களிருந்தாலும், எண்பது சதவிகிதத்துக்கு மேலாக, சுவிசேஷம் எட்டவேயில்லை. அறுப்புக்கு வேலையாட் களை அனுப்பும்படி, எஜமானை வேண்டிக்கொள்வீர்களா? “காலங்கள் கடந்து போகிறதே; என் ஆடுகளை விசாரிப்பாரில்லையே. ஜனங்களை சாத்தானுடைய கையிலிருந்து விடுவித்து, பரலோக மகிமையைக் காண்பிப்பார் ஒருவருமில்லையே” என்று கர்த்தர் அங்கலாய்க்கிறார்.

ஒரு முறை டி.எல் ஆஸ்பார்ன் என்ற சுவிசேஷகர், “நான் இன்று ஆத்தும ஆதாயம் செய்து சுவிசேஷகனாய் இருப்பதன் காரணம், அறுவடை மிகுதியாயிருப்பதுதான். என் பரம தகப்பனார் வயலில் அறுவடை செய்ய, வேலைக்கு ஆளில்லாமல் அவர் தனியாய் தவித்துக்கொண்டிருக்கும்போது, என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என்று சொல்லி ஊழியக்களத்தில் குதித்தார். ஓரல் ராபட்ஸ் என்ற பக்தன், “அழிந்து போகும் ஆத்துமாக்களின் கூக்குரல், இரவு பகலாக என் காதுகளில் தொனித்துக் கொண்டேயிருக்கிறது. நரகத்தில் தொனிக்கும் “ஐயோ,” என்ற கண்ணீரின் குரல் என் இருதயத்தைப் பிழிகிறது. நான் ஆத்தும அறுவடை செய்யாமலிருப்பது எப்படி?” என்று கேட்டார்.

அறுவடை மிகுதியாயிருக்கிற, வயல் நிலங்களை இயேசுகிறிஸ்து பார்த்தபோது, அவருடைய உள்ளம் உருகினது. மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல இருந்த மக்களைப் பார்த்தபோது, அவர் பரிதபித்தார். மனதுருகினார். மட்டுமல்ல, ராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவித்தார். அவர் தம்முடைய சீஷர்களுக்கு ஆத்தும பாரத்தைப் போதித்தார். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வயல்நிலத்தில் நீங்களும் அவரோடுகூட அறுவடையில் பங்கு பெறுவீர்களா? விளைந்திருக்கிற வயல் நிலங்களை நோக்கிப் பாருங்கள்.

நினைவிற்கு:- “பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்” (யோவேல் 3:13).