வசன விதை!

“ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான்” (ஆதி. 24:63).

ஈசாக்கு விதை விதைத்தபோது, பஞ்சகாலத்திலும் நூறு மடங்கு பலனடைந்த தன் இரகசியம் என்ன? என்பதை தியானித்து வருகிறோம். ஈசாக்கில் காணப்பட்ட சிறப்பான ஒரு காரியம், வேத வசன தியானமாகும். மாலை நேரங்களில் தனிமையாக வயல் ஓரங்களில் நடந்துச் சென்று, கர்த்தரைக் குறித்தும், அவருடைய வார்த்தைகளைக் குறித்தும் தியானிப்பது அவருக்கு வழக்கமாக இருந்தது. கர்த்தருடைய வார்த்தைகளைத் தியானித்த அவர், முற்பிதாக்களின் வரிசையிலே இடம்பெற்றார். ஆகவே அவர் விதைத்தபோது, நூற்றுக்கு நூறு பலன் கிடைத்தது.

நீங்கள் வேதத்தை வாசிக்கும்போது, நிறுத்தி, உணர்ந்து தியானத்தோடு வாசியுங்கள். கர்த்தருடைய மகிமையையும், மகத்துவத்தையும் எண்ணிப் பாருங்கள். உரிமையாக்க வேண்டிய வாக்குத்தத்த வசனங்களை, ஞாபகப்படுத்தி சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். கர்த்தர் யோசுவாவைப் பார்த்து சொன்னார், “இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய். அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்” (யோசு. 1:8).

நீங்கள் வசனத்தை தியானிப்பதோடு விட்டுவிடாதிருங்கள். செல்லுகிற இடங் களிலெல்லாம் வேத வசனங்களைப் பேசுங்கள். ஆவியும், ஜீவனுமாயிருக்கிற வசனங்களைப் பேசுங்கள். விசுவாச வார்த்தைகளைப் பேசுங்கள். வேதம் சொல்லுகிறது, “விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்” (மாற். 4:14). “விதை தேவனுடைய வசனம்” (லூக். 8:11).

இந்தியாவிலே வசன விதைகளை விதைக்கும்படி எத்தனையோ ஆயிரம் மைல் தூரங்களை கடந்து, தோமா அப்போஸ்தலன் வேத வசனத்தை இந்தியாவில் விதைத்தார். அப்படி விதைத்ததினிமித்தம், அவர் இரத்த சாட்சியாய் மரிக்க வேண்டியதிருந்தது. 17-ம் நூற்றாண்டிலிருந்து, எத்தனையோ ஐரோப்பியர்கள் இந்தியா வந்து, சுவிசேஷ விதைகளை மக்கள் மத்தியிலே பிரசங்கித்தார்கள். அவர்கள் தங்களுடைய உயிரையும் பணயம் வைத்து, இரத்தச் சாட்சிகளாய் மரித்ததினால், அவர்கள் ஊன்றிய வசன விதைகள், இன்றைக்கு நூறு மடங்காக பலன் தருகிறன்றன.

தேவபிள்ளைகளே, நீங்கள் விதைக்கிற வேத வசனங்கள், ஒருபோதும் வெறுமை யாய்த் திரும்பாது. “அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான். ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்” (சங். 126:6).

வசனத்தை விதைத்த மிஷனெரிகளுக்கு, இம்மையிலே ஒருவேளை பலன் கிடைக்காமற்போனாலும், நித்தியத்திலே, அவர்களுக்கு மிகுந்த பலன் உண்டு. நீங்கள், சொந்த அனுபவங்களையும், கட்டுக்கதைகளையும் பிரசங்கிக்கிறதை விட ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளை விதைகளாக, ஆத்துமாக்களின் உள்ளத்தில் ஊன்றுங்கள்.

எங்கே குழப்பங்கள் இருக்கிறதோ, அங்கே தேவனுடைய வார்த்தை யானது அமைதலையும், சமாதானத்தையும் கொண்டு வரும். எங்கே கட்டுகள் இருக்கிறதோ, அங்கே விடுதலையைக்கொண்டு வரும். எங்கே தோல்வியிருக் கிறதோ, அங்கே ஜெயத்தைக் கொண்டு வரும்.

நினைவிற்கு:- “வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது” (மத். 5:18).