ஆசீர்வாதமான நதி!

“அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங் களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது” (எண். 24:6).

புறஜாதி தீர்க்கதரிசியான பிலேயாம், மலையுச்சியிலிருந்து கீழேயிருக்கிற இஸ்ரவேலரைப் பார்த்தபோது, அவர்கள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும் காணப்பட்டார்கள். அப்படி யானால், அவர்கள் எவ்வளவு கனி கொடுத்திருப்பார்கள் என்று அறியலாம். பரிசுத்த ஆவியானவருடைய பல சின்னங்களிலே, ஜீவ நதியும் ஒன்றாகும். அது ஜீவனுள்ள நதி மட்டுமல்ல, விரிந்துகொண்டே செல்லுகிற, பரவிப்போகிற ஆறும் அவரே. உங்களை கிறிஸ்துவைப்போல மாற்றுவதே, ஆவியானவருடைய நோக்கம். கனி கொடுக்கும் வாழ்க்கை என்றால் என்ன?

கர்த்தர் பரிசுத்தமாயிருக்கிறதுபோல, நீங்களும் பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க வேண்டும் (1 பேது. 1:15). அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்களை சுத்திகரித்துக் கொள்ளவேண்டும் (1 யோவா. 3:3). அவர் அன்புகூர்ந்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருக்க வேண்டும் (யோவா. 15:12, எபேசி. 5:25). அவர் மன்னித்ததுபோல, நீங்களும் மன்னிக்க வேண்டும் (எபேசி. 4:32). அவர் உலகத்தானல்லாததுபோல, நீங்களும் உலகத்தாரல்லாதவராக ஜீவிக்க வேண்டும் (யோவான் 17:16). அவர் அக்கினிமயமானவர்.

உங்களையும் அக்கினி ஜுவாலையாக மாற்றும்படி சித்தங்கொண்டிருக்கிறார் (எபி. 1:7). அவர் பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராய் விளங்க வேண்டும் (மத். 5:48).
உங்களை கனியுள்ளவர்களாக மாற்றுகிற ஜீவத் தண்ணீருள்ள நதியை நோக்கிப் பாருங்கள். அது இரண்டு இடங்கள் வழியாக கடந்து வருகிறது. முதலாவது, பரலோகத்தில் தேவனும், ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறது (வெளி. 22:1).
இரண்டாவது, அதே ஜீவநதி, விசுவாசியின் உள்ளத்திலிருந்து புறப்பட்டுச் செல்லுகிற ஆசீர்வாதமான ஆறு (யோவா. 7:37,38). பரவி, விரிந்துச் செல்லுகிற ஆறு அது. ஒரு இடத்திலே நிற்பதில்லை. “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்” (அப். 1:8). ஆம், ஜீவநதி எங்கெங்கே பரவிச் செல்லுகிறது, என்பதைக் கவனியுங்கள்.
தேவபிள்ளைகளே, நீங்கள் அபிஷேகம் பெறும்போது, கர்த்தர் உங்களைப் பெரிய ஜீவத் தண்ணீருள்ள நதியாக மாறப்பண்ணுகிறார். இந்த அபிஷேகம் உங்களுக்கு மட்டுமல்ல, ஆயிரமாயிரமான ஜனங்களுக்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும். ஆகவே இன்றைக்கு, நான் ஒருவருக்கும் ஆசீர்வாதமாய் இல்லையே, என் நாட்கள் வீணாக கழிந்துகொண்டிருக்கிறதே என்று கவலைப்பட்டுக் கலங்கலாம். ஆம், “அவர் கன்மலையைத் தண்ணீர் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்” (சங். 113:8).

பரிசுத்த ஆவியாகிய நதி உங்கள்மேல் வரும்போது, அவர் உங்களில் பெரிய ஆச்சரியமான மாற்றங்களைக் கொண்டு வருகிறார். அவர் கன்மலையை தண்ணீர் தடாகமாக மாற்றுகிறவர் அல்லவா? நிச்சயமாகவே, உங்களை மிகவும் பிரயோஜன மான ஆசீர்வாத நதியாக மேன்மைப்படுத்துவார்.

நினைவிற்கு:- “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப் போலச் செழிக்கும்” (ஏசா. 35:1).