தீவினை விதைகள்!

“மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான். தன் மாம்சத்திநகென்று விதைக்கிறவன் , மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்” (கலா. 6:7,8).

சிலர் மாம்சத்துக்கென்று விதைப்பார்கள். அப். பவுல் எழுதினார், “மாம்சத்தின்படி நடக்கிறவர்கள், மாம்சத்துக்குரியவைகளை சிந்திக்கிறார்கள். ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளை சிந்திக்கிறார்கள். மாம்ச சிந்தை மரணம். ஆவியின் சிந்தையோ, ஜீவனும் சமாதானமுமாம்” (ரோம. 8:5,6).

“மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள் மார்க்க பேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப் பதில்லை” (கலா. 5:19-21).

தாவீது, நல்ல ஆவிக்குரிய மனுஷனாயிருந்தும், கொஞ்சம் தன் மாம்சத்தை சபலத்துக்கு ஒப்புக்கொடுத்ததினால், பிற்காலத்தில் எவ்வளவோ சஞ்சலங்களை அறுக்க வேண்டியதிருந்தது. பிறனுடைய மனைவியை அபகரித்ததினிமித்தம், (2 சாமு. 12:10). தாவீதின் மறுமனையாட்டிகள், சூரிய வெளிச்சத்திலே அப்சலோமினால் கற்ப்பழிக்கப்பட்டார்கள். தாவீது பத்சேபாளின் கணவனாகிய உரியாவை கொன்றதினால், கர்த்தர் சொன்னார், “உன்னையும், உன் வீட்டையும் விட்டு பட்டயம் என்றென்றைக்கும் விலகுவதில்லை.”

ஆமான் என்பவன், மொர்தெகாயை கொல்ல வேண்டுமென்று, தூக்குமரம் செய்வித்தான். யூதரை கூண்டோடு ஒழிக்க வேண்டுமென்று, அவர்களுக்கு விரோதமாய் சதித்திட்டங்களை தீட்டினான். ஆனால் அவன் உண்டாக்கின அதே தூக்குமரத்தில் அவன் தொங்கி மரிக்க வேண்டியதாயிற்று. தேவபிள்ளைகளே, மற்றவர்களை தீமையாக எண்ணுவதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். “முற்பகல் இன்னா செய்யின், பிற்பகல் தனக்கு இன்னா தானே வரும்.”

அருவருப்பான அசுத்த சிந்தைகள் உங்களுக்குள் எழும்பும்போதே, அவைகளை சிறையாக்குங்கள். “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயி ராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்” (2 கொரி. 10:4,5).
உங்களுடைய சிறு பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும்போது, அங்கே பலவிதமான பாடங்கள். கிறிஸ்துவுக்கு விரோதமான, நாத்தீகர்களை உடையதான விதைகளும் விதைக்கப்படக்கூடும். குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்ற டார்வினின் விதைகள் விதைக்கப்படக்கூடும். அதை முளையிலே கிள்ளியெறிந்து, வேதத்தை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. டெலிவிஷனைத் திறந்தால் ஆபாசக் காட்சிகள், சத்துருவின் விதைகளாக, உங்கள் சிந்தையைத் தாக்கிவிடக்கூடும்.

உங்கள் தலைக்குமேல் ஆயிரம் பறவைகள் பறந்துச் செல்லலாம். ஆனால் சில பறவைகள், உங்களுடைய உள்ளமாகிய கிணற்றின்மேல் வந்து அமரும். அதன் எச்சத்தில் ஆயிரக்கணக்கான ஆல விதைகள் அடங்கியிருக்கின்றன. நீங்கள் கவலையற்றிருப்பீர்களானால், உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தை தூர்த்துவிடும்.

நினைவிற்கு:- “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” (நீதி. 4:23).