கனியும், விதையும்!

“பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்” (ஆதி.1:11).

கனிகளுக்குள் விதைகள் மறைந்து இருக்கின்றன. ஒவ்வொரு விதைக்குள்ளும் ஜீவன் இருக்கிறது. அந்த ஜீவன் புதிய மரங்களை முளைப்பிக்கக்கூடிய வல்லமை உடையதாய் இருக்கிறது. கனிகள் இல்லாமலும், விதைகள் இல்லாமலும் இருக்கிற, விசுவாசியால் ஆத்தும ஆதாயம் செய்ய முடியாது.
மரங்கள் கனிகளைக் கொடுக்கின்றன. அதே நேரத்தில் விதைகளையும் பிறப்பித்து, தங்கள் ஜாதி மரங்களை இனவிருத்தி செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றன. கனிகளால் பறவைகளைக் கவருவதற்கு, அந்தக் கனிகளில் அழகிய நிறத்தையும், மணத்தையும், சுவையையும் வைப்பது மட்டுமல்ல. உள்ளே கெட்டி யான விதைகளையும் வைத்து, அதன் மூலம் அந்த மரங்கள் இனப்பெருக்கம் செய்து, நூறாக ஆயிரமாக பெருகி பூமியை நிரப்புகின்றன. விதையே இல்லாமல் வெறும் கனியை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தால், அந்த மரம் பெருகாமல் விரைவில் அழிந்துவிடும் அல்லவா!

கனி கொடுக்கும் விசுவாசிகளே, உங்களில் ஆத்தும ஆதாய விதைகள் உண்டா? நீங்கள் நல்ல கிறிஸ்தவர்கள் என்று பெயர் பெற்றால் மட்டும் போதாது. ஆத்தும ஆதாயம் செய்யும் கிறிஸ்தவர்களாகவும் விளங்க வேண்டும். இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மூன்று சதவீதத்திற்கும், ஐந்து சதவீதத்திற்கும் இடையே பல ஆண்டுகளாகத் தள்ளாடிக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? ஆத்தும ஆதாயம் போதுமான அளவு செய்யாததினால் அல்லவா?

மீண்டும் அந்தக் கனிகளையும், விதையையும் சிந்தித்துப் பாருங்கள். ஒரு சிறு விதைக்குள் பெரிய மரத்தின் குணாதிசயங்கள் அனைத்தும் அடங்கியிருக்கிறது. அந்த மரத்தின் இலைகள், பூக்கள், பழங்கள் மற்ற எல்லா சுபாவங்களும் அந்த சிறிய விதைக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பது எத்தனை பெரிய ஆச்சரியம்! ஒரு சிறிய பாட்டிலுக்குள், மலை போன்ற பெரிய ராட்சதன் உறங்கி கிடப்பதைப் போல, அந்த விதைக்குள் பெரிய மரங்கள் அடங்கியிருக்கின்றன.

ஒவ்வொரு விதைக்குள்ளும் ஜீவன் இருக்கிறது. அந்த விதை வேரூன்றி வளரும் வரையிலும், தேவையான உணவும் அதற்குள் இருக்கிறது. உள்ளே இருக்கும் இளம் குருத்து பாதுகாக்கப்படும்படி, அந்த விதையை சுற்றிலும் கடினமான தோடு காணப் படுகிறது. கர்த்தர் எத்தனை ஞானமாய் அதை சிருஷ்டித்திருக்கிறார். பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் (மத். 13:31,32).

தேவபிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய ஜீவ விதைகள், தேவனுடைய வசனம் (லூக்கா 8:11). கர்த்தருடைய வார்த்தைகள் மட்டுமே, ஆவியாயும், ஜீவனாயும் இருக்கின்றன. வசன விதைகளை விதைக்கும்போது, ஆத்துமாக்கள் ஆதாயம் செய்யப்படுகிறார்கள். புதிய ஜீவனோடு கிறிஸ்து அவர்கள் வாழ்க்கையில் முளைத்து எழும்புகிறார். தேவபிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையிலும் ஊழியத் திலும், தேவ வசனங்களையே விதைப்பீர்களானால், நல்ல பலனைக் காண்பீர்கள்.

நினைவிற்கு:- “சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது” (லூக்கா 8:8).