விசுவாச நதி!

“வேதவாக்கியம் சொல்லுகிறபடி, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்” (யோவா. 7:38).

கர்த்தரை விசுவாசிக்கிறவனுடைய பெயர் விசுவாசி. விசுவாசிக்காவிட்டால் அவன் “அவிசுவாசி”. சிலரை, “அற்ப விசுவாசி” என்று வேதம் அழைக்கிறது. “ஆண்டவரே, உம்மை விசுவாசிக்கிறேன். என் விசுவாசம் வர்த்திக்கப்படும்படி செய்யும் என்று கேட்டுக்கொண்டேயிருந்தால், ஆவியின் கனியாகிய விசுவாசம் (கலா.5:22), உங்களில் காணப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது, கூடாத காரியம். ஏனென் றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிற வர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (எபி. 11:6).

எபி. 11-ம் அதிகாரம், பழைய ஏற்பாட்டிலுள்ள விசுவாச வீரர்களையும், வீராங் கனைகளையும் பட்டியலிட்டு குறிப்பிடுகிறது. முதல் பரிசுத்தவானாகிய ஆபேல், கர்த்தருக்குப் பிரியமான காணிக்கை எது? என்பதை தன்னுடைய உள்ளத்தை கர்த்தருடைய உள்ளத்தோடு பொருத்தி விசுவாசித்ததினால், அதைக் கண்டுபிடித் தார்.

இயேசு கிறிஸ்து, எப்படி தேவனுக்குப் பிரியமான ஆட்டுக்குட்டியைப் போல தன்னைத்தானே தந்தருளுவார், உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டியாயிருப்பார் என்பதை விசுவாசித்து, ஒரு ஆட்டைப் பலி செலுத்தினார்.

ஏனோக்கு, தன்னுடைய வாழ்க்கையில் கர்த்தரோடு இணைந்து ஒரு சிநேகிதனைப் போல விசுவாச நடை நடந்தார். இரண்டாம் வருகையிலே காணப்படாமல் எடுத்துக் கொள்ளப்படுகிற பரிசுத்தவான்களுக்கு முன் அடையாளமானார்.

விசுவாச வாழ்க்கை என்பது, சாக்குப்போக்கான வாழ்க்கையல்ல. கல்லும், முள்ளுகளும், கரடும், முரடும் நிறைந்த வாழ்க்கை. ஆனாலும் முற்பிதாவாகிய ஆபிரகாம், கர்த்தருடைய கரத்தைப் பிடித்துக்கொண்டு, தான் பார்த்திராத கானானை நோக்கி பயணம் செய்தார். “விசுவாசிகளின் தகப்பன்” என்று அழைக்கப்பட்டார்.

மார்ட்டீன் லூத்தர், ஒரு காலத்தில் கத்தோலிக்க சபையில் குருவானவராக இருந் தார். ஆனால் அங்குள்ள கொள்கைகள், வேத வசனத்துக்கு எதிராய் இருக்கிறதைக் கண்டபோது, எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்ல, Protestant என்ற இயக்கத்தை உருவாக்கி நடத்தினார். கர்த்தர் அவருக்கு கொடுத்த விசுவாச வார்த்தை என்ன? “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்பதேயாகும்.

தேவபிள்ளைகளே, கர்த்தரை விசுவாசத்தினாலே சார்ந்துகொள்ளுங்கள். “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத் ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார்” (2 தீமோத். 1:12) என்று முழங்கி சொல்லுங்கள். ஆம், நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களென்றால், வழுவாது உங்களைப் பாதுகாத்து, தம்முடைய மகிமையுள்ள சந்நிதானத்திலே மாசற்றவனாய் நிலைநிறுத்தியருளுவார்.

சாலொமோன், விசுவாசத்தோடு தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார். கர்த்தருக்கு மகிமையான ஆலயத்தைக் கட்டியெழுப்பினார். ஆனால் முடிவுபரியந்தம் தன்னுடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவில்லை. தேவபிள்ளைகளே, விசுவாச ஆறு உங்களில் ஓடுமானால், உங்களுடைய முடிவு மகிழ்ச்சியாயிருக்கும்.

நினைவிற்கு:- “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவை களின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சிபெற்றார்கள்” (எபி. 11:1,2).