வெற்றியின் இரகசியம்!

“கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” (சங். 126:5).

மீண்டும் ஒரு நாள், இதே வசனத்தை சற்றே நாம் தியானிப்போமாக. பொதுவாக, ஜனங்களுக்கு கெம்பீரமாய், ஆடம்பரமாய் அறுவடை செய்யவும், தங்கள் களஞ் சியங்களை நிரப்பவும் ஆசை. ஆனால் கண்ணீரோடு விதைப்பதற்கு, அவர்கள் பிரியப்படுவதில்லை. அரிய பெரிய காரியங்களைச் செய்து முடிக்க வேண்டுமென்று வாஞ்சை. ஆனால் அதற்காக தேவ சமுகத்தில் அமர்ந்து தெய்வீக ஆலோசனையையும், வாக்குத்தத்தத்தையும் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை.

நியாயாதிபதியாகிய கிதியோனின் காலத்தில், “இஸ்ரவேலர் விதை விதைத் திருக்கும்போது, மீதியானியரும், அமலேக்கியரும், கிழக்கத்திப் புத்திரரும், அவர் களுக்கு விரோதமாய் எழும்பி வந்து, அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும் வைக்காதே போவார்கள்” (நியாயா. 6:3,4).

ஜெபமில்லாதபடியால், இஸ்ரவேலரால் கெம்பீரமாக அறுவடை செய்ய முடியாமற்போனது. உங்களுக்கு ஜெபம் இல்லாவிட்டால், உங்களுடைய முயற்சி கள் வீணாகிப் போய்விடும். கூர் மழுங்கின கோடரியை உபயோகித்தால், அதிக பலனை உபயோகிக்க வேண்டியது வரும் அல்லவா?

சிலர் காலை எழுந்ததும், பல திட்டங்களை தீட்டுவார்கள். ஜெபிக்க மாட்டார்கள். அதை செய்து முடிக்க வேண்டும், இதை செய்து முடிக்க வேண்டுமென்று அவசரப்படுவார்கள். ஓடியோடி உழைத்தாலும், சோர்வையும், தோல்வியையும்தான் காண்பார்களேத் தவிர, ஜெயத்தைக் காண முடிவதில்லை. அதிகமான வேலை இருக்கிறது என்பதற்காக, உங்கள் ஜெப நேரத்தை ஒருபோதும் பலியிட்டு விடா திருங்கள். மார்ட்டின் லூத்தர் சொன்னார், “எனக்கு எப்பொழுது அதிகமான வேலையிருக்கிறதோ, அப்பொழுது அதிகமாக ஜெபிப்பேன். கர்த்தர் அத்தனை வேலை களையும் எனக்கு எளிதாக, குறுகிய நேரத்தில் செய்து தருவார்” என்றார்.

உதாரணமாக, உங்களுடைய வேலை விஷயமாக, அல்லது பதவி உயர்வுக்காக, ஒரு முக்கியமான அதிகாரியைப் பார்க்க அவசரமாய் புறப்படுகிறீர்கள். ஜெபிக்காமல் போனீர்களென்றால், எவ்வளவோ மைல் தூரம் கஷ்டப்பட்டு போனாலும், அவரைப் பார்க்க முடிவதில்லை. தோல்வியாய்த் திரும்புவீர்கள்.

ஆனால் கண்ணீரோடு ஜெபித்து புறப்பட்டுப் போவீர்களென்றால், போகும் வழியில் அவர் உங்களுக்கு எதிராக வருவார். மகிழ்ச்சியோடு உங்களை சந்தித்து, உங்களுடைய இருதய விருப்பங்களை நிறைவேற்றித் தருவார். காரியம் சுலபமாய் முடியும். கர்த்தர் உங்களுக்காக பாதையை ஏற்படுத்தி, யாவையும் செய்து முடிக்கிறதை உங்களுடைய கண்கள் காணும்.

ஒருமுறை எங்களுடைய ஊழியத்திற்கு ஒரு நல்ல வேன் (Van) வாங்க வேண்டு மென்று விரும்பினேன். அந்த நேரம் ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனம், தங்களுடைய வேனை விற்பதாக விளம்பரம் தந்தது. போய்ப் பார்த்தேன். பிடித்திருந்தது. அதிக மாய் ஆசைப்பட்டேன். என்னிடத்தில் போதுமான பணமில்லை. கடன் வாங்க நான் விருப்பப்படவில்லை. கர்த்தர் சொன்னார், “நீ போதுமான அளவு விதைத் திருந்திருப்பாயானால், இப்பொழுது நீ இந்த வேனை பெற்றுக் கொண்டிருக்கலாமே” என்றார். விதைக்காமல் எப்படி அறுவடையை எதிர்பார்க்க முடியும்?

தேவபிள்ளைகளே, முதலிலேயே விசுவாச விதைகளை விதைத்துவிடுங்கள். அப்போது நம்பிக்கையோடு, அறுவடை செய்ய முடியும்.

நினைவிற்கு:- “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு. அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” (சங். 37:5).