சந்ததி, சந்தானம்!

“வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன். உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்” (ஏசா. 44:3).

ஆற்றினுடைய மிக மிக முக்கியமான ஒரு குணாதிசயம், தேசத்தை செழிக்கப் பண்ணுவது. நதி, ஜனங்களுடைய தாகத்தைத் தீர்க்கிறது. ஆசீர்வாதமான கனிகளை விளையச் செய்கிறது. வயல்கள் தானியங்களைக் கொடுக்கிறது. மீன்களும், மச்சங் களும் ஏராளமாய்ப் பெருகுகின்றன. பெரிய ஆறுகள், போக்குவரத்திற்கு உதவியா யிருக்கிறது.

தாகம் தீர்க்கும் தண்ணீரை, ஜனங்களுக்குக் கொடுப்பதினால், நதிகளால் பெரிய ஆசீர்வாதமுண்டு. “தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காதே” என்பது பழமொழி. உலகத்திலுள்ள பெரும் பெரும் நகரங்களெல்லாம், பெரிய நதிக் கரையோரங்களிலே கட்டப்பட்டவை. இந்தியாவின் பெரிய நாகரீகமான மொகஞ் சொதாரோ, ஹரப்பா நகரங்களெல்லாம் சிந்து, கங்கை, சமவெளிகளிலே ஏற்பட்ட தாகும்.

எகிப்தின் முழு நாகரீகமும், அங்கிருந்த நைல் நதிக்கரையிலே அமைந்திருந்தது. கர்த்தர் அந்த நதியை அடித்தபோது, அது இரத்தமாய் மாறினதினால், அங்குள்ள மீன்களெல்லாம் செத்து நாறினது. தண்ணீருக்காக அலைமோதின. ஜனங்கள், நதிக்கரையோரத்திலே நீரூற்றுகளைத் தோண்டினார்கள்.
மனிதனுடைய உள்ளமும் தாகம் நிறைந்த ஒரு உள்ளம்தான். சரீரத்தில் தாகம் இருப்பதுபோல, அவனுடைய ஆத்துமாவில் பலவிதமான தாகங்கள் எழும்பு கின்றன. தன் மீது யாராவது அன்பு பாராட்டமாட்டார்களா? என்று உணர்ச்சி வசத்தோடும், தாகத்தோடும் ஏங்குகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். சிலருக்கு பேர், புகழின்மேல் தாகம். சிலருக்கு, அரசாட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்ற தாகம். வேறு சிலர், இச்சைகள் மேலும், சிற்றின்பங்கள்மேலும், உலகம் காண்பிக்கிற பல பாவசுவைகளை நோக்கியும், பைத்தியங்களாய் ஓடுகிறார்கள்.

ஆனால், ஆத்துமாவின் தாகத்தைத் தீர்க்க கர்த்தர், இரட்சிப்பையே நீரூற்றாகக் கொண்டு வருகிறார் (யோவான் 4:14). அவன் தாகத்தைத் தீர்க்க, ஜீவத்தண்ணீருள்ள நதிகளை கட்டளையிடுகிறார் (யோவா. 7:37,38) இந்த நதி, பரலோகத்திலிருந்து புறப்பட்டு வருகிற அபிஷேக நதியாகும்.
இந்த நதி புதிய புதிய கிருபைகளினால் உங்களை நிரப்புகிறது. புதிது புதிதான கனிகளை உங்களுக்குள் கொண்டு வரு கிறது. தேவபிள்ளைகளே, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர், உங்களை ஆவியின் வரங்களினாலும், கனிகளினாலும் நிரப்புவார். அப்பொழுது நீங்கள் சந்தோஷத்தோடு “என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” என்று பூரிப்படைய முடியும் (சங். 23:5).

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒவ்வொரு நாளும் பரலோக நதியை தாகத் தோடு நோக்கிப் பார்த்து, “இன்று எனக்கு ஒரு புதிய நிரப்புதலைத் தாரும்” என்று கேட்பதுதான். அப்பொழுது, தேவ வசனத்தின்படி ஊழியம் செய்ய உங்களால் முடியும். நீங்கள் ஜீவநதியாக இந்த உலகத்தின் வழியாக கடந்துச் செல்லும்போது ஜனங்களுக்கு அநேக ஆசீர்வாதங்கள் கிடைக்கும். உங்களைக் குறித்து வேதம் சொல்லுவது என்ன? “இந்த நதி போகும் இடமெல்லாம் சஞ்சரிக்கும் ஜீவ பிராணி கள் யாவும் பிழைக்கும்” (எசேக். 47:9).

நினைவிற்கு:- “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும். அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப் போலும் இருக்கும்” (ஏசா. 48:18).