அன்பிலே நிலைத்திருங்கள்!

“நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” (யோவா. 15:10).

ஆவியின் கனிகளிலே முதல் கனியும், சிறந்த கனியுமாயிருப்பது அன்பாகும் (கலா. 5:22). “ஆவியின் கனியோ, அன்பு” என்று தான் ஆரம்பிக்கிறது. நீங்கள் கர்த்தருக் கென்று கனி கொடுக்க வேண்டுமென்றால், தேவனுடைய அன்பில் எப்பொழுதும் நிலைத்திருந்து, உங்கள் வாழ்வில், தெய்வீக அன்பை வெளிப்படுத்துங்கள்.

தூய்மையான, தியாகமான அன்பை, நீங்கள் இயேசு கிறிஸ்துவிலே காணலாம். பதிலுக்கு ஒன்றும் எதிர்பார்க்காத அன்பாயிருப்பதால், அந்த அன்பை “அகாப்பே அன்பு, தெய்வீகமான அன்பு” என்கிறார்கள். “இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16). தேவபிள்ளைகளே, தேவ அன்பின் நீளம், அகலம், உயரம், ஆழம் என்பவைகளை அறிந்து கொள்ளும்படி, உங்களுடைய இருதயத்தை கிறிஸ்துவின் பக்கமாய் திருப்புங்கள். அவர், தன்னண்டை வருகிற ஒருவரையும் புறம்பே தள்ளாதவர். அவரது அன்பு, உங்களை தேடிவந்த அன்பு. உளையான சேற்றிலிருந்து தூக்கியெடுத்த அன்பு, மார்போடு அணைத்த அன்பு. பாவங்களை அறிக்கையிட்டபோது, மன்னிக்க, தயவு பெருத்த அன்பு.

மட்டுமல்ல, அவருடைய அன்பு தெய்வீக சுபாவங்களை உங்களுக்குள் கொண்டு வருகிற அன்பு. அந்த அன்பினால் ஆவியின் வரங்களைத் தருகிறார், ஆவியின் கனிகளைத் தருகிறார். நீங்கள் தெய்வீக அன்பை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காக, பரிசுத்த ஆவியானவர் மூலம், அந்த அன்பை உங்களிலே ஊற்றியிருக்கிறார் (ரோம. 5:5).

ஒரு தேவ ஊழியரைப் பற்றி அறிந்தேன். அவர் பல நாட்கள் உபவாசமிருந்து, ஜெபித்து வரங்களையும், வல்லமையையும் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொண் டார். அவர் கூட்டம் நடத்தியபோது, அங்கே பலத்த அற்புதங்களும், அதிசயங்களும் நடந்தது. அதுவரை யாரும் கண்டிராத பெரும் எழுப்புதலை ஜனங்கள் கண்டார்கள்.

ஆனால் அவர் சென்ற வழியிலே, ஒரு குடிகாரன் எதிர்பட்டான். அவன் அவரை கிண்டல் செய்து, “யோவ் அல்லேலூயா சொல்லு” என்று கட்டாயப்படுத்தினான். போகப் போக அவன் தூஷித்த தூஷணம், போதகருக்கு கடும் கோபத்தை வருவித் தது. கிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியானவரையும் பரியாசம் செய்தபோது, அவர் தாங்க முடியாமல், குடிகாரனை அடி அடியென்று அடித்துவிட்டார். அவனோ, கையிலிருந்த பீர் பாட்டிலினால், ஊழியரைத் தலையில் தாக்கினான்.

சில நிமிடத்திற்குப் பிறகு போலீஸ் வந்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது காட்டுத் தீ போல எல்லா இடங்களிலும் பரவினதினால், கிறிஸ்துவின் நாமம் தூஷிக்கப்பட்டது. அவருடைய ஊழியமும் ஒழிந்து போனது. ஆகவே தான் அன்புக்கென்று அப். பவுல், 1 கொரி. 13-ம் அதிகாரத்தை எழுதினார். “நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்” (1 கொரி. 13:1).

தேவபிள்ளைகளே, ஆவியின் வரங்கள் எவ்வளவு முக்கியமோ, அவைகளை விட ஆவியின் கனிகள் முக்கியம். நீங்கள் அன்பிலே நிரம்பியிருந்தபின்பு வரங்களை செயல்படுத்த வேண்டும். வரங்கள், ஆத்தும ஆதாயம் செய்வதற்கும், சுவிசேஷம் அறிவிப்பதற்கும் பயன்படும். ஆனால் கனிகளோ, உங்களில் கிறிஸ்துவின் சுபாவத்தை கொண்டுவந்து, பரலோகத்தைப் பெற்றுத்தரும்.

நினைவிற்கு – “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோம. 5:8).