பொற்பழங்கள்!

“ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை, எவ்வளவு நல்லது” (நீதி. 15:23).

உங்களுடைய வாயின் வார்த்தைகள் மேன்மையுள்ளதாகவும், பரிசுத்தமுள்ளதாக வும் இருந்தால், அதனால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எண்ணற்ற ஆசீர்வாதங்கள் உண்டு. அதே காரியத்தை சாலொமோன் ஞானி தொடர்ந்து சொல்லும்போது, “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை, வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்” என்று குறிப்பிட்டார் (நீதி. 25:11).
“இருதயத்தின் நிறைவினால், வாய் பேசும்.” இருதயத்தில் தேவன் இருப்பாரா னால், வேத வசனங்கள் நிறைந்திருக்குமானால், நீங்கள் சொல்லுகிற வார்த்தைகள் ஆவியானவரால் ஏவப்பட்ட வார்த்தைகளாய் இருக்கும். நிச்சயமாகவே, அந்த வார்த்தைகளை, கர்த்தர் கனம் பண்ணுவார்.
ஒரு ரயிலில், சில பயணிகள் பிரயாணம் செய்து கொண்டு வந்தார்கள். அதிலே ஒருவர் கிறிஸ்தவ மார்க்கத்தைக் கேலியும், பரியாசமுமாய் பேசிக் கொண்டு வந்தார். “கன்னியின் வயிற்றிலே தெய்வம் பிறந்ததாகக் கிறிஸ்தவர்கள் சொல்லுவது அபத்தமானது. கணவனை அறியாத கன்னிப் பெண்ணின் கருவறையிலே போய், கடவுள் உட்கார்ந்திருப்பாரா? எந்த முட்டாளும் அதை நம்ப மாட்டான்” என்றார் அந்த பரியாசக்காரர்.

அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு வாலிபப் பெண் இதைக் கேட்டாள், ஆண்டவரே, இந்த மனிதருக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்? சரியான மறுமொழியாக எனக்கு அதைக் கட்டளையிடும் என்று ஜெபித்து விட்டு, கேலியும் பரியாசமும் செய்து கொண்டிருந்த அந்த சகோதரனைப் பார்த்து, “ஐயா, உங்களுடைய புராணத்தில், தெய்வம் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று எழுதப்பட்டிருக்கிறதே. தூணிலும், துரும்பிலும் இருக்கக்கூடிய இறைவன், ஏன் ஒரு கன்னியின் வயிற்றில் இருக்க மாட்டார்? என்று கேட்டாள். பரியாசம் பண்ணினவர், தலைகுனிந்தார். தொடர்ந்து அந்த சகோதரி, அங்கு சுவிசேஷத்தை அறிவிக்க, அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.

ஆவியின் வரங்களிலே ஒன்று அறிவை உணர்த்துகிற வசனம். அடுத்தது, ஞானத்தை உணர்த்தும் வசனம். அறிவோடும், ஞானத்தோடும், தேவனுடைய வார்த்தைகளை பேசுவதற்கு, இந்த வரங்கள் நமக்கு மிகவும் பிரயோஜனமாய் இருக்கிறது. ஏசாயா தீர்க்கதரிசி தன் அனுபவத்தை எழுதும்போது,”இளைப்படைந்தவனுக்கு சமயத்துக் கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு கல்விமானின் நாவைத் தந்தருளினார். காலைதோறும் என்னை எழுப்புகிறார். கற்றுக் கொள்ளுகிறவர்களைப் போல நான் கேட்கும்படி, என் செவியைக் கவனிக்கச் செய்கிறார்” என்று குறிப்பிட்டார் (ஏசாயா 50:4).

தேவ பிள்ளைகளே, ஞானத்தோடு பேசுவதற்கு, ஞானமுள்ள இருதயத்தைக் கர்த்தரிடம் கேட்பீர்களா? சாலொமோன் ஞான ஆவியைக் கேட்டு, தெய்வீக ஞானத்தைப் பெற்றுக் கொண்டார் அல்லவா? ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது, அந்தக் கிருபையை பெற்று, ஞானமாய் இஸ்ரவேலரை அரசாண்டார் அல்லவா? சங்கீதங்களை இன்பமாய் பாடினார் அல்லவா? அதுபோலவே, கர்த்தர் உங்களுக்கும் அந்த ஞானத்தைத் தந்தருளுவார். அவரே பேதையை ஞானியாக்கு கிறவர். அவரே ஞானிகளை வெட்கப்படுத்தும்படி, பேதையர்களை பயன்படுத்து கிறவர்.

நினைவிற்கு:- “ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள் போலவும், சங்கத் தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள் போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது” (பிர. 12:11).